Tuesday, 19 May 2015

புறநானூறு 324

பாணர் இசையைச் சுவைக்கும் அவன் வாய் 
இந்தக் குமிழம் பழம் போல வெளுத்திருந்தது
அந்த வல்லாளன் வேந்தர்க்குகுத் துணை. உலந்துழி உலக்கும் துணை. வேந்தன் துன்புறும்போது வேந்தனுக்காக உயிரையும் தரும் துணை. நெஞ்சறி துணை. வேந்தன் எண்ணத்தை உணர்ந்து அவன் உயிரைக் காப்பாற்றத் தன் உயிரைத் தரும் துணை. வெற்றி கொள்ளும் வேந்தனுக்குத் துணையாக விளங்கும் துணை. – இதுதான் பாடலின் முத்தாய்ப்பு.
இந்தத் துணைவன் யார்?
  • நெடுந்தகை. உயர்ந்த தகைமைப் பண்பு கொண்டவன்.
  • பந்தலில் இடையன் தன்னிடமுள்ள நெய்யை ஊற்றி ஏற்றிவைத்த சிறிதாகக் கொழுந்து விட்டு எரியும் விளக்கொளியில் பாணரின் யாழிசையைக் கேட்டுக்கொண்டு நாணத்தோடு அமர்ந்திருக்கும் பெருந்தகை. குமிழம் பழம் போல வெள்ளை வாயைக் காட்டிச் சுவைத்துக்கொண்டு அமர்ந்திருக்கும் நெடுந்தகை. வெண்முத்துக்கள் உதிர்ந்துகிடக்க, வலிமையான கால் நட்ட பந்தலுக்கு அடியில் இருக்கும் நெடுந்தகை.
அவன் ஊரும் சிறுவர்களும் | சீறூர் மகாஅர்
  • அவனது ஊர் மக்கள் வேட்டுவர். ஆண் காட்டுப்பூனை போல் வெகுண்டு நோக்கும் பார்வையை உடையவர்கள். கயந்தலை (யானைக்குட்டி) போலத் தலையை உடையவர்கள். பறவைகளை வேட்டையாடி அதன் கறியைத் தின்று புலவுநாற்றம் வீசும் வாயை உடையவர்கள். வெளுத்த வாயினை உடையவர்கள். அந்த வேடர்களின் மக்கள். விரும்பிப் போற்றும் மக்கள். துணையாகச் சேர்ந்தே விளையாடும் மக்கள். தாமே வில்லும் அம்பும் செய்துகொண்டு விளையாடுவர். சிறிய இலையை உடையது உடைமரம். அதில் கூர்மையான வெண்ணிற முள் இருக்கும். ஊகம் எனப்படும் நாணாத்தட்டை அவர்களுக்கு அம்பு. அந்த அம்பின் நுனியில் உடைமுள்ளைச் செருகி வைத்திருப்பர். வலார் என்பது வளைந்து நிமிரக்கூடிய மலார் என்னும் கோல். அதனை வளைத்துக் கட்டி வில் செய்துகொள்வர். கருப்பை என்னும் காட்டு எலியை வேட்டையாடக் குறி பார்ப்பர். இப்படிப்பட்ட புன்புலம் (வளமில்லாத நிலம்) தழுவிக் கிடப்பதுதான் அந்த வல்லாளன் ஊர்.

பாடல் (சொற்பிரிப்புப் பதிவு)

வெருக்கு விடை அன்ன வெகுள் நோக்குக் கயந்தலை,
புள் ஊன் தின்ற புலவு நாறு கய வாய்,
வெள் வாய் வேட்டுவர் வீழ் துணை மகாஅர்
சிறியிலை உடையின் சுரையுடை வால் முள்
ஊக நுண் கோல் செறித்த அம்பின்,                       5
வலாஅர் வல்வில் குலாவரக் கோலி,
பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும்
புன்புலம் தழீஇய அம் குடிச் சீறூர்,
குமிழ் உண் வெள்ளை பகு வாய் பெயர்த்த
வெண் காழ் தாய வண் கால் பந்தர்,                        10
இடையன் பொத்திய சிறு தீ விளக்கத்து,
பாணரொடு இருந்த நாணுடை நெடுந்தகை
வலம் படு தானை வேந்தர்க்கு
உலந்துழி உலக்கும் நெஞ்சு அறி துணையே.

திணை வாகை; துறை வல்லாண் முல்லை.
ஆலத்தூர் கிழார் பாடியது.

காலம் : கி.மு. இரண்டாம் நூற்றாண்டு


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி