Saturday, 22 February 2020

கம்பராமாயணம் வாலி வதைப் படலம் - KambaRamayanam 4-7 160

அங்கதன் கையடை


அமுதம் பெறக் கடலைக் கடைய வேண்டின் இனி ஆர் உள்ளார்? 151
சிவனடி அல்லால் வணங்காதவன் நீ
அமுதினைத் தேவர்க்கு அளித்த நீ துஞ்சினாய்
உன்னைப்போல் வள்ளல் இனி ஆர் உள்ளார்? 152
என்று சொல்லிக்கொண்டு அழுத தன் மகன் அங்கதனை வாலி தழுவிக்கொண்டு அஞ்சவேண்டாம் என்றான் 153

தோன்றலும் இறத்தலும் உலகத்து இயற்கை
நான் செய்த தவத்தால் இராமன் வந்து எனக்கு வீடுபேறு தந்தான் 154

மகனே! 
குழந்தைத் தன்மையை விட்டுவிடு 
நான் சொல்வதைக் கேள் 
மெய்ப்பொருள், பிறவி நோய்க்கு மருந்து, வில்லைத் தாங்கி வந்துள்ளான் 
அவனை வணங்கு  155

என் உயிருக்கு இறுதி செய்தான் என்று எண்ணாதே 
அவனைப் பற்றி உன் உயிருக்கு உறுதி செய்துகொள் 156
இவ்வாறு சொல்லிக்கொண்டு தன் மகனை ஆரத் தழுவினான் 157

இவன் உன் கையடை என்று சொல்லி, அங்கதனை இராமன் கையில் கொடுத்தான் 158

அங்கதனைப் பெற்றுக்கொண்ட இராமன் தன் இடுப்பில் கட்டியிருந்த உடைவாளை அங்கதனிடம் கொடுத்து, அதனைத் தாங்கிக்கொண்டு வருமாறு கூறினான் 
வாலியின் உயிர் பிரிந்தது 159

வாலி கையில் பிடித்தொண்டிருந்த இராமன் அம்பு நழுவிற்று 
கடலுக்குச் சென்று கழுவிக்கொண்டு, இராமனின் அம்புப் புட்டிலுக்கு வந்து சேர்ந்தது 160

பாடல்

'குல வரை, நேமிக் குன்றம், என்று வான் உயர்ந்த கோட்டின்
தலைகளும், நின் பொன் - தாளின் தழும்பு, இனி, தவிர்ந்த அன்றே?
மலை கொளும் அரவும், மற்றும், மதியமும், பலவும் தாங்கி,
அலை கடல் கடைய வேண்டின், ஆர் இனிக் கடைவர்? - ஐயா! 151

'பஞ்சின் மெல் அடியாள் பங்கன் பாதுகம் அலாது, யாதும்
அஞ்சலித்து அறியாச் செங் கை ஆணையாய்! அமரர் யாரும்
எஞ்சலர் இருந்தார் உன்னால்; இன் அமுது ஈந்த நீயோ,
துஞ்சினை; வள்ளியோர்கள், நின்னின் யார் சொல்லற்பாலார்?' 152

ஆயன பலவும் பன்னி, அழுங்கினன் புழுங்கி, நோக்கி,
தீ உறு மெழுகின் சிந்தை உருகினன் செங் கண் வாலி,
'நீ இனி அயர்வாய் அல்லை' என்று தன் நெஞ்சில் புல்லி,
'நாயகன், இராமன், செய்த நல்வினைப் பயன் இது' என்றான். 153

'தோன்றலும், இறத்தல்தானும், துகள் அறத் துணிந்து நோக்கின்,
மூன்று உலகத்தினோர்க்கும், மூலத்தே முடிந்த அன்றே?
யான் தவம் உடைமையால், இவ் இறுதி வந்து இசைந்தது; யார்க்கும்
சான்று என நின்ற வீரன் தான் வந்து, வீடு தந்தான். 154

'பாலமை தவிர் நீ; என் சொல் பற்றுதிஆயின், தன்னின்
மேல் ஒரு பொருளும் இல்லா மெய்ப்பொருள், வில்லும் தாங்கி,
கால் தரை தோய நின்று, கட்புலக்கு உற்றது அம்மா!
"மால் தரும் பிறவி நோய்க்கு மருந்து" என, வணங்கு, மைந்த! 155

'என் உயிர்க்கு இறுதி செய்தான் என்பதை இறையும் எண்ணாது,
உன் உயிர்க்கு உறுதி செய்தி; இவற்கு அமர் உற்றது உண்டேல்,
பொன் உயிர்த்து ஒளிரும் பூணாய்! பொது நின்று, தருமம் நோக்கி,
மன்னுயிர்க்கு உறுதி செய்வான் மலர் அடி சுமந்து வாழ்தி.' 156

என்றனன், இனைய ஆய உறுதிகள் யாவும் சொல்லி,
தன் துணைத் தடக் கை ஆரத் தனையனைத் தழுவி, சாலக்
குன்றினும் உயர்ந்த திண் தோள் குரக்குஇனத்து அரசன், கொற்றப்
பொன் திணி வயிரப் பைம் பூண் புரவலன் தன்னை நோக்கி, 157

'நெய் அடை நெடு வேல் தானை நீல் நிற நிருதர் என்னும்
துய் அடை கனலி அன்ன தோளினன், தொழிலும் தூயன்;
பொய் அடை உள்ளத்தார்க்குப் புலப்படாப் புலவ! மற்று உன்
கையடை ஆகும்' என்ன, இராமற்குக் காட்டும் காலை, 158

தன் அடி தாழ்தலோடும், தாமரைத் தடங் கணானும்,
பொன் உடைவாளை நீட்டி, 'நீ இது பொறுத்தி' என்றான்;
என்னலும், உலகம் ஏழும் ஏத்தின; இறந்து, வாலி,
அந் நிலை துறந்து, வானுக்கு அப் புறத்து உலகன் ஆனான். 159

கை அவண் நெகிழ்தலோடும், கடுங் கணை, கால வாலி
வெய்ய மார்பு அகத்துள் தங்காது உருவி, மேக்கு உயர மீப் போய்,
துய்ய நீர்க் கடலுள் தோய்ந்து, தூய் மலர் அமரர் சூட்ட,
ஐயன் வெந் விடாத கொற்றத்து ஆவம் வந்து அடைந்தது அன்றே 160

கம்ப இராமாயணம் 
கிட்கிந்தா காண்டம் 
7. வாலி வதைப் படலம்
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி