Wednesday, 19 February 2020

கம்பராமாயணம் வாலி வதைப் படலம் - KambaRamayanam 4-7 30

மனைவி தாரை வாலியைத் தடுத்தல்


அமிழ்தம் பெறக் கடல் கடைந்தபோது,  வாலி ஒருவன் மட்டும் தனித்து நின்று பாம்புக் கயிற்றை இழுத்துக் கடைந்தான். 
அப்போது தோன்றிய ஆலம் (விடம்) போன்று இப்போது போருக்கெழுந்த வாலி தோன்றினான் 21

வாலி மனைவி தாரை 
அவள் கணவனைத் தடுத்தாள். 22
விலக்காதே. விடு விடு. அவன் உயிரைக் குடித்து மீள்வேன் என்றான் 23

உன்னிடம் தோற்றோடியவன் திரும்பவும் வந்திருக்கிறான் என்றால், அவனுக்குத் துணை இருக்கிறது - என்றாள் 24

மூன்று உலகநும் எதிர் நின்றாலும் என்னிடம் தோற்கும் - என்றான் 25
இந்திரன் முதலான தேவர்கள் அனைவரும் ஒரு பக்கமும், அசுரர்கள் மற்றொரு பக்கமும் கயிற்றைப் பிடித்துக்கொண்டு மந்தர மலை மத்தால் கடல் கடைந்தனர். 26
அப்போது தேவர்கள் அயர்வுற்றபோது அவர்கள் பக்கம் நான் ஒருவனே நின்று கடலைக் கடைந்ததை மறக்க முடியுமா 27
எமனும் என் பெயரைச் சொன்னால் கூசுவான். என்னை எதிர்க்க வல்லார் யார் - என்றான் 28
யான் பெற்றிருக்கும் வரத்தால் என்முன் நின்று எதிர்ப்பவரின் எலிமையில் பாதி எனக்கு வந்துவிடும் அல்லவா - என்றான் 29

அவனுக்கு இராமன் நட்பு இருக்கிறது. 
அவன் துணையுடன் இவன் வந்திருக்கிறான் என்று நம்மிடம் நெருக்கானவர் தெரிவித்தனர் - என்றாள் 30

பாடல்

ஞாலமும், நால் திசைப் புனலும், நாகரும்,
மூலமும், முற்றிட முடிவில் தீக்கும் அக்
காலமும் ஒத்தனன்; கடலில் தான் கடை
ஆலமும் ஒத்தனன், எவரும் அஞ்சவே. 21

ஆயிடை, தாரை என்று அமிழ்தின் தோன்றிய
வேயிடைத் தோளினாள், இடை விலக்கினாள்;
வாயிடைப் புகை வர, வாலி கண் வரும்
தீயிடை, தன் நெடுங் கூந்தல் தீகின்றாள். 22

'விலக்கலை; விடு; விடு; விளிந்துளான் உரம்
கலக்கி, அக் கடல் கடைந்து அமுது கண்டென,
உலக்க இன் உயிர் குடித்து, ஒல்லை மீள்குவல்,
மலைக் குல மயில்!' என, மடந்தை கூறுவாள்: 23

'கொற்றவ! நின் பெருங் குவவுத் தோள் வலிக்கு
இற்றனன், முன்னை நாள், ஈடு உண்டு ஏகினான்;
பெற்றிலன் பெருந் திறல்; பெயர்த்தும் போர் செயற்கு
உற்றது, நெடுந் துணை உடைமையால்' என்றாள். 24

'மூன்று என முற்றிய முடிவு இல் பேர் உலகு
ஏன்று, உடன் உற்றன, எனக்கு நேர் எனத்
தோன்றினும், தோற்று, அவை தொலையும் என்றலின்
சான்று உள; அன்னவை - தையல்! - கேட்டியால்: 25

'மந்தர நெடு வரை மத்து, வாசுகி
அந்தம் இல் கடை கயிறு, அடை கல் ஆழியான்,
சந்திரன் தூண், எதிர் தருக்கின் வாங்குநர்,
இந்திரன் முதலிய அமரர், ஏனையோர்; 26

'பெயர்வுற வலிக்கவும், மிடுக்கு இல் பெற்றியார்
அயர்வுறல் உற்றதை நோக்கி, யான், அது
தயிர் எனக் கடைந்து, அவர்க்கு அமுதம் தந்தது,
மயில் இயல் குயில்மொழி! மறக்கல் ஆவதோ? 27

'ஆற்றல் இல் அமரரும், அவுணர் யாவரும்,
தோற்றனர்; எனையவர் சொல்லற்பாலரோ?
கூற்றும், என் பெயர் சொலக் குலையும்; ஆர் இனி
மாற்றலர்க்கு ஆகி வந்து, எதிரும் மாண்பினார்? 28

'பேதையர் எதிர்குவர் எனினும், பெற்றுடை
ஊதிய வரங்களும், உரமும், உள்ளதில்
பாதியும், என்னதால்; பகைப்பது எங்ஙனம்?
நீ, துயர் ஒழிக!' என, நின்று கூறினான். 29

அன்னது கேட்டவள், 'அரச! "ஆயவற்கு
இன் உயிர் நட்பு அமைந்து இராமன் என்பவன்,
உன் உயிர் கோடலுக்கு உடன் வந்தான்" என,
துன்னிய அன்பினர் சொல்லினார்' என்றாள். 30

கம்ப இராமாயணம் 
கிட்கிந்தா காண்டம் 
7. வாலி வதைப் படலம்
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி