Monday, 24 February 2020

கம்பராமாயணம் கிட்கிந்தைப் படலம் - KambaRamayanam 4-11 10

சுக்கிரீவன் வரவில்லை


இராமன் தம்பியிடம் கூறுகிறான் 
வரும்படிச் சொன்ன காலம் கடந்துவிட்டது 
சுக்கிரீவன் வரவில்லை
என்ன செய்தான் 1

பெறமுடியாத செல்வத்தை நம்மால் பெற்றான். 
உதவியை நினைக்கவில்லை 
செய்ய வேண்டிய அறநெறியை மறந்தான்
அன்பு கிடக்கட்டும் 
நம் வீரத்தையும் மறந்துவிட்டானே 2

நன்றி கொன்றான் 
நட்பு நாரை அறுத்தான் 
இப்படிப்பட்டவனைக் கொன்று தீர்த்துக்கட்டுதல் குற்றம் ஆகுமா 
நீ சென்று அவன் எண்ணத்தை அறிந்து வா - என்றான் 3

உங்கள் வில்லம்பு இருக்கிறது 
பொறுத்திருங்கள் 
தங்கள் ஆணைப்படிச் சென்று வருகிறேன் - என்றான் இலக்குவன் 4

நஞ்சு போன்றவரை நலித்தல் வஞ்சம் அன்று 
மனுநீதி வழக்கு 5

ஒப்புக்கொண்ட நாளில் வா 
வராவிட்டால் 
உன் ஊரும் சுற்றமும், பேரும் மறைய நீ மாள்வாய் என்று சொல் 6
வராவிட்டால் உன் (இலக்குவன்) வலிமையே போதும் என்று சொல் 7
அவன் என்ன சொல்கிறான் என்று கேட்டுவந்து சொல் - என்றான் இராமன் 8

இலக்குவன் வில்லும் கையுமாய்ச் சென்றான் 9
குறுக்கு வழியில் சென்றான் 10

பாடல்

அன்ன காலம் அகலும் அளவினில்,
முன்னை வீரன், இளவலை, 'மொய்ம்பினோய்!
சொன்ன எல்லையின் ஊங்கினும் தூங்கிய
மன்னன் வந்திலன்; என் செய்தவாறு அரோ? 1

'பெறல் அருந் திருப் பெற்று, உதவிப் பெருந்
திறம் நினைந்திலன்; சீர்மையின் தீர்ந்தனன்;
அறம் மறந்தனன்; அன்பு கிடக்க, நம்
மறம் அறிந்திலன்; வாழ்வின் மயங்கினான். 2

'நன்றி கொன்று, அரு நட்பினை நார் அறுத்து,
ஒன்றும் மெய்ம்மை சிதைத்து, உரை பொய்த்துளார்க்
கொன்று நீக்குதல் குற்றத்தில் தங்குமோ?
சென்று, மற்று அவன் சிந்தையைத் தேர்குவாய். 3

'"வெம்பு கண்டகர் விண் புக வேர் அறுத்து,
இம்பர் நல் அறம் செய்ய எடுத்த விற்
கொம்பும் உண்டு; அருங் கூற்றமும் உண்டு; உங்கள்
அம்பும் உண்டு" என்று சொல்லு, நம் ஆணையே. 4

'நஞ்சம் அன்னவரை நலிந்தால், அது
வஞ்சம் அன்று; மனு வழக்கு ஆதலால்:
அஞ்சில், ஐம்பதில், ஒன்று அறியாதவன்
நெஞ்சில் நின்று நிலாவ, நிறுத்துவாய். 5

'"ஊரும், ஆளும், அரசும், உம் சுற்றமும்,
நீரும், ஆளுதிரே எனின், நேர்ந்த நாள்
வாரும்; வாரலிர், ஆம் எனின், வானரப்
பேரும் மாளும்" எனும் பொருள் பேசுவாய். 6

'"இன்னும் நாடுதும், இங்கு இவர்க்கும் வலி
துன்னினாரை" எனத் துணிந்தார் எனின்,
உன்னை வெல்ல, உலகு ஒரு மூன்றினும்,
நின் அலால் பிறர் இன்மை நிகழ்த்துவாய். 7

'நீதி ஆதி நிகழ்த்தினை, நின்று, அது,
வேதியாத பொழுது, வெகுண்டு, அவண்
சாதியாது, அவர் சொல் தரத் தக்கனை;
போதி ஆதி' என்றான் - புகழ்ப் பூணினான். 8

ஆணை சூடி, அடி தொழுது, ஆண்டு, இறை
பாணியாது, படர் வெரிந் பாழ்படாத்
தூணி பூட்டி, தொடு சிலை தொட்டு, அருஞ்
சேணின் நீங்கினன் - சிந்தையின் நீங்கலான். 9

மாறு நின்ற மரனும், மலைகளும்,
நீறு சென்று நெடு நெறி நீங்கிட,
வேறு சென்றனன் - மேன்மையின் ஓங்கிடும்
ஆறு சென்றிலன் ஆணையின் ஏகுவான். 10

கம்ப இராமாயணம் 
கிட்கிந்தா காண்டம் 
11. கிட்கிந்தைப் படலம்
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி