Sunday, 23 February 2020

கம்பராமாயணம் கார்காலப் படலம் - KambaRamayanam 4-10 20

மழை பொழிந்தது


வேசையர் மனம் உலாவுவது போல் ஊதைக்காற்று வீசிற்று 11
அணங்குப் பேய் தசைகளை ஈர்ப்பது போல், மகளிர் முலைகளை வாடைக்காற்று தாக்கிற்று 12
இடி மின்னலால் வானம் போர்க்களம் போலக் காணப்பட்டது 13
சனகியைப் பிரிந்த இராமன் மேல் மனமதன் காமக்கணை பாய்ச்சுவது போல் குன்றில் மழைத்தாரைகள் விழுந்தன 14
வில்லிலிருந்து அம்பு பாய்வது போல் கல்லில் விழுந்த மழைத்துளிகள் திரும்பிப் பாய்ந்தன 15
யானை மேல் வெள்ளி-வேல் எறிவது போல் மழைத்தாரைகள் விழுந்தன 16
வானவில் தோன்றிற்று 17
இராமனும் குரங்குகளு சேர்ந்து நம் குறைகளைத் தீர்த்தனர் என்று வானவர் மகிழ்ச்சியில் திளைப்பது போல மழைவெள்ளம் பெருகிற்று 18
இராவணன் தூக்கிச் சென்றபோது சீதை பொழிந்த கண்ணீர் போல் மழை பொழிந்தது 19
கணவனைப் பிரிந்திருப்போர் கலங்குமாறு பொழிந்தது 20

பாடல்

தலைமையும் - கீழ்மையும் தவிர்தல் இன்றியே,
மலையினும் மரத்தினும் மற்றும் முற்றினும்,
விலை நினைந்து உள வழி விலங்கும் வேசையர்
உலைவுறும் மனம் என, உலாய ஊதையே. 11

அழுங்குறு மகளிர், தம் அன்பர்த் தீர்ந்தவர்,
புழுங்குறு புணர் முலை கொதிப்பப் புக்கு உலாய்,
கொழுங் குறைத் தசை என ஈர்ந்து கொண்டு, அது
விழுங்குறு பேய் என, வாடை வீங்கிற்றே. 12

ஆர்த்து எழு துகள் விசும்பு அடைத்தலானும், மின்
கூர்த்து எழு வாள் எனப் பிறழும் கொட்பினும்,
தார்ப் பெரும் பணையின் விண் தழங்கு காரினும்,
போர்ப் பெருங் களம் எனப் பொலிந்தது - உம்பரே. 13

இன் நகைச் சனகியைப் பிரிந்த ஏந்தல்மேல்,
மன்மதன் மலர்க் கணை வழங்கினான் என,
பொன் நெடுங் குன்றின்மேல் பொழிந்த, தாரைகள் -
மின்னொடும் துவன்றின மேக ராசியே. 14

கல்லிடைப் படும் துளித் திவலை, கார் இடு
வில்லிடைச் சரம் என, விசையின் வீழ்ந்தன;
செல்லிடைப் பிறந்த செங் கனல்கள் சிந்தின,
அல்லிடை, மணி சிறந்து, அழல் இயற்றல்போல். 15

மள்ளர்கள் மறு படை, மான யானைமேல்
வெள்ளி வேல் எறிவன போன்ற; மேகங்கள்;
தள்ள அரும் துளி பட, தகர்ந்து சாய் கிரி,
புள்ளி வெங் கட கரி புரள்வ போன்றவே. 16

வான் இடு தனு, நெடுங் கருப்பு வில்; மழை,
மீன் நெடுங் கொடியவன்; பகழி, வீழ் துளி;
தான் நெடுஞ் சார் துணை பிரிந்த தன்மையர்
ஊனுடை உடம்பு எலாம் உக்கது ஒத்ததே. 17

'தீர்த்தனும் கவிகளும் செறிந்து, நம் பகை
பேர்த்தனர் இனி' எனப் பேசி, வானவர்
ஆர்த்தென, ஆர்த்தன மேகம்; ஆய் மலர்
தூர்த்தன ஒத்தன, துள்ளி வெள்ளமே. 18

வண்ண வில் கரதலத்து அரக்கன், வாளினன்,
விண்ணிடைக் கடிது கொண்டு ஏகும் வேலையில்,
பெண்ணினுக்கு அருங் கலம் அனைய பெய்வளை
கண் என, பொழிந்தது-கால மாரியே. 19

பரஞ்சுடர்ப் பண்ணவன், பண்டு, விண் தொடர்
புரம் சுட விடு சரம் புரையும் மின் இனம்,
அரம் சுடப் பொறி நிமிர் அயிலின், ஆடவர்
உரம் சுட உளைந்தனர், பிரிந்துளோர் எலாம். 20

கம்ப இராமாயணம் 
கிட்கிந்தா காண்டம் 
10. கார்காலப் படலம்
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி