Wednesday, 26 February 2020

கம்பராமாயணம் கிட்கிந்தைப் படலம் - KambaRamayanam 4-11 130

இராமன் தழுவினான்


முத்துப் பல்லாக்குப் படை சுக்கிரீவனின் பின்னே வந்தது. 121
இலக்குவன் நடந்து சென்றான். சுக்கிரீவன் தேரில் சென்றான். 122
படையை மலையடிவாரத்தில் நிறுத்திவிட்டு, இலக்குவன், தான், அங்கதன் என்று மூவரும் சென்றனர். 123
சுக்கிரீவன் இராமனைத் தொழுதான். அது முன்னர் பரதன் இராமனைத் தொழுதது போல இருந்தது. 124
தன் மாலை நிலத்தில் படும்படி விழுந்து தொழுதான். 125
இராமன் சினம் தணிந்து கருணை பொங்கச் சுக்கிரீவனைத் தழுவினான். சுக்கிரீவனுக்கு இருக்கை தந்தான். 126
குடிமக்கள் நலமா, என வினவினான். 127
உன் அருள் பெற்ற என் கொற்றக்குடைக்கு என்ன குறை, என முகமன் கூறினான், சுக்கிரீவன். 128
உன் அருள் வழங்கிய செல்வம் பெற்றுள்ளேன். உன் பணியை மறுத்துக் காலம் கடத்தியதைத் திருத்திக்கொண்டேன், என்றான். 129
நீ மனைவியை நினைத்து வருந்துகிறாய். நான் மனைவியோடு இன்புற்றுக் கிடந்தேன். என்று கூறி வருந்தினான். 130

பாடல்

பொன்னினின், முத்தினின், புனை மென் தூசினின்,
மின்னின மணியினின், பளிங்கின், வெள்ளியின்,
பின்னின, விசும்பினும் பெரிய; பெட்புறத்
துன்னின, சிவிகை; வெண் கவிகை சுற்றின. 121

வீரனுக்கு இளையவன் விளங்கு சேவடி
பாரினில் சேறலின், பரிதி மைந்தனும்,
தாரினின் பொலங் கழல் தழங்க, தாரணித்
தேரினில் சென்றனன், சிவிகை பின் செல. 122

எய்தினன், மானவன் இருந்த மால் வரை,
நொய்தினின் - சேனை பின்பு ஒழிய, நோன் கழல்
ஐய வில் குமரனும், தானும், அங்கதன்
கை தொடர்ந்து அயல் செல, காதல் முன் செல, 123

கண்ணிய கணிப்ப அருஞ் செல்வக் காதல் விட்டு,
அண்ணலை அடி தொழ அணையும் அன்பினால்,
நண்ணிய கவிக் குலத்து அரசன், நாள் தொறும்
புண்ணியன் - தொழு கழல் பரதன் போன்றனன். 124

பிறிவு அருந் தம்பியும் பிரிய, பேர் உலகு
இறுதியில் தான் என இருந்த ஏந்தலை,
அறை மணித் தாரினோடு, ஆரம் பார் தொட,
செறி மலர்ச் சேவடி முடியின் தீண்டினான். 125

தீண்டலும், மார்பிடைத் திருவும் நோவுற,
நீண்ட பொன் தடக் கையால் நெடிது புல்லினான்;
மூண்டு எழு வெகுளி போய் ஒளிப்ப, முன்புபோல்
ஈண்டிய கருணை தந்து, இருக்கை ஏவியே, 126

அயல் இனிது இருத்தி, 'நின் அரசும் ஆணையும்
இயல்பினின் இயைந்தவே? இனிதின் வைகுமே,
புயல் பொரு தடக் கை நீ புரக்கும் பல் உயிர்?
வெயில் இலதே, குடை?' என வினாயினான். 127

பொருளுடை அவ் உரை கேட்ட போழ்து, வான்
உருளுடைத் தேரினோன் புதல்வன், 'ஊழியாய்!
இருளுடை உலகினுக்கு இரவி அன்ன நின்
அருளுடையேற்கு அவை அரியவோ?' என்றான். 128

பின்னரும் விளம்புவான், 'பெருமையோய்! நினது
இன் அருள் உதவிய செல்வம் எய்தினேன்;
மன்னவ! நின் பணி மறுத்து வைகி, என்
புல் நிலைக் குரக்கு இயல் புதுக்கினேன்' என்றான். 129

'பெருந் திசை அனைத்தையும் பிசைந்து தேடினென்
தரும் தகை அமைந்தும், அத் தன்மை செய்திலேன்;
திருந்திழை திறத்தினால், தெளிந்த சிந்தை நீ,
வருந்தினை இருப்ப, யான் வாழ்வின் வைகினேன். 130

கம்ப இராமாயணம் 
கிட்கிந்தா காண்டம் 
11. கிட்கிந்தைப் படலம்


கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி