Monday, 24 February 2020

கம்பராமாயணம் கார்காலப் படலம் - KambaRamayanam 4-10 110

கூதிர் காலம் வந்தது


சீதையின் இடரைக் களையும் பருவம் பையப்பைய வந்துகொண்டிருக்கிறது 
அந்தணர்களுக்கு உதவும் நாம் அரக்கர்க்கு உதவுவோமா? என்று இலக்குவன் இராமனிடம் கூறினான் 101

மழைப்பருவம் மாரியது 102
மங்குதல் இல்லாத கொடை நல்கிய மழைமேகம் வெளுத்தது 103
உள்ளத்தில் மாயை நீங்குவது போல, மழைகால இருள் நீங்கியது 104
போர் முடிந்ததும் முரசு முழக்கம் ஓய்வது போல் இடி முழக்கம் ஓய்ந்தது 
வாள் உறைக்குள் செல்வது போல் மின்னல் ஓளிந்துகொண்டது 105
மேலாடை போல் ஒழுகிய அருவி நீர் பூணூல் போல் ஒழுகிற்று 106
அறம் காவாதான் செல்வம் போல, ஆற்றில் நீர் குறைந்தது 107
கார்மேகம் இல்லாததால் நிலவு ஒளி வீசிற்று 108
வாடைக் காற்று வீசிற்று 109
சீதையைத் தேடிச் செல்வோம் - என்று கூறுபவை போல அன்னங்கள் மேய்ந்தன 110

பாடல்

'பைந்தொடிக்கு இடர் களை பருவம் பையவே
வந்து அடுத்துளது; இனி, வருத்தம் நீங்குவாய்;
அந்தணர்க்கு ஆகும் நாம்; அரக்கர்க்கு ஆகுமோ? -
சுந்தரத் தனு வலாய்! - சொல்லு, நீ' என்றான். 101

உறுதி அஃதே என உணர்ந்த ஊழியான்,
'இறுதி உண்டே கொல் இம் மாரிக்கு?' என்பது ஓர்
தெறு துயர் உழந்தனன் தேய, தேய்வு சென்று
அறுதியை அடைந்தது, அப் பருவம், ஆண்டு போய். 102

மள்கல் இல் பெருங் கொடை மருவி, மண் உளோர்
உள்கிய பொருள் எலாம் உதவி, அற்ற போது
எள்கல் இல் இரவலர்க்கு ஈவது இன்மையால்,
வெள்கிய மாந்தரின், வெளுத்த - மேகமே. 103

தீவினை, நல்வினை, என்னத் தேற்றிய
பேய் வினைப் பொருள்தனை அறிந்து பெற்றது ஓர்
ஆய் வினை மெய்யுணர்வு அணுக, ஆசு அறும்
மாயையின் மாய்ந்தது - மாரிப் பேர் இருள். 104

மூள் அமர் தொலைவுற, முரசு அவிந்தபோல்,
கோள் அமை கண முகில் குமுறல் ஓவின;
நீள் அடு கணை எனத் துளியும் நீங்கின;
வாள் உறை உற்றென மறைந்த, மின் எலாம். 105

தடுத்த தாள் நெடுந் தடங் கிரிகள் தாழ்வரை
அடுத்த நீர் ஒழிந்தன; அருவி தூங்கின;
எடுத்த நூல் உத்தரியத்தொடு எய்தி நின்று,
உடுத்த வால் நிறத் துகில் ஒழிந்த போன்றவே. 106

மேகம் மா மலைகளின் புறத்து வீதலால்,
மாக யாறு யாவையும் வாரி அற்றன;
ஆகையால், தகவு இழந்து, அழிவு இல் நன் பொருள்
போக, ஆறு ஒழுகலான் செல்வம் போன்றவே. 107

கடம் திறந்து எழு களிறு அனைய கார் முகில்
இடம் துறந்து ஏகலின், பொலிந்தது இந்துவும் -
நடம் திறன் நவில்வுறு நங்கைமார் முகம்,
படம் திறந்து உருவலின், பொலியும் பான்மைபோல். 108

பாசிழை மடந்தையர் பகட்டு வெம் முலை
பூசிய சந்தனம், புழுகு, குங்குமம்,
மூசின முயங்கு சேறு உலர, மொண்டு உற
வீசின, நறும் பொடி விண்டு, வாடையே. 109

மன்னவன் தலைமகன் வருத்தம் மாற்றுவான்,
அந் நெறிப் பருவம் வந்து நணுகிற்று ஆதலால்,
"பொன்னினை நாடிய போதும்" என்பபோல்,
அன்னமும், திசை திசை அகன்ற, விண்ணின்வாய். 110

கம்ப இராமாயணம் 
கிட்கிந்தா காண்டம் 
10. கார்காலப் படலம்
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்

1 comment:

  1. இராமன் நோக்கம் அந்தணர்க்கு உதவுதல்

    ReplyDelete

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி