Pages

Thursday 23 October 2014

புறநானூறு 56 Purananuru 56

பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்


உலகைக் காக்கும் நால்வர் போன்றவன் இந்த நன்மாறன்.

காளைமாட்டு ஊர்தி
தீ போன்று விரிந்த செஞ்சடை
கையில் கணிச்சி ஆயுதப் படை
கழுத்தில் நீலநிற நஞ்சுமணி 
ஆகியவற்றை உடைய சிவபெருமான் (1) 
இவன் கூற்றுவன் போல் சினம் கொண்டவன்.

கடலில் வளரும் சுழல்சங்கு போன்ற வெண்ணிற மேனி
கலப்பை ஆயுதப் படை
பனைமரக் கொடி 
ஆகியவற்றை உடைய பலராமன் (2) 
இந்தப் பலராமன் போல் வலிமை கொண்டவன்

கழுவிய மணிக்கல் போன்ற நீலநிற மேனி
கருடப்பறவைக் கொடி 
ஆகியவற்றை உடைய திருமால் (3) 
திருமால் போல் இகழ்வாரை அழிக்கும் புகழ் கொண்டவன்
மயில் கொடி
மயில் ஊர்தி 
ஆகியவற்றுடன் வெற்றியாளனாக விளங்கும் முருகன் (4) 
முருகன் போல் எண்ணியதை முடிக்கும் திறனாளன்.
இப்படி நான்கு பெருந் தெய்வம் போல் 
ஆற்றல் மிக்க உனக்கு செய்யமுடியாதது என்று ஒன்று உண்டா
இல்லை.

எனவே 

இரப்போருக்கு வேண்டிய பொருள்களைக் குறைவின்றி வழங்குவாயாக.

யவனர் தந்த பொன்-கிண்ணத்தில் 
மகளிர் நாள்தோறும் ஊட்டும் தேறலை உண்டு 
மகிழ்ந்து இனிதாக வாழ்வாயாக.
வாளோக்கிய மாறனே!

இருளகற்றும் சூரியன் போலவும்
மேற்குத் திசையில் காணப்படும் வளர்பிறை நிலாப் போலவும் 
நிலைபேற்றுடன் உலகில் வாழ்வாயாக.

பாடல்

ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர் சடை,
மாற்று அருங் கணிச்சி, மணி மிடற்றோனும்;
கடல் வளர் புரி வளை புரையும் மேனி,
அடல் வெந் நாஞ்சில், பனைக் கொடியோனும்;
மண்ணுறு திரு மணி புரையும் மேனி,       5
விண் உயர் புள் கொடி, விறல் வெய்யோனும்,
மணி மயில் உயரிய மாறா வென்றி,
பிணிமுக ஊர்தி, ஒண் செய்யோனும் என
ஞாலம் காக்கும் கால முன்பின்,
தோலா நல் இசை, நால்வருள்ளும்,                 10
கூற்று ஒத்தீயே, மாற்று அருஞ் சீற்றம்;
வலி ஒத்தீயே, வாலியோனை;
புகழ் ஒத்தீயே, இகழுநர் அடுநனை;
முருகு ஒத்தீயே, முன்னியது முடித்தலின்;
ஆங்கு ஆங்கு அவர் அவர் ஒத்தலின், யாங்கும்   15
அரியவும் உளவோ, நினக்கே? அதனால்,
இரவலர்க்கு அருங் கலம் அருகாது ஈயா,
யவனர் நன் கலம் தந்த தண் கமழ் தேறல்
பொன் செய் புனை கலத்து ஏந்தி, நாளும்
ஒண் தொடி மகளிர் மடுப்ப, மகிழ் சிறந்து,          20
ஆங்கு இனிது ஒழுகுமதி! ஓங்கு வாள் மாற!
அம் கண் விசும்பின் ஆர் இருள் அகற்றும்
வெங் கதிர்ச் செல்வன் போலவும், குட திசைத்
தண் கதிர் மதியம் போலவும்,
நின்று நிலைஇயர், உலகமோடு உடனே!    25

திணை பாடாண் திணை
துறை பூவை நிலை.
பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை 
மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

காலம் : கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு



சிவன்


    முருகு

    1 comment: