Monday, 6 October 2014

புறநானூறு 24 Purananuru 24

அரசன் எவ்வி ஆண்ட நல்லூரைத் தன்னகத்தே கொண்ட மிழலைக் கழனி வேளிரின் முத்தூறு நகரினைத் தனதாக்கிக்கொண்டவன் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.

 • நல்லூர் மிழலைக் கழனி (நன்செய் வயல்) வேளாளர் தொன்றுமுதிர் வேளிர்.
 • இவர்களின் நெல் அறுக்கும் தொழுவர் (தொழிலாளர்) வெயில் கடுமையாக இருந்தால் கடலலையில் பாய்ந்து தணித்துக்கொள்வர்.
 • திமிலில் சென்று கடலில் மீன் பிடித்துத் திரும்பிய பரதவர் சூடான மட்டுக் கள் உண்டு குரவை ஆடிக்கொண்டு பாடுவர்.
 • அவ்வூர் மைந்தர் (வாலிபர்) தூவலில் பூக்கும் புன்னை மலரைத் தலையில் அணிந்துகொண்டு வளையல் கை மகளிரொடுதழூஉ’ (துணங்கை) ஆடுவர்.
 • அவ்வூர் வளையல்கை மகளிர் (பருவப் பெண்கள்) கானலில் பூக்கும் முண்டக மலர் மாலை அணிந்துகொண்டு மூன்று வகையான தீஞ்சுவை நீரைக் கலந்து உண்டு மகிழ்ந்து கடல்நீரில் பாய்ந்து விளையாடுவர்.
 • பனங்குரும்பை தரும் நீர், கருப்பஞ்சாறு, தாழையில் இறக்கிய நீர் ஆகியவற்றின் கலவையே அவர்கள் உண்ட முந்நீர்.
 • நல்ல விளைச்சல் தரும் நல்லூர்க் கழனியில் நாரை கயல்மீன்களை மேய்ந்தபின் வைக்கோல் போரில் உறங்கும்.  
 • மிழலை நாடு புனல் பாயும் புதவங்களை (மடைகளை)க் கொண்டது.
இதன் அரசன் தங்குதடை இன்றிப் பெருவேள்விக் கொடை வழங்கும் எவ்வி. இங்கு வாழும்தொன்முதிர் வேளிர்பொன்னாலான அணிகலன்களைப் பூண்ட யானைகளில் செல்லும் பெருமிதம் கொண்டவர்கள்.

 • முத்தூறு நிலப்பகுதி இவர்கள் வாழ்விடம்.
நெடுஞ்செழியன் இந்த முத்தூரைத் தனதாக்கிக்கொண்டான்.

 • இந்த அரசன் கொடித்தேர்ச் செழியன் எனப் போற்றப்படுபவன்.
இவன் பிறந்த நாள்மீன் (நட்சத்திரம்) மீண்டும் மீண்டும் வந்து வளரவேண்டும்.

 • இவனது பகைவர்களின் நாள்மீன் மறுமுறை இவர்குக்கு வராமல் இருக்க வேண்டும்.
உன் உடலும் உயிரும் பொருந்தி இருப்பது போல உன் உயிரோடு உயிராகவும், உடலோடு உடலாகவும் இருந்து வாளேந்தி உன்னைக் காக்கும் மூத்த குடிமக்கள் உன்னை வாழ்த்திக்கொண்டிருக்கையில், இரவலர்களுக்கு நீ வழங்கிக்கொண்டே இருக்கையில், உன் மகளிர் உனக்கு ஊட்டும் தேறலை உண்டுகொண்டு நீ மகிழ்வுடன் இருக்க வேண்டும்

 • இவ்வாறு வாழும் வாழ்க்கையை புகழ் பெற்ற சிலரே பெறுவர். பிறர் ஏதோ செத்தவர் போகச் சாவாமல் இருப்பவர்களாக மதிக்கப்படுவர்.
பாடல்

நெல் அரியும் இருந் தொழுவர்
செஞ் ஞாயிற்று வெயில் முனையின்,
தெண் கடல் திரை மிசைப் பாயுந்து;
திண் திமில் வன் பரதவர்
வெப்பு உடைய மட்டு உண்டு,
தண் குரவைச் சீர் தூங்குந்து;
தூவல் கலித்த தேம் பாய் புன்னை
மெல் இணர்க் கண்ணி மிலைந்த மைந்தர்
எல் வளை மகளிர்த் தலைக் கை தரூஉந்து;
வண்டு பட மலர்ந்த தண் நறுங் கானல்
முண்டகக் கோதை ஒண் தொடி மகளிர்
இரும் பனையின் குரும்பை நீரும்,
பூங் கரும்பின் தீம் சாறும்,
ஓங்கு மணல் குவவுத் தாழைத்
தீம் நீரொடு உடன் விராஅய்,
முந் நீர் உண்டு முந்நீர்ப் பாயும்;
தாங்கா உறையுள் நல் ஊர் கெழீஇய
ஓம்பா ஈகை மா வேள் எவ்வி
புனல் அம் புதவின் மிழலையொடு கழனிக்
கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும்,
பொன் அணி யானைத் தொல் முதிர் வேளிர்,
குப்பை நெல்லின், முத்தூறு தந்த
கொற்ற நீள் குடை, கொடித் தேர்ச் செழிய!
நின்று நிலைஇயர் நின் நாள்மீன்; நில்லாது
படாஅச் செலீஇயர், நின் பகைவர் மீனே
நின்னொடு, தொன்று மூத்த உயிரினும், உயிரொடு
நின்று மூத்த யாக்கை அன்ன, நின்
ஆடு குடி மூத்த விழுத் திணைச் சிறந்த
வாளின் வாழ்நர் தாள் வலம் வாழ்த்த,
இரவல் மாக்கள் ஈகை நுவல,
ஒண் தொடி மகளிர் பொலங்கலத்து ஏந்திய
தண் கமழ் தேறல் மடுப்ப, மகிழ் சிறந்து,
ஆங்கு இனிது ஒழுகுமதி, பெரும! 'ஆங்கு அது
வல்லுநர் வாழ்ந்தோர்' என்ப தொல் இசை,
மலர் தலை உலகத்துத் தோன்றி,
பலர், செலச் செல்லாது, நின்று விளிந்தோரே.

திணை பொதுவியல்; துறை பொருண்மொழிக் காஞ்சி.
பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனை மாங்குடி கிழார் பாடியது.

காலம்     : கி.மு. 3 முதல் கி.பி. 2 (நூற்றாண்டு)


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி