Sunday, 9 February 2020

கம்பராமாயணம் கவந்தன் படலம் - KambaRamayanam 3-12 50

விரிஞ்சன் இராமனைப் போற்றல்


மூலமே இல்லா முதல்வா ... ... 41
ஆண்பாலோ பெண்பாலோ ... ... 42
ஆதி என்னும் பொருளுக்கு அப்பாலன் நீ ... ... 43
தாமரைப் பொகுட்டே ... ... 44
பரமேட்டி ... ... 45
பரம்பொருளே ... ... 46
பெருஞ்செல்வம் தந்தாய் ... ... 47
பிணக்கு அறுத்த எம்பெருமான் ... ... 48

இப்படிப் போற்றிக்கொண்டு எதிரில் நிற்பவன் யார் என்று இலக்குவன் வினவினான். 49
ஆராய்ந்து பார் என்று இராமன் கூறினான் 
இலக்குவன் விரிஞ்சனேயே வினவினான் 50

பாடல்

மூலமே இல்லா முதல்வனே! நீ முயலும்
கோலமோ, யார்க்கும் தெரிவு அரிய கொள்கையவால்;
ஆலமோ? ஆலின் அடையோ? அடைக் கிடந்த
பாலனோ? வேலைப் பரப்போ? பகராயே! 41

'காண்பார்க்கும் காணப்படு பொருட்கும் கண் ஆகி,
பூண்பாய்போல் நிற்றியால், யாது ஒன்றும் பூணாதாய்,
மாண்பால் உலகை வயிற்று ஒளித்து வாங்குதியால்;
ஆண்பாலோ? பெண்பாலோ? அப்பாலோ? எப்பாலோ? 42

'ஆதிப் பிரமனும் நீ; ஆதிப் பரமனும் நீ!
ஆதி எனும் பொருளுக்கு அப்பால் உண்டாகிலும் நீ!
"சோதிச் சுடர்ப் பிழம்பு நீ!" என்று சொல்லுகின்ற
வேதம் உரைசெய்தால், வெள்காரோ வேறு உள்ளார்? 43

'எண் திசையும் திண் சுவரா, ஏழ் ஏழ் நிலை வகுத்த
அண்டப் பெருங் கோயிற்கு எல்லாம் அழகுடைய
மண்டலங்கள் மூன்றின்மேல், என்றும் மலராத
புண்டரிக மோட்டின் பொகுட்டே புரை; அம்மா! 44

'மண்பால்-அமரர் வரம்பு ஆரும் காணாத
எண்பால் உயர்ந்த, எரி ஓங்கும் நல் வேள்வி
உண்பாய் நீ; ஊட்டுவாய் நீ; இரண்டும் ஒக்கின்ற
பண்பு ஆர் அறிவார்? பகராய், பரமேட்டி! 45

'நிற்கும் நெடு நீத்த நீரில் முளைத்தெழுந்த
மொக்குளே போல, முரண் இற்ற அண்டங்கள்
ஒக்க உயர்ந்து, உன்னுளே தோன்றி ஒளிக்கின்ற
பக்கம் அறிதற்கு எளிதோ? பரம்பரனே! 46

'நின் செய்கை கண்டு நினைந்தனவோ, நீள் மறைகள்?
உன் செய்கை அன்னவைதான் சொன்ன ஒழுக்கினவோ?
என் செய்தேன் முன்னம்? மறம் செய்கை எய்தினார்-
பின் செல்வது இல்லாப் பெருஞ் செல்வம் நீ தந்தாய்! 47

'மாயப் பிறவி மயல் நீக்கி மாசு இலாக்
காயத்தை நல்கி, துயரின் கரை ஏற்றி,
பேய் ஒத்தேன் பேதைப் பிணக்கு அறுத்த எம் பெருமான்!
நாய் ஒத்தேன்; என்ன நலன் இழைத்தேன் நான்?' என்றான். 48

என்று, ஆங்கு, இனிது இயம்பி, 'இன்று அறியக் கூறுவெனேல்,
ஒன்றாது, தேவர் உறுதிக்கு' என உன்னா,
தன் தாயைக் கண்ணுற்ற கன்று அனைய தன்மையன் ஆய்,
நின்றானைக் கண்டான்,-நெறி நின்றார் நேர் நின்றான். 49

'பாராய் இளையவனே! பட்ட இவன், வேறே ஓர்
பேராளன் தானாய், ஒளி ஓங்கும் பெற்றியனாய்,
நேர், ஆகாயத்தின் மிசை நிற்கின்றான்; நீ இவனை
ஆராய்!' என, அவனும், 'ஆர்கொலோ நீ?' என்றான். 50

கம்ப இராமாயணம் 
3 ஆரணிய காண்டம் 
12. கவந்தன் படலம்
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி