Sunday, 24 March 2019

கம்பராமாயணம் இறைவணக்கம் பாடல்கள் KambaRamayanam invocation songs

1
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்,
நிலைபெறுத்தலும், நீக்கலும், நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் - அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே. -- பால காண்டம்

எல்லா உலகங்களையும் தோற்றுவித்து அவற்றுள் தம்மை இருப்பாக்கிக் கொள்ளல்,
அவற்றை நிலைபேறு உடையனவாகச் செய்தல்
அவற்றை நீக்கல்
இந்த மூன்றையும்
அளவில்லாத விளையாட்டாக ஆக்கிக் கொண்டுள்ளவர் அவர். 
அவர் நமக்குத் தலைவர். 
அவருக்கே எங்கள் வணக்கம்.

2
வான்நின்று இழிந்து, வரம்பு இகந்த மா பூதத்தின் வைப்பு எங்கும்,
ஊனும் உயிரும் உணர்வும்போல், உள்ளும் புறத்தும் உளன் என்ப-
கூனும் சிறிய கோத்தாயும் கொடுமை இழைப்ப, கோல் துறந்து,
கானும் கடலும் கடந்து, இமையோர் இடுக்கண் தீர்த்த கழல் வேந்தன். -- அயோத்தியா காண்டம்

வானத்திலிருந்து தோன்றியவை மாபெரும் பூதங்கள்
அவை நிலம் நீர் நீ காற்று விண் என்னும் ஐந்து
அவற்றில் உடல் உயிர் உணர்வு மூன்றும் உள்ளன 
இந்த மூன்றிலும் உள்ளேயும் புறத்தேயும் அவன் இருக்கிறாள் என்பர்
அவன் யார்
கூனியும் வளர்ப்புத் தாயும் கொடுமை செய்ய
ஆட்சியைத் துறந்து 
காட்டையும் கடலையும் கடந்து சென்று
தேவர்களின் துன்பத்தைத் தீர்த்த
திருவடிகளைக் கொண்ட வேந்தன்


3
பேதியாது நிமிர் பேத உருவம் பிறழ்கிலா,
ஓதி ஓதி உணரும்தொறும் உணர்ச்சி உதவும்
வேதம், வேதியர், விரிஞ்சன், முதலோர் தெரிகிலா,
ஆதி தேவர்; அவர் எம் அறிவினுக்கு அறிவுஅரோ. -- ஆரணிய காண்டம்

வேறுபடாது வேறுபட்டு நிற்கும் உருவங்கள் 
அவற்றைப் படித்துப் படித்து உணர
உணர்ச்சியாக உதவுபவர்
வேதம் வேதியர் விரிஞ்சன் முதலானோருக்குத் தெரியாத ஆதி தேவர் 
அவர் எம் அறிவுக்கு அறிவு

4
மூன்று உரு எனக் குணம் மும்மை ஆம் முதல்,
தோன்று உரு எவையும், அம் முதலைச் சொல்லுதற்கு
ஏன்று உரு அமைந்தவும், இடையில் நின்றவும்,
சான்று உரு உணர்வினுக்கு உணர்வும், ஆயினான். --  கிட்கிந்தா காண்டம்

மூன்று உரு - மூன்று குணம் - ஆம் 
முதல் தோன்றும் உருவம் எல்லாம் ஆம் 
அந்த முதலைச் சொல்வதற்கு உருவம் தாங்கியவன் ஆம் 
இவற்றிற்கு இடையில் நிற்பவன் ஆம் 
இவற்றிற்குச் சான்றுரு உணர்வு 
அவன் இந்த உணர்வுக்கு உணர்வு ஆம்

5
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவு என, பூதம் ஐந்தும்
விலங்கிய விகாரப் பாட்டின் வேறுபாடு உற்ற வீக்கம்,
கலங்குவது எவரைக் கண்டால்? அவர், என்பர் - 'கை வில் ஏந்தி,
இலங்கையில் பொருதார் அன்றே, மறைகளுக்கு இறுதி ஆவார்!' -- சுந்தர காண்டம்

நீரலையில் தோன்றும் பொய்ப் பாம்பு போல்
நிலம் நீர் தீ காற்று ஆகாயம் என்னும் ஐந்து பூதங்களும்
அளவில் வேறுபட்டு வீங்கித் தோன்றுகின்றன
யாரைக் கண்டால் அவை கலங்குகின்றன
கையில் வில்லை ஏந்திப் போரிட்டவரைக் கண்டால் கலங்குகின்றன 
அவர்தான் மறைகளுக்கு முடிபு 

6
'ஒன்றே' என்னின், ஒன்றே ஆம்; 'பல' என்று உரைக்கின், பலவே ஆம்;
'அன்றே' என்னின், அன்றே ஆம்; 'ஆமே' என்று உரைக்கின், ஆமே ஆம்;
'இன்றே' என்னின், இன்றே ஆம்; 'உளது' என்று உரைக்கின், உளதே ஆம்;
நன்றே, நம்பி குடி வாழ்க்கை! நமக்கு இங்கு என்னோ பிழைப்பு? அம்மா! -- யுத்த காண்டம்

ஒன்று என்றால் ஒன்று 
பல என்றால் பல 
இவை அன்று என்றால் அன்று
இவை ஆம் என்றால் ஆம் 
இல்லை என்றால் இல்லை
உண்டு என்றால் உண்டு 
நம்பி இப்படிக் குடியிருப்பது நன்று 
நமக்கு இங்கு என்ன பிழைப்பு
குறுந்தொகை 110 kurnthogai 110

அவர் வந்தால் என்ன? வராவிட்டால் என்ன?
கருவிளம்பூ ஈங்கை முள்ளில் மோதி உதிரும்படி வாடைக்காற்று வீசும்போது என்ன ஆவாளோ என்று என்னைப் பற்றி அவர் நினைக்காமல் இருக்கிறாரே!குறுந்தொகை 109 kurnthogai 109

இறால் மீன் கூட்டத்தைப் பிடித்துக்கொண்டு வரும் கடல் துறைவன் அவன். அவன் இவளோடு சேர்ந்திருக்கும்போதே, பிரிவானோ என்று எண்ணி இவளது நெற்றி பசலை பாய்ந்து இப்படிக் கிடக்கிறதே!

தலைவி பற்றித் தோழியின் கவலை.குறுந்தொகை 108 kurnthogai 108

குன்றத்தில் மழை மேகம் விளையாடுகிறது.
கறவை மாடுகள் கன்றுகளை நோக்கி வரும் மாலைக் காலம்.
முல்லை மலரத் தொடங்குகிறது.
செவ்வானம் தன் முகத்தைக் காட்டுகிறது.
அவர் திரும்பவில்லை.
என் உயிர் இருக்காது போல் தோன்றுகிறது.

தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள்.குறுந்தொகை 107 kurnthogai 107

அவனும் அவளும் இன்பம் துய்க்கின்றனர்.
விடியலில் சேவல் கூவுகிறது.
அது அவர்களின் இன்பத்திற்கு இடைநூறாக அமைந்துவிட்டது.
சினம் கொண்ட தலைவி சேவலுக்குச் சாபம் இடுகிறாள்.
"நள்ளிரவில் எலி இரை தேடிக்கொண்டிருக்கும் காட்டுப் பூனைக்கு நீ இரை ஆவாயாக".குறுந்தொகை 106 kurnthogai 106

இற்றி மரத்து வேர் பாறையில் இறங்குவது போல பாறையில் நீர் வழியும் அருவி தோன்றும் மலைநாடன் அவன்.
அவன் உன்னை மணந்துகொள்ள வருவதாகச் செய்தி வந்துள்ளது.
நாமும் நெய் ஊற்றிய விளக்குச் சுடர் போல ஒளியுடன் அவரை வரவேற்க இருப்பதாகத் தூது சொல்லி விடலாம்.

தோழி தலைவியிடம் கூறுகிறாள்.Saturday, 23 March 2019

குறுந்தொகை 105 kurnthogai 105

மலை வாழ் புனவன் தன் துடவையில் விளைந்த தினைக்கதிர்கள் சிலவற்றைத் தன் காவல் தெய்வம் முருகனுக்குப் படையல் செய்தான். (தேனில் நனைத்துப்) படையல் செய்ததை அறியாமல் அதனை உண்ட மயில் வெறியாடும் களத்தில் பூசாரிப் பெண் ஆடுவது போல் ஆடுகிறது. இப்படிப்பட்ட மலைநாடன் அவன்.
அவனோடு நான் கொண்டிருக்கும் உறவு கண்ணீர் விட்டுக்கொண்டு நினைக்கும்படி ஆகிவிட்டதே!

தலைவி தோழியிடம் சொல்லிக் கலங்குகிறாள்.Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.