Tuesday, 25 February 2020

கம்பராமாயணம் கிட்கிந்தைப் படலம் - KambaRamayanam 4-11 90

சுக்கிரீவன் தன் தவற்றினை உணர்தல்


அனுமன் மேலும் கூறினான். இலக்குவன் வரும் வேகம் கண்டு வானர வீரர்கள் நீ இருக்கும் வாயிலைக் கற்குன்றுகளால் அடைத்தனர்.  81
இலக்குவன் அதனைக் காலால் உதைத்துத் தகர்த்தான். 82
அப்போது அன்னை தாரை வந்து இலக்குவனை வணங்கினாள். 83
நாங்கள் என்ன பிழை செய்தோம் என்று வினவினாள். 84
தாரையைக் கண்ட இலக்குவன் சினம் தணிந்தான். சுக்கிரீவன் விதிமுறைமையை மறக்கவில்லை. தூதர்களை அனுப்பியுள்ளான், என்றாள். இதுதான் இங்கு நிகழ்ந்தது, என்று அனுமன் தெரிவித்ததான். 85
இலக்குவன் வரவை முன்னமே ஏன் தெரிவிக்கவில்லை என சுக்கிரீவன் வினவினான். 86
முன்பே சொன்னேன். களிமயக்கத்தில் நீ அதனை உணர்ந்துகொள்ளவில்லை. அனுமனிடம் சென்று கூறினேன். இப்போதே இலக்குவனைக் காண்க, என்றான் அங்கதன். 87
மகனே! நறவு உண்ட மயக்கத்தில் கிடந்த எனக்கு இலக்குவனைக் காண வெட்கமாக இருக்கிறது, என்று சுக்கிரீவன் தெரிவித்தான். 88

கருமத்தால் நாணுதல் நாணுத்  திருநுதல் நல்லவர் நாணுப் பிற (திருக்குறள்) சுக்கிரீவன் தன் தகாத செயலுக்கு நாணினான்.

காமம் மாயை என அறிந்திருந்தும் மயங்கினேன். 89
தீயை நெய் ஊற்றி அணைப்பவர் போல, தெரிந்தும் தீவினை செய்தேன் என்றல்லாம் சொல்லிக்கொண்டு சுக்கிரீவன் கலங்கினான். 90

பாடல்

'வருகின்ற வேகம் நோக்கி, வானர வீரர், வானைப்
பொருகின்ற நகர வாயில் பொற் கதவு அடைத்து, கற் குன்று
அருகு ஒன்றும் இல்லா வண்ணம் வாங்கினர் அடுக்கி, மற்றும்
தெரிகின்ற சினத் தீப் பொங்க, செருச் செய்வான் செருக்கி நின்றார். 81

'ஆண்தகை, அதனை நோக்கி, அம் மலர்க் கமலத் தாளால்
தீண்டினன்; தீண்டாமுன்னம், தெற்கொடு வடக்குச் செல்ல
நீண்ட கல் மதிலும், கொற்ற வாயிலும், நிரைத்த குன்றும்,
கீண்டன தகர்ந்து, பின்னைப் பொடியொடும் கெழீஇய அன்றே 82

'அந் நிலை கண்ட, திண் தோள் அரிக் குலத்து அனிகம், அம்மா!
எந் நிலை உற்றது என்கேன்? யாண்டுப் புக்கு ஒளித்தது என்கேன்?
இந் நிலை கண்ட அன்னை, ஏந்து இழை ஆயத்தொடு,
மின் நிலை வில்லினானை வழி எதிர் விலக்கி நின்றாள் 83

'மங்கையர் மேனி நோக்கான், மைந்தனும், மனத்து வந்து
பொங்கிய சீற்றம் பற்றிப் புகுந்திலன்; பொருமி நின்றான்;
நங்கையும், இனிது கூறி, "நாயக! நடந்தது என்னோ,
எங்கள்பால்?" என்னச் சொன்னாள்; அண்ணலும் இனைய சொன்னான். 84

'அது பெரிது அறிந்த அன்னை, அன்னவன் சீற்றம் மாற்றி,
"விதி முறை மறந்தான் அல்லன்; வெஞ் சினச் சேனை வெள்ளம்
கதுமெனக் கொணரும் தூது கல் அதர் செல்ல ஏவி,
எதிர் முறை இருந்தான்" என்றாள்; இது இங்குப் புகுந்தது' என்றான். 85

சொற்றலும், அருக்கன் தோன்றல் சொல்லுவான், 'மண்ணில் விண்ணில்
நிற்க உரியார்கள் யாவர், அனையவர் சினத்தின் நேர்ந்தால்?
விற்கு உரியார், இத் தன்மை வெகுளியின் விரைவின் எய்த,
எற்கு உரையாது, நீர் ஈது இயற்றியது என்கொல்?' என்றான் 86

'உணர்த்தினேன் முன்னர்; நீ அஃது உணர்ந்திலை; உணர்வின் தீர்ந்தாய்;
புணர்ப்பது ஒன்று இன்மை நோக்கி, மாருதிக்கு உரைப்பான் போனேன்;
இணர்த் தொகை ஈன்ற பொன் - தார் எறுழ் வலித் தடந் தோள் எந்தாய்!
கணத்திடை, அவனை, நீயும் காணுதல் கருமம்' என்றான் 87

உறவுண்ட சிந்தையானும் உரை செய்வான்; 'ஒருவற்கு இன்னம்
பெறல் உண்டே, அவரால் ஈண்டு யான் பெற்ற பேர் உதவி? உற்றது
இறல் உண்டே? என்னின் தீர்வான் இருந்த பேர் இடரை எல்லாம்,
நறவு உண்டு மறந்தேன்; காண நாணுவல், மைந்த!' என்றான் 88

'ஏயின இது அலால், மற்று, ஏழைமைப் பாலது என்னோ?
"தாய் இவள், மனைவி" என்னும் தெளிவு இன்றேல், தருமம் என் ஆம்?
தீவினை ஐந்தின் ஒன்று ஆம்; அன்றியும், திருக்கு நீங்கா
மாயையின் மயங்குகின்றோம்; மயக்கின் மேல் மயக்கும் வைத்தாம்! 89

'"தெளிந்து தீவினையைச் செற்றார் பிறவியைத் தீர்வர்" என்ன,
விளிந்திலா உணர்வினோரும், வேதமும், விளம்பவேயும்,
நெளிந்து உறை புழுவை நீக்கி, நறவு உண்டு நிறைகின்றேனால் -
அளிந்து அகத்து எரியும் தீயை நெய்யினால் அவிக்கின்றாரின், 90

கம்ப இராமாயணம் 
கிட்கிந்தா காண்டம் 
11. கிட்கிந்தைப் படலம்
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி