Tuesday, 30 June 2015

பெரும்பாணாற்றுப்படை பகுதி 6

இப்படிப் பல வண்டிகள்
பார்மரத்தோடு பார்மரம் என்று
கயிற்றால் கட்டப்பட்டதுதான்
பெருங்கயிற்று ஒழுகை
இது பல எருதுகளின் கூட்டு இழுவை
முன்வண்டியின் கயிறு
யானை இழுக்குமாறும் பூட்டப்பட்டிருந்தது
உமணனும் உப்பு வண்டியும்
பெருங்கயிற்று ஒழுகை 
(களிறு இழுக்கும் உமணர் வண்டி)
உமணர்களின் உப்பு வண்டியை வழித்துணையாகக் கொண்டு அவர்களுடன் சேர்ந்து செல்லலாம்.

  • வண்டியின் ஆரைக்கால்கள் (ஆரம்) வரால்மீனின் வற்றல் போல் இருக்கும்.
  • ஆரைக்கால் பொருந்தியிருக்கும் குடம் முழவு (= மத்தளம்) போல் இருக்கும்.
  • மாட்டு வண்டிக்கு மேல் அமைக்கப்படும் வண்டிக் கூட்டை அக்காலத்தில் ஆரை என்றனர். (ஆரை = அரைவட்டம்)
  • வண்டியின் பார்மரம் கோட்டைக்கதவை மூடும் குறுக்குத் தாழ்ப்பாள் [எழூஉ மரம்] போல் இருந்தது. 
கூடு குன்றின்மேல் படிந்திருக்கும் மழைமேகம் போலக் காணப்பட்டது.
அந்த வண்டி மண்ணை அறுத்துக்கொண்டு சென்றது.

  • வண்டிக்கூட்டின் புதவு (=உட்காரும் நிழலிடம்) யானைக்கு அதன் காவலர் வேய்ந்திருந்த கூரைபோல் இருந்தது.
  • வண்டிக் கூட்டின்மேல் கோழிக்குடும்பம் அமர்ந்திருந்தது (சேவல் அதிகாலையில் கூவி எழுப்புவதற்காகப் பயன்பட்டது போலும்.)
  • வண்டியின் பின்புறம் சிறிய மர உரல் கட்டித் தொங்க விடப்பட்டிருந்தது. (வண்டி பின்புறம் கவியாமல் இருக்க இது உதவும்.) அந்த உரல் பெண்யானையின் முழங்கால் போன்று உருவமும் உயரமும் கொண்டதாக இருந்தது.
பல வண்டிகள் ஒன்றன் பின் ஒன்றாக (=ஒழுகையாக)ப் பிணிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு வண்டியையும் இரண்டிரண்டு எருதுகள் இழுத்துச் சென்றன. எல்லா வண்டிகளும் ஒன்றாகப் பிணைக்கப்பட்டிருந்த வண்டி ஒழுகையைப் பல யானைகள் இழுத்துச் சென்றன.

  • உமணப் பெண்கள் வண்டியின்மேல் உட்கார்ந்துகொண்டு காளைகளை முடுக்கி வண்டியை ஓட்டினர். அவர்கள் தம் குழந்தைகளைக் காடித்துணித் தூக்குக் கயிற்று ஏணையில் தாங்கிக் கொண்டிருந்தனர்.
வண்டியின் நுக மையம் கயிற்றால் கட்டப்பட்டுப் பல ஆண்யானை ஒழுகையுடன் பிணிக்கப்பட்டிருந்தது. அவற்றின் மீது ஏறி அமர்ந்துகொண்டும் பக்கத்தில் நடந்துகொண்டும் உமணர்கள் யானைகளை ஓட்டினர்.

  • உமணர்கள் வேப்பந் தழைகளைக் கோத்துக் கட்டிய மாலைகளைத் தோள்களில் அணிந்திருந்தனர். அவர்களது தோள்கள் பருமனும் அழகும் கொண்ட விட்டம் (=எறுழ்) போன்றவை.
உணவைப் பதமாக்குவதால் உப்பு சில்பத உணவு என்று சிறப்பித்துப் பேசப்படுகிறது.

  • இப்படிப்பட்ட உமணர் ஒழுக்கையொடு நீங்களும் செல்லலாம்.
பாட்டு – சொல் பிரிப்புப் பதிவு
கொழுஞ் சூட்டு அருந்திய, திருந்து நிலை ஆரத்து, 
முழவின் அன்ன முழுமர உருளி,
எழூஉப் புணர்ந்தன்ன பரூஉக் கை நோன் பார்,
மாரிக் குன்றம் மழை சுமந்தன்ன,
ஆரை வேய்ந்த அறை வாய்ச் சகடம்    50
வேழம் காவலர் குரம்பை ஏய்ப்பக்
கோழி சேக்கும் கூடுடைப் புதவின்,    
முளை எயிற்று இரும் பிடி முழந்தாள் ஏய்க்கும்   
துளை அரைச் சீறுரல் தூங்கத் தூக்கி,  
நாடக மகளிர் ஆடு களத்து எடுத்த 55
விசி வீங்கு இன் இயம் கடுப்பக் கயிறு பிணித்து,  
காடி வைத்த கலனுடை மூக்கின் 
மகவுடை மகடூஉப் பகடு புறம் துரப்ப  
கோட்டுஇணர் வேம்பின் ஏட்டுஇலை மிடைந்த
படலைக் கண்ணிப் பரு ஏர் எறுழ்த் திணி தோள்,   60
முடலை யாக்கை, முழு வலி மாக்கள் 
சிறு துளைக் கொடு நுகம் நெறிபட நிரைத்த 
பெருங் கயிற்று ஒழுகை மருங்கில் காப்ப,   
சில் பத உணவின் கொள்ளை சாற்றி,  
பல் எருத்து உமணர் பதி போகு நெடு நெறி   65பெரும்பாணாற்றுப்படை பகுதி 5

இக்காலக் காவலர்
இளந்திரையன் ஆட்சியில் காவலர் என்ன செய்தனர் 
களவு-ஏர் வாழ்க்கை
அவனது நல்லாட்சியைப் பற்றிச் சொல்கிறேன் கேள்.
உன் உள்ளம் (ஊக்கம்) சிறக்கட்டும்.
அவல நிலை அழிந்து ஒழியட்டும்.
அவனது காவல் நிலத்தில் வழிப்போக்கர்களை அலரும்படி தாக்கி அவர்களிடமுள்ள பொருள்களை வழிப்பறி செய்யும் திருட்டு-உழவு இல்லை.
காரணம் அவனது காவலர்கள் வழிப்போக்கர்களுக்குத் துணைவருவர்.
இடி தாக்காது.
பாம்புப் பயம் இல்லை.
காட்டு விலங்குகளாலும் துன்பம் இல்லை.
எங்கும் தங்கலாம்.
எங்கும் பாதுகாப்பு.   
களைப்புத் தோன்றும்போதெல்லாம் விரும்பிய இடங்களில் தங்கலாம்.
பின்னர்த் தொடரலாம்.
பாட்டு – சொல் பிரிப்புப் பதிவு
கேள், அவன் நிலையே; கெடுக நின் அவலம்!
அத்தம் செல்வோர் அலறத் தாக்கி,
கைப் பொருள் வௌவும் களவு ஏர் வாழ்க்கைக்     40
கொடியோர் இன்று, அவன் கடியுடை வியன் புலம்;
உருமும் உரறாது; அரவும் தப்பா; 
காட்டு மாவும் உறுகண் செய்யா; 
வேட்டு, ஆங்கு, அசைவுழி அசைஇ, நசைவுழித் தங்கி,   
சென்மோ, இரவல! சிறக்க நின் உள்ளம்! 45


பெரும்பாணாற்றுப்படை பகுதி 4

திருமால் கையில்
வலம்புரிச் சங்கம்
திரையன் திருமாலின் வலம்புரிச் சங்கம் போன்றவன்
அவன் திரையர் குடியில் தோன்றிய திரையன்.
பலவகையான வேல்களைப் பல்வேறு விசைப் பாங்குகளில் வீசக்கூடியவன்.
அவன் திருமாலின் பிறங்கடை (வாரிசு).
திருமால் நிலத்தைக் கடந்தவர்.
செல்வத் திருமகள் அமர்ந்து மணம் வீசும் மார்பினை உடையவர்.
கடல் நிறத்தில் காட்சி தருபவர்.
கடலின் திரையில் (அலையில்) மிதந்து வந்து அரசுக்கட்டில் ஏறிய அரச மரபினரின் கால்வழியினர் திரையர் எனப்பட்டனர்.
அம்மரபில் வந்தவர்களில் உயர்ந்தோங்கிய யானை போன்றவன், இந்தத் தொண்டைமான் இளந்திரையன்.
(தொண்டைமான் இளந்திரையன் கடலில் தொண்டைக் கொடியுடன் மிதந்து வந்தான் என்னும் கதைக்குத் தளப்பகுதி இது)
உலகிலுள்ள உயிரினங்களைக் காக்கும் மூவேந்தர்களைச் சங்கு என்றால் இந்த இளந்திரையன் அச் சங்குகளிலே சிறந்து விளங்கும் வலம்புரிச் சங்கு போன்றவன்.
மறப்போரை விலக்கிவிட்டு அறத்தை மட்டுமே செய்யும் செங்கோல்தான் அவன் ஆட்சி.
நீங்களும் அவனை நினைத்துக்கொண்டு செல்லுங்கள்.
(வறுமை தீரும் வளங்களைப் பெறலாம்).

பாட்டு – சொல் பிரிப்புப் பதிவு

இரு நிலம் கடந்த திரு மறு மார்பின்  
முந்நீர் வண்ணன் பிறங்கடை, அந் நீர்த் 30
திரை தரு மரபின், உரவோன் உம்பல், 
மலர் தலை உலகத்து மன் உயிர் காக்கும்   
முரசு முழங்கு தானை மூவருள்ளும்,  
இலங்கு நீர்ப் பரப்பின் வளை மீக்கூறும்
வலம்புரி அன்ன, வசை நீங்கு சிறப்பின், 35
அல்லது கடிந்த அறம் புரி செங்கோல், 
பல் வேல் திரையற் படர்குவிர் ஆயின் 


பெரும்பாணற்றுப்படை பகுதி 3

இக்காலத்தில் யானைமீது உலா
அக்காலத்தில் திரையன்
புலவர் உருத்திரங்கண்ணனார்
குடும்பத்தை இவ்வாறு
யானைமீதும் குதிரைமீதும்
ஏற்றி அனுப்பிவைத்தான். 
ஆற்றுப்படுத்தும் புலவர் தான் பெற்றுவந்த செல்வ வளம் பற்றிக் கூறுகிறார்.
நான் காஞ்சி நகரிலிருந்து வருகிறேன்.
அந்நகர்த் தலைவன்  (தொண்டைமான் இளந்திரையன் ) நல்கிய பெருஞ்செல்வத்தோடு வருகிறேன்.
நிலம் வறண்டு கிடக்கும் காலத்தில் கருமேகத் தொகுதி இடியுடன் கூடிய பெருமழை பொழிந்தது போல அவன் எங்களுக்குப் பல செல்வ வளங்களை நல்கியுள்ளான்.
அவற்றைக் குதிரைகள்மீதும், யானைகள்மீதும் ஏற்றிக்கொண்டு வருகிறேன்.
நான் மட்டும் அன்று.
எனது சுற்றத்தாரின் பெருங்கூட்டமும் யானைமீதும், குதிரைமீதும் வந்துகொண்டிருப்பதைப் பார்.


பாட்டு – சொல் பிரிப்புப் பதிவு

பெரு வறம் கூர்ந்த கானம் கல்லெனக் 
கருவி வானம் துளி சொரிந்தாங்கு,
பழம் பசி கூர்ந்த எம் இரும் பேர் ஒக்கலொடு 25
வழங்கத் தவாஅப் பெரு வளன் எய்தி,  
வால் உளைப் புரவியொடு வயக் களிறு முகந்துகொண்டு,
யாம் அவணின்றும் வருதும் நீயிரும்,


பெரும்பாணற்றுப்படை பகுதி 2

பாணன்
ஆற்றுப்படுத்தும் புலவர் பாணனே கேள் என்று கூறத்தொடங்குகிறார்.
உன் உடம்பு புல்லின் துரும்பு போல இளைத்துள்ளது.
இந்த நிலையில் உன் சுற்றத்தாரோடு கால்போன பக்கமெல்லாம் திரிகிறாய்.
உன் வாயிலிருந்து புலவு வாடை வருகிறது. உண்ண உணவு இல்லையே என்று பல்லைக்கூடத் துளக்க மறந்துவிட்டாய் போலும்.
ஞாயிறும் திங்களும் வலம் வந்து கொண்டிருக்கும் கடல் சூழ்ந்த இந்த உலகத்தில் உன்னையும். உன் குடும்பத்தையும் தாங்கிப் பாதுகாக்கக்கூடியவர் யார் என்று தெரியாமல் திரிந்து கொண்டிருக்கிறாய்.
பழுத்திருக்கும் மரத்தைத் தேடும் பறவைகள் போல் அலைகிறாய்.
மழை பெய்யாமல் மழையைப் போலப் புகைமூட்டம் போட்டிருக்கும் மலைகளில் உள்ள மரங்கள் பழம் தருமா?
திரிய வேண்டா.
இதோ நான் சொல்வதைக் கேள்.

பாட்டு – சொல் பிரிப்புப் பதிவு

வெந் தெறல் கனலியொடு மதி வலம் திரிதரும்   
தண் கடல் வரைப்பில், தாங்குநர்ப் பெறாது,  
பொழி மழை துறந்த புகை வேய் குன்றத்துப் 
பழுமரம் தேரும் பறவை போல,  20
கல்லென் சுற்றமொடு கால் கிளர்ந்து திரிதரும்    
புல்லென் யாக்கைப் புலவு வாய்ப் பாண!


பெரும்பாணாற்றுப்படை பகுதி 1

யாழ் உறுப்புக்கள் 
இசைவாணனை அக்காலத்தில் பாணன் என்றனர். பாணனது குடும்பத்திலுள்ள அனைவரும் இசைத்தமிழை வளர்ப்பதில் இன்பம் கண்டனர். வறுமைக் காலத்தில் அவர்களது பிழைப்பே இசையால்தான் நடந்துவந்தது. பேரியாழ் மீட்டுபவன் பெரும்பாண். பொரும்பாணன் தொண்டைமானிடம் ஆற்றுப்படுத்தப்படுகிறான். அவன் தன் யாழை இடப்பக்கத் தோளில் மாட்டிக்கொண்டு செல்கிறான். அவனது யாழின் உறுப்புக்கள் எப்படி இருந்தன என்பதை இந்தப் பகுதி காட்டுகிறது.
கேள்வி (யாழ் )
நாம் எடுத்துக்கொண்ட பாடலில் கூறப்படும் பாணன் தனது யாழை இடப்பக்கம் தொங்கவிட்டுக் கொண்டிருந்தான். பாடல்களைப் பாடும்போது இசையைத் தொடுத்தமைத்துக் கேட்கச் செய்வதால் யாழைத் தொடையமை கேள்வி என்றனர்.
வயிறு
பாதிரிமரம் வேனில் காலத்தில் தன் பசுமையான இலைகள் உதிர்ந்து போய் பூத்துக் குலுங்கும் காட்சி யாழின் வயிற்றுப் பகுதியில் வரையப்பட்டிருந்தது.
வேனில் காலத்தின் மலர்ச்சியைக் காட்டிக் கொண்டு தொடங்கும் இந்தப் பாடல் பாணன் வாழ்வும் மலரப் போவதைக் குறிப்பால் உணர்த்துகின்றது.
அகன்ற பெரிய விசும்பு. அதில் பாய்ந்து கொண்டிருந்த இருளை யெல்லாம் குடித்துவிட்டுப் பகலை வீசிக்கொண்டு பல்கதிர் பருதி எழுந்து கொண்டிருந்த வேனில் காலம் அது.
கதிரவனின் வாயில் சினம். அது பாதிரியின் இலைகளை உதிர்த்தது. ஆனால் அதில் மலர்ந்த பூக்கள் வெயிலின் சின வலிமையைத் திருகி வீசி எறிந்து கொண்டிருந்தன. பாதிரிப்பூ பெரியது. வளமான இதழ்களைக் கொண்டது.
கண்கூடு செறிதுளை
பாக்குப் பாளையின் இளம்பூக்கள் கருவிலிருந்து வெளிவருவதுபோல் யாழின் நரம்புக்கண் கூடும் துளைகள் நரம்புகளால் முடுக்கப்பட்டிருந்தன.
அடி
பருத்திருக்கும் பச்சைப் பாக்குமரம் போல மீட்டும்போது யாழ் குந்தும் அடிப்பகுதி இருக்கும் போலும்.
போர்வை
உருகிய நீர்மம் பொருளோடு பொருந்தி வழிவது போல் யாழின்மீது போர்த்தப்பட்டிருந்த போர்வை யாழின் உருவத்தைப் புலப்படுத்துவது போல் அதன்மீது படிந்து கிடந்தது.
வறுவாய்
அதன் திறந்த வாயானது நீர் இல்லாமல் வறண்டுபோன சுனைபோல இருண்டு காணப்பட்டது.
சவைக்கடை
காய்ந்து போயிருந்த அதன் வளைவுத் தண்டு பிறந்த நாளில் தெரியும் பிறை நிலாவைப் போல வளைந்திருந்தது.
திவவு
நீண்ட மூங்கில்போல் திரண்டிருக்கும் தோளையுடைய பருவப் பெண்ணின் முன்கையில் இருக்கும் வளையல்களைப் போல யாழின் திவவுப் பூண்கள் அமைந்திருந்தன.
நரம்பு
மணியை நீட்டி வைத்தாற் போல நரம்பைக் கட்டும் அதன் சிற்றாணிக் குச்சிகள் யாழில் செருகப்பட்டிருந்தன. முறுக்கு இல்லாமல் பொன்னில் நீட்டிய கம்பி போன்ற நரம்புகள் யாழில் தொய்வு இல்லாமல் இறுக்கிக் கட்டப்பட்டிருந்தன.

பாட்டு – சொல் பிரிப்புப் பதிவு

அகல் இரு விசும்பில் பாய் இருள் பருகி,    
பகல் கான்று, எழுதரு பல் கதிர்ப் பருதி
காய் சினம் திருகிய கடுந் திறல் வேனில்,   
பாசிலை ஒழித்த பராஅரைப் பாதிரி    
வள் இதழ் மா மலர் வயிற்றிடை வகுத்ததன் 5
உள்ளகம் புரையும் ஊட்டுறு பச்சை;    
பரியரைக் கமுகின் பாளை அம் பசும் பூக்    
கரு இருந்தன்ன, கண்கூடு செறி துளை;
உருக்கியன்ன, பொருத்துறு போர்வை;  
சுனை வறந்தன்ன, இருள் தூங்கு வறுவாய்;   10
பிறை பிறந்தன்ன, பின்ஏந்து கவைக்கடை;   
நெடும் பணைத் திரள் தோள் மடந்தை முன்கைக்  
குறுந்தொடி ஏய்க்கும், மெலிந்து வீங்கு திவவின்;  
மணி வார்ந்தன்ன, மா இரு மருப்பின்; 
பொன் வார்ந்தன்ன புரி அடங்கு நரம்பின்     15
தொடை அமை கேள்வி இட வயின் தழீஇ,  Monday, 29 June 2015

பெரும்பாணாற்றுப்படை தொகுப்புச் செய்தி

காஞ்சி வரதராசப் பெருமாள் கோயில்
இது பல்லவர் காலத்துக் கோயில்
இந்தப் பாடலில் கூறப்படும் கோயில் மூலவர் பகுதி மட்டுமே
தொண்டைமான் இளந்திரையனைக்
கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடிய பாட்டு

செய்தியின் இறுதியில் குறிக்கப்பட்டுள்ள எண்
செய்தியைக் கொண்ட பாடல் பகுதி
எந்த அடியோடு முடிகிறது என்பதைக் குறிக்கும்.


1.   வேனில் காலத்தில் பெரும்பாணன் அலைகிறான். வயிறு, பச்சை, கண்கூடு செறிதுளை, போர்வை, வறுவாய், கவைக்கடை, திவவு, புரியடங்கு நரம்பு ஆகிய உறுப்புக்களைக் கொண்ட பேரியாழைத் தன் இடப்பக்கம் தழுவிக்கொண்டு அலைகிறான். – 16
2.   ஆற்றுப்படுத்தும் புலவர் கூறுகிறார். புலால் வாடை வீசும் வாயோடு தாங்குவாரைத் தேடித் திரியும் பாணனே, கேள். - 22
3.   நான் வள்ளல் ஒருவனிடம் செல்வ வளம் பெற்றுக்கொண்டு வருகிறேன். - 28
4.   அவன் ‘பல்வேல் திரையன்’ - 37
5.   அவன் நாட்டில் திருட்டுப் பயம் இல்லை. காட்டு விலங்குகளும் துன்புறுத்துவதில்லை. - 45
6.   அவனிடம் செல்லும்போது உப்பை வண்டியில் ஏற்றிக்கொண்டு விற்பதற்காகச் செல்லும் உமணரின் வழித்துணையை நீங்கள் பெறலாம். - 65
7.   உல்குவரி (சுங்கவரி) வாங்கும் காவலரும் உங்களுக்கு உதவியாக இருப்பர். – 82
8.   வழியில், வாயில் மணப்புல்லை அடக்கிக்கொண்டிருக்கும் எயிற்றியர் நெல்லைக் குற்றிப் பொங்கலிட்டுத் தேக்கிலையில் படைப்பாள். வாடாத் தும்பை சூடிய வயவர் பெருமகன், செவ்வரை நாடன் என் தலைவன் என்று சொன்னாலே போதும். பொங்கல் விருந்து கிடைக்கும். - 105
9.   எயினர் காட்டுப்பன்றியை வேல் வீசி வேட்டையாடுவர். கிடைக்காவிட்டால் முயலை வேட்டையாடுவர். கிடைத்தவற்றை பலரும் கடந்து செல்லும் வழியில் பங்கு போட்டுக்கொள்வர். – 111
10. எயினர் ஊருக்குச் சென்றால், செந்நிற அரிசிச் சோறும், முள்ளம்பன்றி, உடும்பு போன்றவற்றின் கறிக்குழம்பும் பெறலாம். - 133    
11. மறம் பூண்ட வாள்குடி மகளும் காளையும் வாழும் இருப்பிடங்களுக்குச் சென்றால், இல்லத்தில் காய்ச்சிய இனிக்கும் தோப்பிக் கள்ளைப் பருகலாம். அவர்கள் ஏறு தழுவி விளையாடும் காளைப்போரைக் கண்டு மகிழலாம். - 147
12. அடுத்து, குறும்பை ஆடும் வெள்ளாடும் கட்டி எரு மண்டிக் கிடக்கும் இடத்தில் தோலின் மேல் உறங்கும் இடையன் இருப்பிடத்துக்கு விடியலில் செல்லுங்கள். - 155
13. வெண்ணெய் விலையாகப் பொன்னைப் பெறாமல் பசு, எருமைக் கன்றுகளை விலையாகப் பெறும் ஆய்மகள் நண்டுக்கண் போன்ற தினைச்சோறும், பாலும் தருவதை அங்குப் பெறலாம். - 168
14. காலிலே தோல்-செருப்பு, கையிலே தடி, தோளிலே உறி, தலைமயிரில் பால், பூ, இடுப்பில் மட்டும் ஒரே ஒரு ஆடை ஆகியவற்றை உடைய இடையன் தான் உண்ணும் கூழைத் தருவான். – 175
15. அவன் தானே துளையிட்டுச் செய்துகொண்ட குழலை விரல்களால் தடவி ஊதுவான். அதனை விலங்கினம் மெய்ம்மறந்து கேட்கும். நீங்களும் கேட்கலாம். – 184     
16. அடுத்து, யானைக்கால் போன்ற பருத்த பந்தற்கால் நட்டுக் கருக்கட்டான் புல் வேய்ந்த சுவர்க் கொட்டகையில் கலப்பை சாத்தப்பட்டிருக்கும் இடத்தை அடைவீர்கள். – 191
17. அங்கு, பூளாப்பூ போன்ற வெண்ணிற வரகரிசிச் சோறும், அவரைக்காய்க் குழம்பும் பெறலாம். – 196
18. அது எருது பூட்டி ஏர் உழும் புன்செய்நில உழவர் வாழும் நிலம். காடைப்பறவை விளையாடும் அந்த நிலத்தைக் கடந்து செல்வீர்கள். – 206
19. அடுத்து, நன்செய் உழவர் வாழும் இடங்களில் பழையசோறு பெறலாம். – 224
20. அங்கே அவல் இடிக்கும் உலக்கை ஒலி கேட்டு கிளிகள் அஞ்சிப் பறப்பதைக் காணலாம். – 227 
21. உழவர் நெல் அறுத்துக் கட்டுகளைக் களத்திற்குக் கொண்டுவந்து அடுக்குவர். – 333
22. களத்தில் ஏற்றிய நெல்லை அடித்து தாளின் மேல் எருது பூட்டிப் பிணையல் அடிப்பர். நெல்லையும் வைக்கோலையும் பிரித்தெடுத்து நெல்லை மேலைக்காற்றில் தூற்றுவர். தூற்றிய நெல்லைக் களத்தின் வடக்குப்பக்கத்தில் குவிப்பர். அது பொன்மலை போலத் தோன்றும். இத்தகைய வயல்வெளி ஊர்களைக் கடந்து செல்வீர்கள். – 242
23. அங்கே கவட்டைக்கால் நட்டுப் பந்தல் போட்டு அதன் மேல் நெல்லைச் சேமிக்கும் குதிர்க்கூடுகள் இருக்கும். அங்கு, தச்சன் செய்து தந்த வண்டியை உருட்டிக்கொண்டு உழவர் மக்கள் விளையாடுவர். – 249
24. வண்டி உருட்டி விளையாடிய சிறுவர் அந்தக் களைப்புத் தீரத் தாயிடம் பால் அருந்துவர். – 252
25. அங்குள்ள வீடுகளில் வீடுகளில், வளர்ப்புப் பெட்டைக்கோழிக் கறியை வாட்டித் தருவார்கள். – 256
26. வயல்வெளிகளில் கரும்புச்சாறு பிழியும் எந்திரத்தின் ஒலியானது, யாளி தாக்கும்போது யானைக் கூட்டம் முழங்குவது போலக் கேட்கும். கரும்புச் சாற்றைக் காய்ச்சுவர். பிழிந்த கரும்புச்சாற்றை வேண்டிய அளவு பருகலாம். – 262   
27. அடுத்து, குளத்தில் மீன் பிடித்து வாழும் வலைஞர் குடியிர்ப்புகளை அடைவீர்கள். – 274
28. அங்கு முனை முறியாத அரிசியில் வைத்த அரிசிக் கஞ்சியைச் சுட்ட மீனோடு பெறலாம். – 282
29. அங்கே, பாண்மகன் தூண்டிலிலிருந்து உயிர் தப்பிய வாளைமீன் நீரில் விழுந்திருக்கும் பிரம்புச் செடியின் நிழலைக் கண்டு அஞ்சி நடுங்குவதைப் பார்க்கலாம். – 288    
30. அந்தக் குளத்தில் பூத்திருக்கும் பல வகையான மலர்களில் கடவுளுக்குப் பூசை செய்யப் பயன்படும் தாமரைப் பூவை மட்டும் விலக்கிவிட்டு மற்றவற்றைக் கட்டி விழாக் காலங்களில் அணிந்துகொள்ளுங்கள். – 296
31. அந்த ஊரில் மறைகாப்பாளராகிய அந்தணர் வீடுகளில் வீட்டுக் கோழியோ, நாயோ இருக்காது. அவர்கள் வளர்க்கும் கிளி அவர்கள் சொல்லும் மந்திரங்களைச் சொல்வதைக் கேட்கலாம். – 301
32. அந்த வீடுகளில் வடமீன் போன்ற கற்புடைய பெண் நெய்யில் பொறித்த வடவம், கறிவேப்பிலை போட்டுத் தாளித்த மாதுளம் பிஞ்சு மோர்க்குழம்பு, மாவடு ஊறுகாய் ஆகியவற்றுடன் அளிக்கும் உணவினைப் பெறலாம். – 310 
33. அங்கு நீர்ப்பெயற்று (கடல்மல்லை) என்னும் துறைமுகம் இருக்கும். அங்குள்ள கடல்மணலில் மகளிர் வண்டல் விளையாடுவர். அப்போது பொன்னணிகளைக் கழற்றி வைத்துவிட்டு நீராடுவர். அங்கு மேயும் மீன்கொத்திப் பறவை அந்தப் பொன்னணியை இரை என்று கருதிக் கொத்தும். இரை இல்லாதது கண்டு பயந்து ஓடும். தான் வாழும் பனைமரத்துக்குச் செல்லாமல் அந்தணர் வேள்வித் தூணின் உச்சியில் போய் அமரும். அது அமர்ந்திருக்கும் காட்சி அன்ன-விளக்குப் போல் தோன்றுவதைக் காணலாம். 
34. அங்கே குதிரைகளையும், வடநாட்டிலிருந்து கொண்டுவந்த செல்வக் குவியல்களையும் பார்க்க முடியுமே ஒழிய, நிலம் உழும் எருதுகளையோ, கறவை மாடுகளையோ பார்க்க முடியாது. பரதர் என்னும் கடல்வாணிக மக்கள் வாழும் தெருக்களில் ‘சிலதர்’ எனப்படும் காவலாளிகள் காவல் புரிவர். – 326
35. அங்கு, பரதர் மகளிர் பூத்துக்குலுங்கும் கொன்றைமலர் போல் பொன்னணி குலுங்க, மாடிகளில், மயில் போல் ஓடியாடி வரிப்பந்து (கீழே விழாமல் கைகளால் தட்டும் பந்து) விளையாடுவர். பின் முத்துக்கள் கொட்டிக்கிடக்கும் கடல்மணல் வெளியில் பொன்னால் செய்த கழங்குகளை வைத்துக்கொண்டு விளையாடுவதைக் கண்டு இளைப்பாறலாம். – 336  
36. இங்கு நெல்லஞ்சோறும் பன்றிக்கறிக் குழம்பும் விருந்தாகப் பெறலாம். – 345
37. அங்குள்ள கலங்கரை விளக்கத்தைக் கடந்து செல்லுங்கள். – 351
38. அடுத்து மஞ்சள் வயல் சூழ்ந்துள்ளதும், தென்னங்கீற்றால் வேயப்பட்டதுமான உழவர் வீடுகளை அடைவீர்கள். – 355 
39. அங்குப் பலாச்சுளை, இளநீர், வாழைப்பழம், நுங்கு முதலான பல உணவுப்பண்டங்களைப் பெறலாம். அவற்றை உண்டு சலித்துவிட்டால் பனங்கிழங்கும் பெறலாம். - 361
40. வழியில் பாக்குக் குலைகளும் தென்னங்குலைகளும் விழும். கவனமாகச் செல்லவேண்டும். – 367
41. இப்படி ஓங்கி உயர்ந்த மரங்கள் கொண்ட நாடுகள் பலவற்றைக் கடந்து செல்லவேண்டும். – 371
42. அங்கே, காந்தள் பூவில் களிறு படுத்திருப்பது போலப் பாம்பு மெத்தையில் திருமால் படுத்திருக்கும் கோயில் உள்ள சோலையை அவீர்கள். – 374
43. காஞ்சி மரங்கள் மிருந்த ஊர் காஞ்சிபுரம். கூவியர் அரசனுக்குக் கவரி வீசுவது போலப் பால் கொண்ட இலைக்கொடி சுற்றிக்கொண்டிருக்கும் காஞ்சி மரங்கள் அவை. வருபவர்களுக்கெல்லாம் நீலநீர் வழங்கும் இருப்பிடங்களை அது கொண்டது. – 383
44. அங்கு வாழும் மகளிரொடு பகலெல்லாம் விளையாடலாம். – 387
45. அங்கு வானுலகம் போல் மக்கள் திளைக்கும் விழாவில் கலந்துகொண்டு அங்குள்ள கடவுளை வாழ்த்துங்கள். உங்களது யாழை மீட்டி இசைக்கருவிகளை முழக்குங்கள். – 392
46. அங்கே, யானைக்கு நெய் உற்றி மிதித்த சோற்றுக் கவளங்களை ஊட்டிக்கொண்டிருப்பர்.
47. தெருவில் தேர் சென்ற பள்ளம் இருக்கும். அங்குள்ள மக்கள் வாயிலில் நின்றுகொண்டு கொடை வழங்குவர். பிறரிடம் வாங்கிக்கொண்டுவந்து வந்தவர்களுக்கு வழங்குவர். - 401
48. திருமாலின் கொப்பூழில் பிரமன் தோன்றும் நிலை போலக் காஞ்சி நகரில் அரண்மனை விளங்கும். – 404  
49. காஞ்சி விழாக்கோலம் பூண்டிருக்கும் பழமையான ஊர். - 411
50. நூற்றுவரை வென்ற ஐவர் போலப் பகைவரை வென்று கச்சி நகரில் வீற்றிருப்பவன் கைவளம் பெற்ற வள்ளல் திரையன். - 420
51. அவன் நண்பர்களை அளித்துக் காப்பவன். பகைவர்களை அழித்துத் தொலைப்பவன். - 428
52. கங்கை ஆற்றில் ஒரே ஒரு படகு இருந்தால் அதற்காகக் காத்திருப்பவர்கள் போல திரையனுக்குத் திறை செலுத்துவதற்காக மன்னர்கள் அவன் வாயிலில் காத்துக் கிடப்பர். – 435
53. கொல்லன் இரும்படிக்கும் ஒலியைக் கேட்டு, பொன் தூங்கும் அவன் அரண்மனையில் வாழும் மாடப்புறாக்கள் தூக்கமில்லாமல் கிடக்கும். – 440
54. முறை வழங்கும்படி வேண்டுபவர்க்கும், குறை தீர்க்கும்படி வேண்டியவர்களுக்கும் அவர்கள் விரும்பியதை வழங்கிக்கொண்டு கீழைக்கடலில் தோன்றும் ஞாயிறு போல அவன் தன் ஆட்சிச் சுற்றத்தாரோடு அரண்மனையில் அவன் விளங்குவான். – 447
55. தொண்டைநாட்டுத் தோன்றலே, மள்ளருள் மள்ளனே, மறவருள் மறவனே, செல்வருள் செல்வனே, நெடிது வாழிய! என்றெல்லாம் அவனை வாழ்த்துங்கள். வணங்குங்கள். – 464
56. புத்தாடை, விருந்துணவு, பொற்றாமரை விருது, நெல், குதிரைகள் முதலானவற்றை வழங்குவான். குழந்தைக்கு ஊட்டுவது போல வற்புறுத்தி வழங்குவான். நான்கு குதிரை பூட்டிய தேரில் வழங்கியவற்றையும், உங்களையும் ஏற்றி அனுப்பிவைப்பான். அன்றே வழங்கி அனுப்பிவைப்பான். – 493
57. காட்டு யானைகள் கொண்டுவந்த விறகில் தீ மூட்டி முனிவர்கள் வேள்வி செய்யும் மலைநாட்டுக்கு அவன் தலைவன். – 500Saturday, 27 June 2015

பெரும்பாணாற்றுப்படை வள்ளல் புலவர்

பத்துப்பாட்டு பாடல் அடிகள்
பெரும்பாணாற்றுப்படை 
500 அடிகள் கொண்ட 
ஆசிரியப்பாவால் ஆன நூல்.

பெரும்பாண்
பேரியாழ் மீட்டுபவன் பெரும்பாண். பேரியாழ் 21 நரம்புகள் கொண்டது.
இளந்திரையன்
காஞ்சிபுரத்தில் இருந்துகொண்டு தொண்டைநாட்டை ஆண்ட மன்னன் தொண்டைமான் இளந்திரையன். அவனைப் பாடிப் பரிசில் பெற்றுவந்த புலவர் பெரும்பாணனை அந்த அரச வள்ளலிடம் சென்று பரிசில் பெற்று வறுமையைப் போக்கிக்கொள்ளுமாறு ஆற்றுப்படுத்துவது பெரும்பாணாற்றுப்படை என்னும் இந்த நூல்.
உருத்திரங்கண்ணனார்
இந்த நூலைப் பாடிய புலவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார். உருத்திரங்கண் என்பது சிவபெருமான் கண். முருகனை உருவாக்கியது, முப்புரம் எரித்தது, காமனை எரித்தது போன்ற கதைச்செய்திகளை எண்ணி இக்கண்ணுக்கு இப்பெயரை வழங்குகின்றனர். இந்தக் கண்ணுறுப்பால் பெற்ற பெயர் உறுத்திரங்கண்ணனார். உருத்திரன் = சிவன். கண்ணன் = திருமால் இருபெருந் தெய்வங்களின் பெயர்களையும் இணைத்துக்கொண்ட பெயர் உருத்திரன்+கண்ணனார் என எண்ணுவதும் ஒன்று.  
கடியலூர்
புலவர் கடியலூரில் வாழ்ந்தவர். கெடிலம் என்னும் ஆறு பாயும் ஊர் கடியலூர் போலும். கடியலூர் கடலூர் என மறுவிற்று ஆகலாம்.


புறநானூறு Purananuru 400


சோழன் நலங்கிள்ளி மகிழ்ச்சி-உலா செல்லும் தன் கப்பல்களை [கலிவங்கம்] ஆற்றுக் கழிமுகத்தில் நாட்டப்பட்டுள்ள வெற்றி-வேள்வித் தூண்களில் கட்டி நிறுத்துவான். 
பகையை ஒழிப்பது அவன்தன் கடமை. 
இவன் பிறரது பசிப்பகையையும் ஒழித்துக்கட்டுகிறானே!


என் இசைக் கருவியை இசைக்கும் மரபுப்படி முழக்கினேன். 
அது 15 நாள் வளர்ந்து நிறைவுள்ள நிலாவைப் போல இருந்தது.


இரவுக் காலத்தின் கடைசி நேரம். 
பலரும் உறங்கிக்கொண்டிருந்தனர். 
அவன் (நலங்கிள்ளி) மட்டும் உறங்கவில்லை. 
உலகைக் காக்கவேண்டிய பொறுப்பு அவனிடம் இருக்கிறதே. 

அவன் என் இசையைக் கேட்டான். 
அவன்தான் என் தலைவன். 
நான் முழக்கியது ‘தெண்’-ஒலி எழுப்பும் கிணை. 

அதன் ஒலியைக் கேட்டது முதல் அவனது வேட்கை தணியாமல் [தண்டாது] பெருகிற்று. 

நான் அணிந்திருந்த பழையதாகிக் கிழிந்துபோன என் ஆடையைக் களைந்துவிட்டுப் புத்தாடை உடுக்கச்செய்தான். 

அவன் தந்த கலிங்க நாட்டுப் புத்தாடை என் இடையில் இருப்பதைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தான். 

பன்னாடை நாரில் வடிகட்டிய தேறலைப் பருகச்செய்து மகிழ்ந்தான். 
பிறகு பொழுது போவதே தெரியவில்லை. 
ஊர் மக்களோடு பழகவும் இல்லை.


தன் பகையைப் போக்கிக்கொள்வது அவன் கடமை. 
அத்துடன் பிறரது பசிப்பகையையும் போக்குபவனாகத் திகழ்கிறான்.


மறவர் மகிழ்ச்சி கொள்ளும் [மலிந்த] வேள்வித்தூண் \\ போர் வெற்றி
கேள்வி (வடமொழி) ஓதும் வேள்வித்தூண் 
அவை அவன் நாட்டு நீர்த்துறைகளில் இருந்தன. 

கடலிலிருந்து ஆற்றிலுள்ள தெளிந்த நீரைச் சீத்துக்கொண்டு வந்த வங்கக் கப்பல்களை அவன் அந்த வேள்வித் தூண்களில் கட்டி நிறுத்துவான். 

கட்டி நிறுத்தும் புதுப்பொருள் வரவு மிக்க ஊர் (காவிரிப்பூம்பட்டினம்) அவன் ஊர்.

பழந்தமிழ்
மகிழ்தூங்குந்து = மகிழ்ச்சி ஊசலாடும்.


பாடல் – சொல் பிரிப்புப் பதிவு

மாக விசும்பின் வெண் திங்கள்
மூ ஐந்தான் முறை முற்ற,
கடல் நடுவண் கண்டன்ன என்
இயம் இசையா, மரபு ஏத்தி,
கடைத் தோன்றிய கடைக் கங்குலான்     5
பலர் துஞ்சவும் தான் துஞ்சான்,
உலகு காக்கும் உயர் ..........க்
கேட்டோன், எந்தை, என் தெண் கிணைக் குரலே;
கேட்டதற்கொண்டும், வேட்கை தண்டாது,
தொன்று படு சிதாஅர் மருங்கு நீக்கி,    10
மிகப் பெருஞ் சிறப்பின் வீறு.......
...........................................................லவான
கலிங்கம் அளித்திட்டு என் அரை நோக்கி,
நார் அரி நறவின் நாள் மகிழ் தூங்குந்து;
போது அறியேன், பதிப் பழகவும்,            15
தன் பகை கடிதல் அன்றியும், சேர்ந்தோர்
பசிப் பகை கடிதலும் வல்லன் மாதோ;
மறவர் மலிந்த .............................................
கேள்வி மலிந்த வேள்வித் தூணத்து,
இருங் கழி இழிதரு........ கலி வங்கம் 20
தேறு நீர்ப் பரப்பின் யாறு சீத்து உய்த்து,
துறைதொறும் பிணிக்கும் நல் ஊர்,
உறைவு இன் யாணர்,........ கிழவோனே!

திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
சோழன் நலங்கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியது.

காலம் : கி.மு. இரண்டாம் நூற்றாண்டு

The king roped stand his cruise with the post of victory stand erected at the bank of river (Cauvery). 

He drives away his enemies. 
It is his duty. 
Along with this he used to drive away the hungry of others. 
It is his benevolence. 

The poet stats; one fine morning on full-moon day I played my drum instrument. 
The people were sleeping. 
But he did not. 
He is planning his duty. 

He heard my music. 
He comes to me and makes me redressed with the new cloths brought from Kalinga country, removing the old turned ones. 

He gave me a kind of toddy. 
After eating I forgot the world.

Do you want to know who he is; he is the king of a bliss country where his cruise is stand erected with a rope tied with victory pillar at which the warriors enjoy and Brahmans reciting hymns in Sanskrit.     

இது இக்கால உலாக்கப்பல்
கலிவங்கம் என்பது இதன் சங்ககாலப் பெயர்
நலங்கிள்ளி தன் கலிவங்கத்தை
ஆற்றங்கரை வெற்றித் தூண்களில்
கட்டி நிறுத்தி வைத்திருந்தான்

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி