Monday, 24 February 2020

கம்பராமாயணம் கிட்கிந்தைப் படலம் - KambaRamayanam 4-11 20

சுக்கிரீவன் நிலை


இலக்குவன் நடையால் மேருமலை அழுந்திற்று 11
மராமரத்தைத் துளைத்துக்கொண்டு சென்ற அம்புபோல் விரைந்து சென்றான் 12
திசையானை ஓடுவது போல் சென்றான் 13
கதிரவன் மலையில் இறங்குவது போல் சென்றான் 14
கின்கிந்தையில் சிங்கம் போல் நின்றான் 15
கண்ட குரங்குகள் அங்கதனிடம் ஓடிச் சென்று சண்ட மாருத வேகத்தில் இலக்குவன் சீற்றத்துடன் வருகிறான் என்று கூறின 16
அங்கதன் சுக்கிரீவ-தந்தையிடம் சொல்லச் சென்றான் 17

அப்போது சுக்கிரீவன் இருந்த நிலை 
நளன் கட்டித்தந்த அரண்மனையில் மலர்ப் படுக்கையில் கிடந்தான். 
இள முலைச்சியர் அவன் கால்களை வருடிக்கொண்டிருந்தனர் 18
மலர் மணத்துடன் தென்றல் வீசிக்கொண்டிருந்தது 19
மகளிர் வாய்த்தேன் உண்டு மயங்கிக் கிடந்தான் 20

பாடல்

விண் உறத் தொடர் மேருவின் சீர் வரை
மண் உறப் புக்கு அழுந்தின, மாதிரம்;
கண் உறத் தெரிவுற்றது, கட்செவி -
ஒண் நிறக் கழல் சேவடி ஊன்றலால். 11

வெம்பு கானிடைப் போகின்ற வேகத்தால்,
உம்பர் தோயும் மராமரத்து ஊடு செல்
அம்பின் போன்றனன், அன்று - அடல் வாலிதன்
தம்பிமேல் செலும் மானவன் தம்பியே. 12

மாடு வென்றி ஒர் மாதிர யானையின்
சேடு சென்று செடில், ஒரு திக்கின் மா
நாடுகின்றதும், நண்ணிய கால் பிடித்து
ஓடுகின்றதும், ஒத்துளன் ஆயினான். 13

உருக் கொள் ஒண் கிரி ஒன்றின்நின்று ஒன்றினைப்
பொருக்க எய்தினன், பொன் ஒளிர் மேனியான் -
அருக்கன் மா உதயத்தின் நின்று அத்தம் ஆம்
பருப்பதத்தினை எய்திய பண்புபோல். 14

தன் துணைத் தமையன் தனி வாளியின்
சென்று, சேண் உயர் கிட்கிந்தை சேர்ந்தவன்,
குன்றின்நின்று ஒரு குன்றினில் குப்புறும்
பொன் துளங்கு உளைச் சீயமும் போன்றனன். 15

கண்ட வானரம் காலனைக் கண்ட போல்
மண்டி ஓடின; வாலி மகற்கு, 'அமர்
கொண்ட சீற்றத்து இளையோன் குறுகினான்,
சண்ட வேகத்தினால்' என்று, சாற்றலும், 16

அன்ன தோன்றலும், ஆண் தொழிலான் வரவு
இன்னது என்று அறிவான், மருங்கு எய்தினான்;
மன்னன் மைந்தன் மனக் கருத்து உட் கொளா,
பொன்னின் வார் கழல் தாதை இல் போயினான். 17

நளன் இயற்றிய நாயகக் கோயிலுள்,
தள மலர்த் தகைப் பள்ளியில், தாழ் குழல்
இள முலைச்சியர் ஏந்து அடி தைவர,
விளை துயிற்கு விருந்து விரும்புவான்; 18

சிந்துவாரத், தரு நறை, தேக்கு, அகில்,
சந்தம், மா மயிற் சாயலர் தாழ் குழல்
கந்த மா மலர்க் காடுகள், தாவிய
மந்த மாருதம் வந்து உற, வைகுவான்; 19

தித்தியாநின்ற செங் கிடை வாய்ச்சியர்
முத்த வாள் நகை முள் எயிற்று ஊறு தேன்,
பித்தும், மாலும், பிறவும், பெருக்கலால்,
மத்த வாரணம் என்ன மயங்கினான்; 20

கம்ப இராமாயணம் 
கிட்கிந்தா காண்டம் 
11. கிட்கிந்தைப் படலம்
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி