Tuesday, 25 February 2020

கம்பராமாயணம் கிட்கிந்தைப் படலம் - KambaRamayanam 4-11 60

தாரை தந்த விளக்கம்


தாரை கழுத்தில் மங்கல அணி இல்லை. மலர் சூடவில்லை. நெற்றிக் குங்குமம் அவள் முலையில் கொட்டவில்லை. பாக்குமரம் போன்ற கழுத்தைத் துணியால் போர்த்திக்கொண்டிருந்தாள். இந்த நிலையில் தாரையைக் கண்டதும் இலக்குவன் கண்களில் நீர் துளித்தது. 51

தன் தாயர் இருவர் (கைகேயி விலக்கப்பட்டாள்) நினைவு இலக்குவனுக்கு வந்தது. வந்த காரணம் என்ன என வினவிய தாரைக்கு விளக்கலானான். 52

படையுடன் சென்று சீதையைத் தேடித் தருவதாக, சுக்கிரீவன் வாக்களித்தான். அவன் நிலையை அறிந்துவருமாறு அண்ணன் அனுப்ப வந்தேன். தெரிந்ததைக் கூறுக என்றான். 53

தாரை கூறலானாள். 

சிறியவர் தீமை செய்தால் பொறுத்துக்கொள்பவர் உன்னை அல்லால் வேறு யார் உள்ளார்? பல இடங்களுக்கும் தூதரை அனுப்பியுள்ளான். இப்போது சோர்வுற்றிருக்கிறான். 54
ஆயிரம் கோடி தூதர் சென்றுள்ளனர். அவர்கள் திரும்பும் நாள் வந்துவிட்டது. தீயன செய்யமாட்டான். 55
இவர்கள் நட்புக்காகப் போரில் மாள்வதும் செய்வான்.  56
நீங்கள் அவனுக்கு அரசு தந்தீர்கள். 57
வாலியை அம்பு கொன்ற இராமனுக்குத் துணையும் வேண்டுமோ? என்றாலும் இவர்கள் சீதையைத் தேடித் தருவார்கள். 58

இவற்றைக் கேட்ட இலக்குவன் தான் கொண்ட சினத்துக்காக நாணி நின்றான். 59
அருகில் வந்து நின்ற அனுமனை நோக்கி, நீயும் மறந்தாயோ, என்று வினவினான். எந்தை! கேட்டருள்க என்று அனுமன் கூறலானான். 60

பாடல்

மங்கல அணியை நீக்கி, மணி அணி துறந்து, வாசக்
கொங்கு அலர் கோதை மாற்றி, குங்குமம் சாந்தம் கொட்டாப்
பொங்கு வெம் முலைகள், பூகக் கழுத்தொடு மறையப் போர்த்த
நங்கையைக் கண்ட வள்ளல், நயனங்கள் பனிப்ப நைந்தான் 51

'இனையர் ஆம், என்னை ஈன்ற இருவரும்' என்ன வந்த
நினைவினால் அயர்ப்புச் சென்ற நெஞ்சினன், நெடிது நின்றான்;
'வினவினாட்கு எதிர் ஓர் மாற்றம் விளம்பவும் வேண்டும்' என்று, அப்
புனை குழலாட்கு வந்த காரியம் புகல்வது ஆனான்; 52

'"சேனையும் யானும் தேடித் தேவியைத் தருவென்" என்று,
மானவற்கு உரைத்த மாற்றம் மறந்தனன், அருக்கன் மைந்தன்;
"ஆனவன் அமைதி வல்லை அறி" என, அருளின் வந்தேன்;
மேல் நிலை அனையான் செய்கை விளைந்தவா விளம்புக!' என்றான். 53

'சீறுவாய் அல்லை - ஐய! - சிறியவர் தீமை செய்தால்,
ஆறுவாய்; நீ அலால், மற்று ஆர் உளர்? அயர்ந்தான் அல்லன்;
வேறு வேறு உலகம் எங்கும் தூதரை விடுத்து, அவ் வேலை
ஊறுமா நோக்கித் தாழ்த்தான்; உதவி மாறு உதவி உண்டோ ? 54

'ஆயிர கோடி தூதர், அரிக் கணம் அழைக்க, ஆணை
போயினர்; புகுதும் நாளும் புகுந்தது; புகல் புக்கோர்க்குத்
தாயினும் நல்ல நீரே தணிதிரால்; தருமம் அஃதலால்;
தீயன செய்யார் ஆயின், யாவரே செறுநர் ஆவார்? 55

'அடைந்தவர்க்கு அபயம் நீவிர் அருளிய அளவில் செல்வம்
தொடர்ந்து, நும் பணியின் தீர்ந்தால், அதுவும் நும் தொழிலே அன்றோ?
மடந்தைதன் பொருட்டால் வந்த வாள் அமர்க் களத்து மாண்டு
கிடந்திலர் என்னின், பின்னை, நிற்குமோ கேண்மை அம்மா? 56

'செம்மை சேர் உள்ளத்தீர்கள் செய்த பேர் உதவி தீரா;
வெம்மை சேர் பகையும் மாற்றி, அரசு வீற்றிருக்கவிட்டீர்;
உம்மையே இகழ்வர் என்னின், எளிமையாய் ஒழிவது ஒன்றோ?
இம்மையே வறுமை எய்தி, இருமையும் இழப்பர் அன்றே? 57

'ஆண்டு போர் வாலி ஆற்றல் மாற்றியது அம்பு ஒன்று ஆயின்,
வேண்டுமோ, துணையும் நும்பால்? வில்லுனும் மிக்கது உண்டோ ?
தேண்டுவார்த் தேடுகின்றீர், தேவியை; அதனைச் செவ்வே
பூண்டு நின்று உய்த்தற்பாலார், நும் கழல் புகுந்துளோரும்.' 58

என்று அவள் உரைத்த மாற்றம் யாவையும் இனிது கேட்டு,
நன்று உணர் கேள்வியாளன், அருள்வர, நாண் உட்கொண்டான்,
நின்றனன்; நிற்றலோடும், 'நீத்தனன் முனிவு' என்று உன்னி,
வன் துணை வயிரத் திண் தோள் மாருதி மருங்கின் வந்தான் 59

வந்து அடி வணங்கி நின்ற மாருதி வதனம் நோக்கி,
'அந்தம் இல் கேள்வி நீயும் அயர்த்தனை ஆகும் அன்றே,
முந்திய செய்கை?' என்றான், முனிவினும் முளைக்கும் அன்பான்,
'எந்தை கேட்டு அருளுக!' என்ன இயம்பினன், இயம்ப வல்லான்; 60

கம்ப இராமாயணம் 
கிட்கிந்தா காண்டம் 
11. கிட்கிந்தைப் படலம்
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்

1 comment:

  1. பெண்குரங்கு தாரையைத் தமிழ்ப பெண்ணாவே, தமிழர் பண்பாட்டுடன் வாழ்பவளாகவே, கம்பன் காட்டுகிறான்.

    ReplyDelete

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி