Friday, 21 February 2020

கம்பராமாயணம் வாலி வதைப் படலம் - KambaRamayanam 4-7 130

வாலியின் முடிவு


இராமன் விளக்கம் தொடர்கிறது. 
சிவன் மீது பத்தி காட்டிய தவத்தின் பயனாக நிலன், நீர், தீ, காற்று என்னும் 4 பூதங்களையும் ஒத்த ஆற்றலினைப் பெற்றுள்ளாய் 121

அருந்தவம் செய்த தவமுனிவர்களில் சிலர் தவப்பயனுக்கு ஏற்ப வேறு உருவம் கொண்டுள்ளனர் 122

எக்குலத்தவரும் அவரவர் செயலின் தன்மையால் மேன்மையும், கீழ்மையும் பெற்றுள்ளனர். 
இது மனுநீதி என்றான் இராமன் 123

'மறைந்து நின்று எய்வது முறையோ?' என வாலி வினவ, இலக்குவன் விடை பகர்தல்

அவ்வாறே அகுக. 
செவ்வியனாகிய நீ, வேடன் விலங்குகளை மறைந்திருந்து அம்பு எய்வது போல, நீ மறைந்திருந்து என்மேல்  அம்பு எய்த்து செவ்வியது ஆகுமா - என வாலி வினவினான் 124

அதற்கு இலக்குவன் விடை தருகிறான் 
உன்னிடம் சரண் புகுந்த உன் தம்பியை நீ தென்புலம் அனுப்புவேன் என்று தாக்கினாய். 
உன் தம்பி உயிருக்கு இராமன் அடைக்கலம் தந்தான். 
அதனால் மறைந்திருந்து இராமன் கொன்றான் - என்றான் இலக்குவன் 125
[இது ஏமாற்று விடை]

இராமன் அறத்திறம் அழிய எதும் செய்யமாட்டான் என்ற முடிவுக்கு வந்தான். இராமனை வணங்கினான் 126

நாயேன் தீமைகளைப் பொறுத்தருள வேண்டும் - என்று இராமனை வேண்டிக்கொண்டான் 127

எந்தாய்! உன்னை இரந்து வேண்டிக்கொள்கிறேன். 
என்னைக் குரங்கு என்று கருதி, நாயேன் கூறியனவற்றை மனத்தில் கொள்ளவேண்டாம். 
ஐயா! எனக்கு ஒரு வரம் தருதல் வேண்டும் - என்றான் 128

என்  உயிர் பிரியும் வேளையில் அறிவு தந்தருளினாய் 
பாவம் - தருமம், பகை - உறவு எல்லாம் நீ 129

நான் பெற்றிருக்கும் வரத்தின் வலிமை அனைத்தையும் போக்கி, என் உயிரை வாங்க வல்லது உன் தரும அம்பைத் தவிர வேறு உண்டோ - என்றான் 130

பாடல் 

'காலன் ஆற்றல் கடிந்த கணிச்சியான்-
பாலின் ஆற்றிய பத்தி பயத்தலால்,
மாலினால் தரு வன் பெரும் பூதங்கள்
நாலின் ஆற்றலும் ஆற்றுழி நண்ணினாய். 121

'மேவ அருந் தருமத் துறை மேவினார்,
ஏவரும், பவத்தால் இழிந்தோர்களும்;
தா அருந் தவரும், பல தன்மை சால்
தேவரும், உளர், தீமை திருத்தினார். 122

'இனையது ஆதலின், எக் குலத்து யாவர்க்கும்,
வினையினால் வரும், மேன்மையும் கீழ்மையும்;
அனைய தன்மை அறிந்தும், அழித்தனை,
மனையின் மாட்சி' என்றான், மனு நீதியான். 123

அவ் உரை அமையக் கேட்ட அரி குலத்து அரசும், 'மாண்ட
செவ்வியோய்! அனையது ஆக! செருக் களத்து உருத்து எய்யாதே,
வெவ்விய புளிஞர் என்ன, விலங்கியே மறைந்து, வில்லால்
எவ்வியது என்னை?' என்றான்; இலக்குவன் இயம்பலுற்றான்: 124

'முன்பு, நின் தம்பி வந்து சரண் புக, "முறை இலோயைத்
தென் புலத்து உய்ப்பென்" என்று செப்பினன்; செருவில், நீயும்,
அன்பினை உயிருக்கு ஆகி, "அடைக்கலம் யானும்" என்றி
என்பது கருதி, அண்ணல், மறைந்து நின்று எய்தது' என்றான். 125

கவி குலத்து அரசு, அன்ன கட்டுரை கருத்தில் கொண்டான்;
அவியுறு மனத்தன் ஆகி, 'அறத் திறன் அழியச் செய்யான்
புவியிடை அண்ணல்' என்பது எண்ணினில் பொருந்த, முன்னே
செவியுறு கேள்விச் செல்வன் சென்னியின் இறைஞ்சி, சொன்னான்: 126

'தாய் என உயிர்க்கு நல்கி, தருமமும், தகவும், சால்பும்,
நீ என நின்ற நம்பி! நெறியினின் நோக்கும் நேர்மை
நாய் என நின்ற எம்பால், நவை அற உணரலாமே?
தீயன பொறுத்தி' என்றான் - சிறியன சிந்தியாதான். 127

இரந்தனன் பின்னும், 'எந்தை! யாவதும் எண்ணல் தேற்றாக்
குரங்கு எனக் கருதி, நாயேன் கூறிய மனத்துக் கொள்ளேல்;
அரந்தை வெம் பிறவி நோய்க்கும் அரு மருந்து அனைய ஐயா!
வரம் தரும் வள்ளால்! ஒன்று கேள்!' என மறித்தும் சொல்வான்: 128

'ஏவு கூர் வாளியால் எய்து, நாய் அடியனேன்
ஆவி போம் வேலைவாய், அறிவு தந்து அருளினாய்;
மூவர் நீ! முதல்வன் நீ! முற்றும் நீ! மற்றும் நீ!
பாவம் நீ! தருமம் நீ! பகையும் நீ! உறவும் நீ! 129

'புரம் எலாம் எரி செய்தோன் முதலினோர் பொரு இலா
வரம் எலாம் உருவி, என் வசை இலா வலிமை சால்
உரம் எலாம் உருவி, என் உயிர் எலாம் நுகரும் நின்
சரம் அலால், பிறிது வேறு உளது அரோ, தருமமே? 130

கம்ப இராமாயணம் 
கிட்கிந்தா காண்டம் 
7. வாலி வதைப் படலம்
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி