Thursday, 20 February 2020

கம்பராமாயணம் வாலி வதைப் படலம் - KambaRamayanam 4-7 90

இராமன் செயல் முறையா


வாலியின் சிரிப்பு வெடித்தது
சேற்றுக் குழியில் மூழ்கும் யானை போல் வாலி துன்புற்றான் 81

இராமன் வாலி முன் தோன்றினான் 82

உனக்கு என்ன நேர்ந்தது 
ஏன் இதனைச் செய்தாய் 
என்று இராமனை ஏசலானான் 83

பிறரைத் தீங்கு செய்யாமல் காப்பவன் தீங்கு செய்யலாமா 84
குலம், கல்வி, கொற்றம், நலம் - உன்னது அல்லவா 
அறிந்திருந்தும் தீமை செய்யலாமா 85
மனைவியைப் பிரிந்த பின்னர் திகைத்துவிட்டாயா 86

அரக்கர் தவறு செய்தால், குரங்கைக் கொல் என்று உங்கள் மனுநீதி சொல்கிறதா 
இரக்கத்தை எங்கே உகுத்துவிட்டாய் 
என் மேல் என்ன பிழை கண்டாய் 
பழியை நீ பூண்டுகொண்டால், புகழை யார் சுமப்பார் 87

கருணை வள்ளலே 
கலிகாலமா 
ஒழுக்கமும் விழுப்பமும் மெலியவர்க்கா 
வலியவர் மெலிவு செய்தால் புகழா 88

நாடாள் செல்வத்தைதைத் தம்பிக்கு தந்தாய் 
காட்டிலும் தம்பிக்கு அரசு நல்கும் தருமம் செய்கிறாயா 89

நீ மறைந்து தாக்கியது அறம் என்றால், இராவணன் செய்தது எப்படித் தவறாகும் 90

பாடல்

வெள்கிடும் மகுடம் சாய்க்கும்; வெடிபடச் சிரிக்கும்; மீட்டும்
உள்கிடும்; 'இதுவும்தான் ஓர் ஓங்கு அறமோ?' என்று உன்னும்,
முள்கிடும் குழியில் புக்க மூரி வெங் களி நல் யானை
தொள்கொடும் கிடந்தது என்ன, துயர் உழந்து அழிந்து சோர்வான் 81

'இறை திறம்பினனால்; என்னே, இழிந்துளோர் இயற்கை! என்னின்,
முறை திறம்பினனால்' என்று மொழிகின்ற முகத்தான் முன்னர்,
மறை திறம்பாத வாய்மை மன்னர்க்கு மனுவில் சொல்லும்
துறை திறம்பாமல் காக்கத் தோன்றினான், வந்து தோன்ற, 82

கண்ணுற்றான் வாலி, நீலக் கார் முகில் கமலம் பூத்து,
மண் உற்று, வரி வில் ஏந்தி, வருவதே போலும் மாலை;
புண் உற்றது அனைய சோரி பொறியோடும் பொடிப்ப, நோக்கி,
'எண்ணுற்றாய்! என் செய்தாய்?' என்று, ஏசுவான் இயம்பலுற்றான்: 83

'வாய்மையும், மரபும், காத்து, மன் உயிர் துறந்த வள்ளல்
தூயவன், மைந்தனே! நீ, பரதன்முன் தோன்றினாயே!
தீமைதான், பிறரைக் காத்து, தான் செய்தால் தீங்கு அன்று ஆமோ?
தாய்மையும் அன்றி, நட்பும், தருமமும், தழுவி நின்றாய்! 84

'குலம் இது; கல்வி ஈது; கொற்றம் ஈது; உற்று நின்ற
நலம் இது; புவனம் மூன்றின் நாயகம் உன்னது அன்றோ?
வலம் இது; இவ் உலகம் தாங்கும் வண்மை ஈது; என்றால் - திண்மை
அலமரச் செய்யலாமோ, அறிந்திருந்து அயர்ந்துளார் போல்? 85

'கோ இயல் தருமம், உங்கள் குலத்து உதித்தோர்கட்கு எல்லாம் -
ஓவியத்து எழுத ஒண்ணா உருவத்தாய்! - உடைமை அன்றோ?
ஆவியை, சனகன் பெற்ற அன்னத்தை, அமிழ்தின் வந்த
தேவியை, பிரிந்த பின்னை, திகைத்தனை போலும், செய்கை! 86

'அரக்கர் ஓர் அழிவு செய்து கழிவரேல், அதற்கு வேறு ஓர்
குரக்கு இனத்து அரசைக் கொல்ல, மனு நெறி கூறிற்று உண்டோ?
இரக்கம் எங்கு உகுத்தாய்? என்பால் எப் பிழை கண்டாய்? அப்பா!
பரக்கழி இது நீ பூண்டால், புகழை யார் பரிக்கற்பாலார்? 87

'ஒலி கடல் உலகம் தன்னில் ஊர் தரு குரங்கின் மாடே,
கலியது காலம் வந்து கலந்ததோ? - கருணை வள்ளால்!-
மெலியவர் பாலதேயோ, ஒழுக்கமும் விழுப்பம் தானும்?
வலியவர் மெலிவு செய்தால், புகழ் அன்றி, வசையும் உண்டோ ? 88

'கூட்டு ஒருவரையும் வேண்டாக் கொற்றவ! பெற்ற தாதை
பூட்டிய செல்வம் ஆங்கே தம்பிக்குக் கொடுத்துப் போந்து,
நாட்டு ஒரு கருமம் செய்தாய்; எம்பிக்கு, இவ் அரசை நல்கி,
காட்டு ஒரு கருமம் செய்தாய்; கருமம் தான் இதன்மேல் உண்டோ ? 89

'அறை கழல் அலங்கல் வீரர் ஆயவர் புரிவது ஆண்மைத்
துறை எனல் ஆயிற்று அன்றே? தொன்மையின் நல் நூற்கு எல்லாம்
இறைவ! நீ, என்னைச் செய்தது ஈது எனில், "இலங்கை வேந்தன்
முறை அல செய்தான்" என்று, முனிதியோ? - முனிவு இலாதாய்! 90

கம்ப இராமாயணம் 
கிட்கிந்தா காண்டம் 
7. வாலி வதைப் படலம்
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி