Wednesday, 26 February 2020

கம்பராமாயணம் கிட்கிந்தைப் படலம் - KambaRamayanam 4-11 120

படையுடன் செல்லல்


இலக்குவன் உரை - உன் மேல் வருத்தம். கருத்து வேறுபாடு. இந்த நிலையில் உண்டால் அமிர்தமும் கைக்குமன்றோ? 111
அண்ணன் மனைவியைக் காட்டுவாயானால் உன் அமிர்தம் உண்டவன் ஆவேன். இப்போது பசி இல்லை. 112
இராமன் உண்ட  பச்சிலை, கிழங்கு, காய் ஆகியவற்றின் மிச்சில் மட்டுமே உண்பேன். 113
அன்றியும் ஒன்று உள்ளது. நான் சென்று உணவு கொண்டுவந்து கொடுத்துதான் அண்ணன் உண்ண வேண்டும். எனவே, உடனே சென்றாக வேண்டும். 114
இலக்குவன் பண்பாடு தன் இனத்துக்கு இல்லையே என்று சுக்கிரீவன் வருந்தினான். 115
சுக்கிரீவன் தன் பிழையைப் பொறுத்துக்கொள்ளுமாறு இலக்குவனை வேண்டினான்.  116
தூதர்  கொண்டுவந்த படையுடன் வருக என்று அனுமனிடம் கூறினான். 117
அங்கதனும் அனுமனுடன் சென்றான். படை திரண்டு வந்தது. 118
11 ஆயிரம் கோடி யூகம் படையினர் முன்னே செல்ல, சுற்றத்தாருடன் சுக்கிரீவன் பின்னே சென்றான். 119 
வானம் பூத்தது போல, பேரிகை, சங்கு முழங்க இராமனிடம் சென்றான். 120

பாடல்

'வருத்தமும் பழியுமே வயிறு மீக் கொள,
இருத்தும் என்றால், எமக்கு இனியது யாவதோ?
அருத்தி உண்டு ஆயினும், அவலம்தான் தழீஇ,
கருத்து வேறு உற்றபின், அமிர்தும் கைக்குமால். 111

'மூட்டிய பழி எனும் முருங்கு தீ அவித்து,
ஆட்டினை கங்கை நீர் - அரசன் தேவியைக்
காட்டினை எனின் - எமைக் கடலின் ஆர் அமிர்து
ஊட்டினையால்; பிறிது உயவும் இல்லையால். 112

'பச்சிலை, கிழங்கு, காய், பரமன் நுங்கிய
மிச்சிலே நுகர்வது; வேறுதான் ஒன்றும்
நச்சிலேன்; நச்சினேன் ஆயின், நாய் உண்ட
எச்சிலே அது; இதற்கு ஐயம் இல்லையால். 113

'அன்றியும் ஒன்று உளது; ஐய! யான் இனிச்
சென்றனென் கொணர்ந்து அடை திருத்தினால், அது
நுன் துணைக் கோ மகன் நுகர்வது; ஆதலான்,
இன்று, இறை தாழ்த்தலும் இனிது அன்றாம்' என்றான் 114

வானர வேந்தனும், 'இனிதின் வைகுதல்,
மானவர் தலைமகன் இடரின் வைகவே,
ஆனது குரக்குஇனத்து எமர்கட்கு ஆம்!' எனா,
மேல் நிலை அழிந்து, உயிர் விம்மினான் அரோ. 115

எழுந்தனன் பொருக்கென, இரவி கான்முளை;
விழுந்த கண்ணீரினன், வெறுத்த வாழ்வினன்,
அழிந்து அயர் சிந்தையன், அனுமற்கு, ஆண்டு, ஒன்று
மொழிந்தனன், அவனுழைப் போதல் முன்னுவான். 116

'போயின தூதரின் புகுதும் சேனையை,
நீ உடன் கொணருதி, நெறி வலோய்!' என,
ஏயினன், அனுமனை, 'இருத்தி ஈண்டு' எனா,
நாயகன் இருந்துழிக் கடிது நண்ணுவான். 117

அங்கதன் உடன் செல, அரிகள் முன் செல,
மங்கையர் உள்ளமும் வழியும் பின் செல,
சங்கை இல் இலக்குவன் - தழுவி, தம்முனின்,
செங் கதிரோன் மகன், கடிது சென்றனன். 118

ஒன்பதினாயிர கோடி யூகம், தன்
முன் செல, பின் செல, மருங்கு மொய்ப்புற,
மன் பெருங் கிளைஞரும் மருங்கு சுற்றுற,
மின் பொரு பூணினான் செல்லும் வேலையில். 119

கொடி வனம் மிடைந்தன; குமுறு பேரியின்
இடி வனம் மிடைந்தன; பணிலம் ஏங்கின;
தடி வனம் மிடைந்தன, தயங்கு பூண் ஒளி;
பொடி வனம் எழுந்தன; வானம் போர்த்தவே. 120

கம்ப இராமாயணம் 
கிட்கிந்தா காண்டம் 
11. கிட்கிந்தைப் படலம்
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி