Tuesday, 18 February 2020

கம்பராமாயணம் நட்புக் கோட் படலம் - KambaRamayanam 4-3 60

வாலி, மாயாவி - போர் 


வாலியை எதிர்த்துப் போரிட முடியாத மாயாவி என்பவன் குகைக்குள் ஓடி ஒளிந்துகொண்டான். 
வாலி குகைக்குள் சென்று அவனோடு போரிட்டான். 51

வாலியின் தம்பி சுக்கிரீவன். 

குகைக்குள் சென்று வாலியை மீட்டுவருவேன் என்றான். 52
அப்போது 14 பருவங்கள் (28 மாதங்கள்) ஆயின 53
அண்ணனுக்காக அழும் தம்பியை வானரக் குடிமக்கள் தேற்றினர். 
குறை ஒன்றுமில்லை 
முடி சூட்டிக்கொள் என்றனர் 54
குகைக்குள் சென்று அண்ணனைத் தேடுவேன். 
காணவில்லை என்றால், அண்ணனை எதிர்த்தவனோடு போராடிக் கொல்வேன். முடியாவிட்டால் மாள்வேன் என்றான் சுக்கிரீவன் 55
மக்கள் தடுத்து சுக்கிரீவனுக்கு முடி சூட்டினர் 56

மாயாவி குகையிலிருந்து வெளிவர முடியாமல் குகை வாயிலை அடைத்தனர் 57
குன்றின் மேல் இருந்து அரசாள வைத்தோம் 58
மாயாவியின் உயிரை உண்ட வாலி வெளியே வந்தான். 
தம்பி நாட்டைக் காப்பாற்றியது நன்று என்று கூறிச் சினம் கொண்டான் 59
சுக்கிரீவனை வாலால் சுற்றிக் காலால் எற்றினான் 60

பாடல்


'முட்டி நின்று, அவன் முரண் உரத்தின் நேர்
ஒட்ட, அஞ்சி, நெஞ்சு உலைய ஓடினான்;
"வட்ட மண்டலத்து அரிது வாழ்வு" எனா,
எட்ட அரும் பெரும் பிலனுள் எய்தினான். 51

'எய்து காலை, அப் பிலனுள் எய்தி, "யான்
நொய்தின் அங்கு அவற் கொணர்வென்; - நோன்மையாய்!-
செய்தி, காவல், நீ, சிறிது போழ்து" எனா,
வெய்தின் எய்தினான், வெகுளி மேயினான். 52

'ஏகி, வாலியும் இருது ஏழொடு ஏழ்
வேக வெம் பிலம் தடவி, வெம்மையான்
மோக வென்றிமேல் முயல்வின் வைகிட,
சோகம் எய்தினன், துணை துளங்கினான். 53

'அழுது அழுங்குறும் இவனை, அன்பினின்
தொழுது இரந்து, "நின் தொழில் இது; ஆதலால்,
எழுது வென்றியாய்! அரசு கொள்க!" என,
"பழுது இது" என்றனன், பரியும் நெஞ்சினான். 54

'என்று, தானும், "அவ் வழி இரும் பிலம்
சென்று, முன்னவன் - தேடுவேன்; அவற்
கொன்றுளான் தனைக் கொல ஒணாது எனின்,
பொன்றுவேன்" எனா, புகுதல் மேயினான். 55

'தடுத்து, வல்லவர் தணிவு செய்து, நோய்
கெடுத்து, மேலையோர் கிளத்து நீதியால்
அடுத்த காவலும், அரிகள் ஆணையால்
கொடுத்தது உண்டு; இவன் கொண்டனன் கொலாம்? 56

'அன்ன நாளில், மாயாவி, அப் பிலத்து,
இன்ன வாயினூடு எய்தும் என்ன, யாம்,
பொன்னின் மால் வரைப் பொருப்பு ஒழித்து, வேறு
உன்னு குன்று எலாம் உடன் அடுக்கினேம். 57

'சேமம் அவ் வழிச் செய்து, செங் கதிர்க்
கோமகன் தனைக் கொண்டுவந்து, யாம்
மேவு குன்றின்மேல் வைகும் வேலைவாய்,
ஆவி உண்டனன் அவனை, அன்னவன். 58

'ஒளித்தவன் உயிர்க் கள்ளை உண்டு, உளம்
களித்த வாலியும், கடிதின் எய்தினான்;
விளித்து நின்று, வேறு உரை பெறான்; "இருந்து
அளித்தவாறு நன்று, இளவலார்!" எனா, 59

'வால் விசைத்து, வான் வளி நிமிர்ந்தெனக்
கால் விசைத்து, அவன் கடிதின் எற்றலும்,
நீல் நிறத்து விண் நெடு முகட்டவும்,
வேலை புக்கவும், பெரிய வெற்பு எலாம். 60

கம்ப இராமாயணம் 
கிட்கிந்தா காண்டம் 
3. நட்புக் கோட் படலம்
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி