Tuesday, 18 February 2020

கம்பராமாயணம் நட்புக் கோட் படலம் - KambaRamayanam 4-3 70

வாலி தம்பியை அடித்தல்


சுக்கிரீவன் வாலியின் காலடிகளை வணங்கினான். 61
நீ இல்லாமையால் இது நிகழ்ந்தது. 
இனி, உன் கணங்களைக் காப்பாறுதல் உன் கடமை என்றான் 62
நீயா எனக்கு அரசு நல்குவது - என்று சீறினான் 63
கடலைக் கடைந்த கைகளால் தம்பியைத் துன்புறுத்தினான் 64
காற்றைப்போல் தூக்கி எறிந்தான் 65
அஞ்சி, சக்கர மலையில் இருந்தபோது அங்கும் வந்து துன்புறுத்தினான் 66
வாலி எற்றினான் 
பிழைத்து வந்து வாழ்கிறோம் 67
இந்த மலைக்கு அவன் வரமுடியாத சாபம் ஒன்று இருப்பதால் இங்கு வந்து வாழ்கிறோம் என்றான் அனுமன் 68
இவன் மனைவியோடு அவன் (வாலி) விரும்பி வாழ்கிறான். 69
இதனைக் கேட்ட இராமன் வாய் சினத்தில் துடித்தது 70

பாடல்


'ஏறினான் அவன்; எவரும் அஞ்சுறச்
சீறினான்; நெடுஞ் சிகரம் எய்தினான்;
வேறு இல், ஆதவன் புதல்வன், மெய்ம்மை ஆம்
ஆறினானும், வந்து அடி வணங்கினான். 61

'வணங்கி, "அண்ணல்! நின் வரவு இலாமையால்,
உணங்கி, உன் வழிப் படர உன்னுவேற்கு,
இணங்கர் இன்மையால், இறைவ! நும்முடைக்
கணங்கள், 'காவல், உன் கடன்மை"' என்றனர். 62

'"ஆணை அஞ்சி, இவ் அரசை எய்தி வாழ்
நாண் இலாத என் நவையை, நல்குவாய்;
பூண் நிலாவு தோளினை! பொறாய்!" என,
கோணினான், நெடுங் கொடுமை கூறினான். 63

'அடல் கடந்த தோள் அவனை அஞ்சி, வெங்
குடல் கலங்கி, எம் குலம் ஒடுங்க, முன்
கடல் கடைந்த அக் கரதலங்களால்,
உடல் கடைந்தனன், இவன் உலைந்தனன். 64

'இவன், உலைந்து உலைந்து, எழு கடல் புறத்து
அவனியும் கடந்து, எயில் அடைந்தனன்;
கவனம் ஒன்று இலான், கால் கடாயென,
அவனி வேலை ஏழ், அரியின் வாவினான். 65

'நக்கரக் கடல் புறத்து நண்ணும் நாள்,
செக்கர் மெய்த் தனிச் சோதி சேர்கலாச்
சக்கரப் பொருப்பின் தலைக்கும் அப்
பக்கம் உற்று, அவன் கடிது பற்றினான். 66

'பற்றி, அஞ்சலன் பழியின், வெஞ்சினம்
முற்றி நின்ற, தன் முரண் வலிக் கையால்,
எற்றுவான் எடுத்து எழுதலும், பிழைத்து,
அற்றம் ஒன்று பெற்று, இவன், அகன்றனன். 67

'எந்தை! மற்று அவன் எயிறு அதுக்குமேல்,
அந்தகற்கும் ஓர் அரணம் இல்லையால்;
இந்த வெற்பின் வந்து இவன் இருந்தனன் -
முந்தை உற்றது ஓர் சாபம் உண்மையால். 68

'உருமை என்று இவற்கு உரிய தாரம் ஆம்
அரு மருந்தையும், அவன் விரும்பினான்;
இருமையும் துறந்து, இவன் இருந்தனன்;
கருமம் இங்கு இது; எம் கடவுள்!' என்றனன். 69

பொய் இலாதவன் வரன்முறை இம் மொழி புகல,
ஐயன், ஆயிரம் பெயருடை அமரர்க்கும் அமரன்,
வையம் நுங்கிய வாய் இதழ் துடித்தது; மலர்க் கண் -
செய்ய தாமரை, ஆம்பல் அம் போது எனச் சிவந்த. 70


கம்ப இராமாயணம் 
கிட்கிந்தா காண்டம் 
3. நட்புக் கோட் படலம்

கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி