Thursday, 20 February 2020

கம்பராமாயணம் வாலி வதைப் படலம் - KambaRamayanam 4-7 40

வாலி இராமனின் நற்பண்புகளை எண்ணல்


உன் தம்பி இராமன் துணையுடன் வந்துள்ளான் ஆதலால் போருக்குச் செல்ல வேண்டாம் என்று வாலியை அவன் மனைவி தடுத்தாள். அதனைக் கேட்ட வாலி இராமன் பண்புகள் பற்றிக் கூறுகிறான். 

இராமன் அறத்தின் ஆறு. அவனுக்கு நீ ஊறு கற்பிக்கிறாய் 
இது உன் பெண்மைக் குணம் 31

இம்மை, மறமை இரண்டையும் நோக்கும் இயல்பினன் இராமனுக்கு இது பெருமையோ? தருமம் தவிர்ப்பானோ 32
மாற்றாந்தாய் ஏவலின்படி ஆட்சியைத் தம்பிக்கு அளித்த ஐயனைப் போற்றாமல் புகல்கிறாய் 33
தன் தம்பி இருக்குபோது குரங்கோடு சேர்வானோ 34
தம்பியர் அல்லது தனக்கு வேறு உயிர் இல்லை என்று எண்ணுபவன், நானும் என் தம்பியும் போரிடும்போது இடையில் வந்து என்மேல் அம்பு எய்வானோ 35

சற்றே பொறுத்திரு. 
இமைப்பொழுதில் என் தம்பியையும் உடன் வந்தவரையும் அழித்துவிட்டு மீள்வேன் என்றான் வாலி 
தாரை மேலும் சொல்ல அஞ்சினாள் 36

போரை விரும்பி வாலி மலைக்கு வந்தான் 37
தூணில் தோன்றிய நரசிங்கம் போல வாலி வந்தான் 38
நிலம் அளக்கத் தாவிய திருமால் போல் தாவினான் 39

வாலியையும் சுக்கிரீவனையும் ஒருங்கு கண்ட இராமன் தன் தம்பியிடம் கூறுகினான். இவர்கள் மேனி ஏதோ ஒரு உலகத்துக் கடல், மேகம், காற்று, தீ போலத் தோன்றுவதைப் பார் - என்றான் 40

பாடல்

'உழைத்த வல் இரு வினைக்கு ஊறு காண்கிலாது
அழைத்து அயர் உலகினுக்கு அறத்தின் ஆறு எலாம்
இழைத்தவற்கு, இயல்பு அல இயம்பி என் செய்தாய்?
பிழைத்தனை; பாவி! உன் பெண்மையால்' என்றான். 31

'இருமையும் நோக்குறும் இயல்பினாற்கு இது
பெருமையோ? இங்கு இதில் பெறுவது என்கொலோ?
அருமையின் நின்று, உயிர் அளிக்கும் ஆறுடைத்
தருமமே தவிர்க்குமோ தன்னைத் தான் அரோ? 32

'ஏற்ற பேர் உலகு எலாம் எய்தி, ஈன்றவள்
மாற்றவள் ஏவ, மற்று, அவள்தன் மைந்தனுக்கு
ஆற்ற அரும் உவகையால் அளித்த ஐயனைப்
போற்றலை; இன்னன புகறல்பாலையோ?' 33

'நின்ற பேர் உலகு எலாம் நெருக்கி நேரினும்,
வென்றி வெஞ் சிலை அலால், பிறிது வேண்டுமோ?
தன் துணை ஒருவரும், தன்னில் வேறு இலான்,
புன் தொழில் குரங்கொடு புணரும் நட்பனோ? 34

'தம்பியர் அல்லது தனக்கு வேறு உயிர்
இம்பரின் இலது என எண்ணி ஏய்ந்தவன்,
எம்பியும் யானும் உற்று எதிர்ந்த போரினில்
அம்பு இடை தொடுக்குமோ, அருளின் ஆழியான்? 35

'இருத்தி, நீ, இறை, இவண்; இமைப்பு இல் காலையில்,
உருத்தவன் உயிர் குடித்து, உடன் வந்தாரையும்
கருத்து அழித்து, எய்துவென்; கலங்கல்' என்றனன்;
விரைக் குழல், பின், உரை விளம்ப அஞ்சினாள். 36

ஒல்லை, செரு வேட்டு, உயர் வன் புய ஓங்கல் உம்பர்
எல்லைக்கும் அப்பால் இவர்கின்ற இரண்டினோடும்,
மல்லல் கிரியின் தலை வந்தனன், வாலி - கீழ்பால்,
தொல்லைக் கிரியின் தலை தோற்றிய ஞாயிறு என்ன. 37

நின்றான், எதிர் யாவரும் நெஞ்சு நடுங்கி அஞ்ச,
தன் தோள் வலியால் தகை மால் வரை சாலும் வாலி,
குன்றூடு வந்து உற்றனன் - கோள் அவுணன் குறித்த
வன் தூணிடைத் தோன்றிட மா நரசிங்கம் என்ன. 38

ஆர்க்கின்ற பின்னோன் தனை நோக்கினன்; தானும் ஆர்த்தான்;
வேர்க்கின்ற வானத்து உரும் ஏறு வெறித்து வீழப்
போர்க்கின்றது, எல்லா உலகும் பொதிர்வுற்ற பூசல் -
கார்க் குன்றம் அன்னான் நிலம் தாவிய கால் இது என்ன. 39

அவ் வேலை, இராமனும், அன்புடைத் தம்பிக்கு, 'ஐய!
செவ்வே செல நோக்குதி; தானவர் தேவர் நிற்க,
எவ் வேலை, எம் மேகம், எக் காலொடு எக் கால வெந் தீ,
வெவ் வேறு உலகத்து இவர் மேனியை மானும்?' என்றான். 40

கம்ப இராமாயணம் 
கிட்கிந்தா காண்டம் 
7. வாலி வதைப் படலம்
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி