Sunday, 9 February 2020

கம்பராமாயணம் அயோமுகிப் படலம் - KambaRamayanam 3-11 80

அயோமுகி மூக்கு அறுபட்டது 


சீதையைத் தேடித் திரிகின்றேன் 
உன்னையும் தேடும்படி வைத்துவிட்டாயே, தம்பீ  71
நீ இல்லாமல் உன் உறவினரெல்லாம் மடியும்  நிலையை உண்டாக்கிவிட்டாயே 72
வேந்தைத் துறந்த பின் என்னுடன் வந்தாயே
விட்டுவிட்டுச் சென்றுவிட்டாயா 73
இருளில் இராமன் இவ்வாறு புலம்பிக்கொண்டு அலைந்தான் 74

பெயரைச் சொல்லிக் கூப்பிட்டுக்கொண்டே அலைந்தான் 75
எனக்கு மீண்டும் வாழ்வு வருமா என்று புலம்பினான் 76
அறத்தின் விதி இருக்குமானால் அவன் வரட்டும் என்று சொல்லிக்கொண்டு
தன் வாளை உருவித் தன்னை மாய்த்துக்கொள்ள முயன்றான் 77

இலக்குவன் அயோமுகியின் மூக்கைப் பிடித்து அரிந்தான். 
அவள் அலறினாள் 
அந்த ஒலி இராமன் செவிகளில் கேட்டது 78
கேட்டது அரக்கி ஊறு பட்டு அலறும் ஓசை இது என்று உணர்ந்தான் 79
அப்போது பொழுது விடிந்தது 80

பாடல்

'பொன் தோடு இவர்கின்ற பொலங் குழையாள்-
தன்-தேடி வருந்து தவம்புரிவேன்,
நின்-தேடி வருந்த நிரப்பினையோ?
என்-தேடினை வந்த இளங் களிறே! 71

'இன்றே இறவாது ஒழியேன்; எமரோ
பொன்றாது ஒழியார், புகல்வார் உளரால்;
ஒன்றாகிய உன் கிளையோரை எலாம்
கொன்றாய்; கொடியாய்! இதுவும் குணமோ? 72

'மாந்தா முதல் மன்னவர்தம் வழியில்,
வேந்து ஆகை துறந்தபின், மெய் உறவோர்
தாம் தாம் ஒழிய, தமியேனுடனே
போந்தாய்; எனை விட்டனை போயினையோ?' 73

என்னா உரையா, எழும்; வீழும்; இருந்து
உன்னா, உணர்வு ஓய்வுறும்; ஒன்று அலவால்;
'மின்னாது இடியாது, இருள்வாய் விளைவு ஈது
என் ஆம்? எனும், என் தனி நாயகனே. 74

நாடும், பல சூழல்கள் தோறும் நடந்து;
ஓடும், பெயர் சொல்லி உளைந்து; உயிர் போய்
வாடும் வகை சோரும்; மயங்குறுமால்-
ஆடும் களி மா மத யானை அனான். 75

'கமையாளொடும் என் உயிர் காவலில் நின்று
இமையாதவன், இத்துணை தாழ்வுறுமோ?
சுமையால் உலகூடு உழல் தொல் வினையேற்கு,
அமையாதுகொல் வாழ்வு? அறியேன்' எனுமால். 76

'அறப் பால் உளதேல், அவன் முன்னவன் ஆய்ப்
பிறப்பான் உறில், வந்து பிறக்க' எனா,
மறப் பால் வடி வாள் கொடு, மன் உயிரைத்
துறப்பான் உறுகின்ற தொடர்ச்சியின்வாய். 77

பேர்ந்தான், நெடு மாயையினில் பிரியா;
ஈர்ந்தான், அவள் நாசி பிடித்து, இளையோன்;
சோர்ந்தாள் இடு பூசல் செவித் துளையில்
சேர்ந்து ஆர்தலுமே, திருமால் தெருளா, 78

'பரல் தரு கானகத்து அரக்கர், பல் கழல்
முரற்று அரு வெஞ் சமம் முயல்கின்றார், எதிர்
உரற்றிய ஓசை அன்று; ஒருத்தி ஊறுபட்டு,
அரற்றிய குரல்; அவள் அரக்கியாம்' எனா, 79

அங்கியின் நெடும் படை வாங்கி, அங்கு அது
செங் கையில் கரியவன் திரிக்கும் எல்லையில்,
பொங்கு இருள் அப் புறத்து உலகம் புக்கது;
கங்குலும், பகல் எனப் பொலிந்து காட்டிற்றே. 80

கம்ப இராமாயணம் 
3 ஆரணிய காண்டம் 
11. அயோமுகிப் படலம்
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி