Wednesday, 24 December 2014

புறநானூறு # 150

நள்ளியின் நளிமலை நாடு
அரசன் நள்ளி தனக்குப் பரிசளித்த பாங்கை இந்தப் பாடலில் புலவர் வன்பரணர் விரிவாகத் தெரிவிக்கிறார்.

குளிர் காலத்தில் பருந்தின் சிறகு பிரிந்து கிடப்பது போல் கிழிந்துபோன ஆடையைப் புலவர் உடுத்தியிருந்தார். பலா மரத்தடியில் அமர்ந்திருந்தார். பல ஊர்களில் அலைந்த களைப்போடு இருந்ததை வேட்டைக்காரன், வல்வில் வேட்டுவன் (நள்ளி) கண்டான். அவன் காலில் குருதிக்கறை படிந்திருந்தது. அது அவன் வேட்டையாடிய மானின் குருதிக் கறை. தலையில் மணிமகுடம் அணிந்திருந்தான். அதனால் செல்வத் திருமகன் போல அவன் காணப்பட்டான்.

தீ மூட்டும் ஞெலிகோல் 
ஞெலிகோல் என்னும் தீக்கடைக்கோல்
அவனைக் கண்டதும் புலவர் எழுந்து கைகூப்பித் தொழுதார். அவன் அவரை அமரும்படிக் கையமர்த்தினான். திடீரெனத் தன்னிடமிருந்த மான் கறியை வெண்ணிறப் பதம் வரும்படி இதமாக, அவனுடைய தீக்கடைக் கோலில் தீ மூட்டிச் சுட்டான். “நீங்கள் உங்கள் சுற்றத்தாரோடு உண்ணுங்கள்” என்று சொல்லிக் கொடுத்தான். காட்டு வழியில் வழிதவறிப் போன அவனுடைய உதவியாளர்கள் (இளையர்) வருவதற்கு முன் கொடுத்தான். அமிழ்தம் போலச் சுவையாக இருந்த அந்தக் கறியை நாங்கள் உண்டு பசி ஆறினோம். அங்கு நல்ல மரங்களுக்கு இடையில் ஓடிக்கொண்டிருந்த குளிர்ந்த நீரைப் பருகிவிட்டுச் செல்லத் தொடங்கினோம்.

கடகம்
அதற்குள் அவன் “யாம் காட்டு நாட்டில் வாழ்கிறோம். அதனால் உங்களுக்குத் தருவதற்குப் பெறுதற்கு அரிய அணிகலன் எம்மிடம் இல்லை” என்று சொல்லிக்கொண்டு, தன் மார்பில் அணிந்திருந்த வயிர மாலை, கறி-உணவு அப்பிக் கிடந்த கையிலிருந்த கடகம் ஆகியவற்றைக் கழற்றி எங்களுக்குக் கொடுத்தான்.

நாங்கள் அவனை “எந்த நாட்டுக்காரன்” என்று கேட்டோம். அவன் தன் நாட்டின் பெயரையும் சொல்லவில்லை. “யார்” என்று கேட்டோம். அவன் தன் பெயரையும் சொல்லவில்லை. அவன் எதுவும் சொல்லாமல் போய்விட்டான்.

பின்னர் வழியில் தென்பட்டவர்களைக் கேட்டு அவனைப் பற்றித் தெரிந்துகொண்டோம். அவன் தோட்டிமலை அரசனாம்.அம் மலைக்குன்றில் பளிங்கு போல் ஓடும் நீர்நாட்டை ஆளும், நளிமலையை ஆளும் நள்ளி என்பவனாம்.   

பாடல்

கூதிர்ப் பருந்தின் இருஞ் சிறகு அன்ன
பாறிய சிதாரேன், பலவு முதல் பொருந்தி,
தன்னும் உள்ளேன், பிறிது புலம் படர்ந்த என்
உயங்கு படர் வருத்தமும் உலைவும் நோக்கி,
மான் கணம் தொலைச்சிய குருதி அம் கழல் கால்,                                5
வான் கதிர்த் திரு மணி விளங்கும் சென்னி,
செல்வத் தோன்றல், ஓர் வல் வில் வேட்டுவன்,
தொழுதனென் எழுவேற் கை கவித்து இரீஇ,
இழுதின் அன்ன வால் நிணக் கொழுங் குறை,
கான் அதர் மயங்கிய இளையர் வல்லே    10
தாம் வந்து எய்தாஅளவை, ஒய்யெனத்
தான் ஞெலி தீயின் விரைவனன் சுட்டு, 'நின்
இரும் பேர் ஒக்கலொடு தின்ம்' எனத் தருதலின்,
அமிழ்தின் மிசைந்து, காய்பசி நீங்கி,
நல் மரன் நளிய நறுந் தண் சாரல்,          15
கல் மிசை அருவி தண்ணெனப் பருகி,
விடுத்தல் தொடங்கினேனாக, வல்லே,
'பெறுதற்கு அரிய வீறுசால் நன் கலம்
பிறிது ஒன்று இல்லை; காட்டு நாட்டேம்' என,
மார்பில் பூண்ட வயங்கு காழ் ஆரம்  20
மடை செறி முன்கைக் கடகமொடு ஈத்தனன்;
'எந் நாடோ?' என, நாடும் சொல்லான்;
'யாரீரோ?' என, பேரும் சொல்லான்;
பிறர் பிறர் கூற வழிக் கேட்டிசினே
'இரும்பு புனைந்து இயற்றாப் பெரும் பெயர்த் தோட்டி 25
அம் மலை காக்கும் அணி நெடுங் குன்றின்,
பளிங்கு வகுத்தன்ன தீம் நீர்,
நளி மலை நாடன் நள்ளி அவன்' எனவே.

திணை பாடாண் திணை; துறை பரிசில் துறை.
கண்டீரக் கோப் பெருநள்ளியை வன்பரணர் பாடியது.

காலம் : கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி