Monday, 24 February 2020

கம்பராமாயணம் கார்காலப் படலம் - KambaRamayanam 4-10 60

மேகமே, மின்னலே


சீதையின் பிரிவால் வருந்தும் இராமன் கூறுகிறான் 
சீதையை மறைத்து வைத்திருக்கும் ஊர் தெரியவில்லை 
கார்மேகமே! 
நீ என் ஆவியைக் கலக்குகிறாய் 51
மின்னல் பல்லைக் காட்டி வஞ்சக அரக்கர் போல் உலவுகிறாய் 52

மயிலே!
சீதையைக் கொண்டுவராமல் ஆடுகிறாயே 53
கொடியே! 
உன்னைப் போர்க்கும்போது சீதையின் இடை நினைவுக்கு வருகிறதே 54
உழை மானே!
உன்னைப்போன்ற அவள் எங்கே இருக்கிறாள் 55
அலையே
என் உறவுக்காரி இல்லாதபோது என் உயிரைக் கொல்கிறாயே 56

கொன்றைப் பூச்சரக் கொடிகளே 
என் உறவுக்காரியைக் கொண்டவர மாட்டீர்களா 57
நாகமலர் நஞ்சுள்ள பாம்பு போல் என் உயிரைக் கொல்கிறது 
முல்லைப்பூவை முடிய அவள் இல்லையே 
இராவணன் கோபம் போதாதா? இந்திரகோபம் என்னும் பூச்சியும் (அவள் கண்டு விளையாட இல்லாதபோது) வேண்டுமா 58

அன்று மாரீசன் மானாய் வந்தான் 
இன்று வாடையாய் வருகிறாயே 59
மின்னலே 
சீதை உருவமாகத் தோன்றி மறைகின்றாயே 60

பாடல்

'வார் ஏர் முலையாளை மறைக்குநர் வாழ்
ஊரே அறியேன்; உயிரோடு உழல்வேன்;
நீரே உடையாய், அருள் நின் இலையோ?
காரே! எனது ஆவி கலக்குதியோ? 51

'வெப்பு ஆர் நெடு மின்னின் எயிற்றை; வெகுண்டு,
எப் பாலும், விசும்பின் இருண்டு எழுவாய்;
அப் பாதக வஞ்ச அரக்கரையே
ஒப்பாய்; உயிர் கொண்டு அலது ஓவலையோ? 52

'அயில் ஏய் விழியார், விளை ஆர் அமுதின்
குயில் ஏய் மொழியார்க் கொணராய்; கொடியாய்!
துயிலேன் ஒருவேன் உயிர் சோர்வு உணர்வாய்;
மயிலே! எனை நீ வலி ஆடுதியோ? 53

'மழை வாடையோடு ஆடி, வலிந்து, உயிர்மேல்
நுழைவாய்; மலர்வாய் நொடியாய் - கொடியே! -
இழைவாள் நுதலாள் இடைபோல் இடையே
குழைவாய்; எனது ஆவி குழைக்குதியோ? 54

'விழையேன் விழைவானவை; மெய்ம்மையின் நின்று
இழையேன், உணர்வு என்வயின் இன்மையினால்;
பிழையேன்; உயிரோடு பிரிந்தனரால்;
உழையே! அவர் எவ் உழையார்? உரையாய்! 55

'பயில் பாடக மெல் அடி பஞ்சு அனையார்
செயிர் ஏதும் இலாரொடு தீருதியோ?
அயிராது உடனே அகல்வாய் அலையோ?
உயிரே! கெடுவாய்! உறவு ஓர்கிலையோ? 56

'ஒன்றைப் பகராய், குழலுக்கு உடைவாய்;
வன் தைப்புறு நீள் வயிரத்தினையோ! -
கொன்றைக் கொடியாய்! - கொணர்கின்றிலையோ!
என்றைக்கு உறவு ஆக இருந்தனையே? 57

'குரா அரும்பு அனைய கூர் வாள் எயிற்று வெங் குருளை நாகம்
விராவு வெங் கடுவின் கொல்லும் மேல் இணர் முல்லை, வெய்தின்
உராவ அருந் துயரம் மூட்டி, ஓய்வு அற மலைவது ஒன்றோ?
இராவண கோபம் நிற்க, இந்திரகோபம் என்னோ? 58

'ஓடை வாள் நுதலினாளை ஒளிக்கலாம் உபாயம் உன்னி,
நாடி, மாரீசனார் ஓர் ஆடக நவ்வி ஆனார்;
வாடை ஆய், கூற்றினாரும், உருவினை மாற்றி வந்தார்;
கேடு சூழ்வார்க்கு வேண்டும் உருக் கொளக் கிடைத்த அன்றே? 59

'அரு வினை அரக்கர் என்ன, அந்தரம் அதனில் யாரும்
வெருவர, முழங்குகின்ற மேகமே! மின்னுகின்றாய்;
"தருவல்" என்று இரங்கினாயோ? தாமரை மறந்த தையல்
உருவினைக் காட்டிக் காட்டி, ஒளிக்கின்றாய், ஒளிக்கின்றாயால்! 60


கம்ப இராமாயணம் 
கிட்கிந்தா காண்டம் 
10. கார்காலப் படலம்
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி