Wednesday, 19 February 2020

கம்பராமாயணம் வாலி வதைப் படலம் - KambaRamayanam 4-7 20

வாலி போருக்கு எழுதல்


சுக்கிரீவன் உரத்த குரலில் வாலியைப் போருக்கு அழைத்தான் 11
அந்தக் குரல் வாலியின் காதுகளைத் துளைத்தது 12
அப்போது வாலி பாற்கடல் போன்ற படுக்கையில் இருந்தான் 13
தம்பி நிலையை எண்ணி வாலி சிரித்தான் 14
வாலி எழுந்த விசையில் அவன் மலையே அழுந்திற்று 15
அவன் விட்ட மூச்சு தேவருலகிலும் புகைந்தது 16
இடி போல் கைகளைக் கொட்டினான் 17
வந்துவிட்டேன், வந்துவிட்டேன் - என்றான் 18
அவன் விசையில் எழுந்த காற்று மரங்களை வேருடன் சாய்த்தது 19
வாலி தன் பல்லைக் கடித்தான் 
அதன் ஒலியில் இடிகள் விழுந்தன 20

பாடல்

வார்த்தை அன்னது ஆக, வான் இயங்கு தேரினான் மகன்,
நீர்த் தரங்க வேலை அஞ்ச, நீல மேகம் நாணவே,
வேர்த்து மண் உளோர் இரிந்து, விண் உளோர்கள் விம்ம, மேல்
ஆர்த்த ஓசை, ஈசன் உண்ட அண்டம் முற்றும் உண்டதே. 11

இடித்து, உரப்பி, 'வந்து போர் எதிர்த்தியேல் அடர்ப்பென்' என்று,
அடித்தலங்கள் கொட்டி, வாய் மடித்து, அடுத்து அலங்கு தோள்
புடைத்து நின்று, உளைத்த பூசல் புக்கது என்ப - மிக்கு இடம்
துடிப்ப, அங்கு, உறங்கு வாலி திண் செவித் துளைக்கணே. 12

மால் பெருங் கட கரி முழக்கம் வாள் அரி
ஏற்பது செவித்தலத்து என்ன, ஓங்கிய
ஆர்ப்பு ஒலி கேட்டனன் - அமளிமேல் ஒரு
பாற்கடல் கிடந்ததே அனைய பான்மையான். 13

உருத்தனன் பொர எதிர்ந்து இளவல் உற்றமை,
வரைத் தடந் தோளினான், மனத்தின் எண்ணினான்;
சிரித்தனன்; அவ் ஒலி, திசையின் அப் புறத்து
இரித்தது, அவ் உலகம் ஓர் எழொடு ஏழையும். 14

எழுந்தனன், வல் விரைந்து, இறுதி ஊழியில்
கொழுந் திரைக் கடல் கிளர்ந்தனைய கொள்கையான்;
அழுந்தியது, அக் கிரி; அருகில் மால் வரை
விழுந்தன, தோள் புடை விசித்த காற்றினே. 15

போய்ப் பொடித்தன மயிர்ப் புறத்த, வெம் பொறி;
காய்ப்பொடு உற்று எழு வட கனலும் கண் கெட,
தீப் பொடித்தன, விழி; தேவர் நாட்டினும்
மீப் பொடித்தன புகை, உயிர்ப்பு வீங்கவே. 16

கைக் கொடு கைத்தலம் புடைப்ப, காவலின்
திக் கயங்களும் மதச் செருக்குச் சிந்தின;
உக்கன உரும் இனம்; உலைந்த உம்பரும்;
நெக்கன, நெரிந்தன, நின்ற குன்றமே. 17

'வந்தனென்! வந்தனென்!' என்ற வாசகம்
இந்திரி முதல் திசை எட்டும் கேட்டன;
சந்திரன் முதலிய தாரகைக் குழாம்
சிந்தின, மணி முடிச் சிகரம் தீண்டவே. 18

வீசின காற்றின் வேர் பறிந்து, வெற்பு இனம்
ஆசையை உற்றன; அண்டப் பித்திகை
பூசின, வெண் மயிர் பொடித்த வெம் பொறி;
கூசினன் அந்தகன்; குலைந்தது உம்பரே. 19

கடித்த வாய் எயிறு உகு கனல்கள் கார் விசும்பு
இடித்த வாய் உகும் உரும் இனத்தின் சிந்தின;
தடித்து வீழ்வன எனத் தகர்ந்து சிந்தின,
வடித்த தோள் வலயத்தின் வயங்கு காசு அரோ. 20

கம்ப இராமாயணம் 
கிட்கிந்தா காண்டம் 
7. வாலி வதைப் படலம்
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி