Tuesday, 18 February 2020

கம்பராமாயணம் நட்புக் கோட் படலம் - KambaRamayanam 4-3 20

சுக்கிரீவன் இராமனைக் காணல்


அனுமன் சுக்கிரீவனிடம் சொல்கிறான் 
மாரீசன் மாயமானாய்ச் சென்று மாண்டான் 11
கவந்தன் மாண்டான் 12
முனிவர்கள் இவனுக்காகத் தவம் கிடக்கின்றனர் 13
அரக்க அரசன் இவன் மனைவியைத் தூக்கிச் சென்றான். 
அவளைத் தெடும் பேறு உனக்குக் கிடைத்துள்ளது. 14
நீ இராமனிடம் வருக - என்றான் 15

சுக்கிரீவன் இராமனை வந்து கண்டான் 16
நிலா ஒளியில் தோன்றும் மரகத மலை போன்ற இராமன் தோன்றினான் 17
படிவ நோன்பு உருவில் இருப்பது கண்டான் 18
தேவர் குழுவை மானுடம் வென்றது 19
இராமனிடம் சென்ற சுக்கிரீவனை இராமன் இரு கைகளையும் நீட்டி அழைத்துச் சென்று அமரச் செய்தான் 20

பாடல்


'ஆய மால் நாகர் தாழ் ஆழியானே அலால்,
காயமான் ஆயினான் ஆவனே? காவலா!
நீ அம் மான் நேர்தியால்; நேர் இல் மாரீசன் ஆம்
மாய மான் ஆயினான் மா யமான் ஆயினான். 11

'உக்க அந்தமும், உடல் பொறை துறந்து உயர் பதம்
புக்க அந்தமும், நமக்கு உரை செயும் புரையவோ -
திக்கு அவம் தர, நெடுந் திரள் கரம், சினவு தோள்,
அக் கவந்தனும், நினைந்து அமரர் தாழ் சவரிபோல்? 12

'முனைவரும் பிறரும், மேல், முடிவு அரும் பகல் எலாம்,
இனையர் வந்து உறுவர் என்று, இயல் தவம் புரிகுவார்;
வினை எனும் சிறை துறந்து உயர் பதம் விரவினார்
எனையர் என்று உரைசெய்கேன்? - இரவிதன் சிறுவனே! 13

'மாயையால், மதி இலா நிருதர்கோன், மனைவியைத்
தீய கான் நெறியின் உய்த்தனன்; அவள் - தேடுவார்,
நீ, ஐயா, தவம் இழைத்துடைமையால், நெடு மனம்
தூயையா உடையையால், உறவினைத் துணிகுவார். 14

'தந்திருந்தனர் அருள்; தகை நெடும் பகைஞன் ஆம்
இந்திரன் சிறுவனுக்கு இறுதி, இன்று இசை தரும்;
புந்தியின் பெருமையாய்! போதரு' என்று உரை செய்தான் -
மந்திரம் கெழுமு நூல் மரபு உணர்ந்து உதவுவான். 15

அன்ன ஆம் உரை எலாம் அறிவினால் உணர்குவான்,
'உன்னையே உடைய எற்கு அரியது எப் பொருள் அரோ?
பொன்னையே பொருவுவாய்! போது' என, போதுவான்,
தன்னையே அனையவன் சரணம் வந்து அணுகினான். 16

கண்டனன் என்ப மன்னோ - கதிரவன் சிறுவன், காமர்
குண்டலம் துறந்த கோல வதனமும், குளிர்க்கும் கண்ணும்,
புண்டரிகங்கள் பூத்துப் புயல் தழீஇப் பொலிந்த திங்கள்
மண்டலம் உதயம் செய்த மரகதக் கிரி அனானை. 17

நோக்கினான்; நெடிது நின்றான்; 'நொடிவு அருங் கமலத்து அண்ணல்
ஆக்கிய உலகம் எல்லாம், அன்று தொட்டு இன்று காறும்'
பாக்கியம் புரிந்த எல்லாம் குவிந்து, இரு படிவம் ஆகி,
மேக்கு உயர் தடந் தோள் பெற்று, வீரர் ஆய் விளைந்த' என்பான் 18

தேறினன் - 'அமரர்க்கு எல்லாம் தேவர் ஆம் தேவர் அன்றே,
மாறி, இப் பிறப்பில் வந்தார் மானிடர் ஆகி மன்னோ;
ஆறு கொள் சடிலத்தானும், அயனும், என்று இவர்கள் ஆதி
வேறு உள குழுவை எல்லாம், மானுடம் வென்றது' அன்றே! 19

என நினைந்து, இனைய எண்ணி, இவர்கின்ற காதல் ஓதக்
கனை கடல் கரைநின்று ஏறா, கண் இணை களிப்ப நோக்கி,
அனகனைக் குறுகினான்; அவ் அண்ணலும், அருத்தி கூர,
புனை மலர்த் தடக் கை நீட்டி, 'போந்து இனிது இருத்தி' என்றான் 20

கம்ப இராமாயணம் 
கிட்கிந்தா காண்டம் 
3. நட்புக் கோட் படலம்

கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி