Saturday, 8 February 2020

கம்பராமாயணம் அயோமுகிப் படலம் - KambaRamayanam 3-11 60

இலக்குவனைத் தூக்கிச் சென்றாள்


இருளில் வந்திருப்பவளே! யாரடி நீ - என்றான் இலக்குவன் 51
உன் மேல் ஆசைப்பட்டு வந்த அயோமுகி என்றாள் 52
யாரும் தொடாத என் முலையைத் தழுவி 
என் உயிரை எனக்குத் தா என்றாள் 53
மீண்டும் இப்படிச் சொன்னால் 
உன் உடலை வாளால் கூறிடுவேன் என்றான் 54
கொற்றவ நீ இன்று எனக்கு உயிர் தந்தால் 
இன்று எனக்குப் பிறந்தநான் என்றாள் 55
தண்ணீரைத் தேடுகிறாய் என்றால்
என்னை அஞ்சாதே என்று சொல் போதும் 
நொடியில் கங்கை நீரையே கொண்டுவருவேன் என்றாள் 56
உன் காதையும் மூக்கையும் அறுத்தெறிவேன் ஓடிவிடு என்றான் 
அவள் இமைக்காமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் 57
தன் குகையில் அடைத்துவைத்தால் உடன்படுவான் என்று நினைத்தாள் 58
இலக்குவனைந் தூக்கிச் சென்றாள் 59
இந்திரன் ஏறும் யானை என்னுமாறும் 
முருகன் ஏறும் மயில் என்னுமாறும் எண்ணிக்கொண்டாள் 60

பாடல்

'பாவியர் ஆம் இவர், பண்பு இலர்; நம்பால்
மேவிய காரணம் வேறு இலை' என்பான்;
'மா இயல் கானின் வயங்கு இருள் வந்தாய்!
யாவள் அடீ? உரைசெய், கடிது' என்றான். 51

பேசினன், அங்கு அவள் பேசுற நாணாள்;
ஊசல் உழன்று அழி சிந்தையளும்தான்,
'நேசம் இல், அன்பினளாயினும், நின்பால்
ஆசையின் வந்த அயோமுகி' என்றாள். 52

பின்னும் உரைப்பவள், 'பேர் எழில் வீரா!
முன்னம் ஒருத்தர் தொடா முலையோடு உன்
பொன்னின் மணித் தட மார்பு புணர்ந்து, என்
இன் உயிரைக் கடிது ஈகுதி' என்றாள். 53

ஆறிய சிந்தையள் அஃது உரைசெய்ய,
சீறிய கோளரி கண்கள் சிவந்தான்;
'மாறு இல் வார் கணை, இவ் உரை வாயில்
கூறிடின், நின் உடல் கூறிடும்' என்றான். 54

மற்று அவன் அவ் உரை செப்ப, மனத்தால்
செற்றிலள்; கைத் துணை சென்னியில் வைத்தாள்;
'கொற்றவ! நீ எனை வந்து உயிர் கொள்ளப்
பெற்றிடின், இன்று பிறந்தனென்' என்றாள். 55

வெங் கதம் இல்லவன் பின்னரும், 'மேலோய்!
இங்கு நறும் புனல் நாடுதி என்னின்,
அங்கையினால் எனை, "அஞ்சலை" என்றால்,
கங்கையின் நீர் கொணர்வென் கடிது' என்றாள். 56

சுமித்திரை சேய் அவள் சொன்ன சொல் அன்ன
கமித்திலன்; 'நின் இரு காதொடும் நாசி
துமிப்பதன் முன்பு அகல்' என்பது சொல்ல,
இமைத்திலள், நின்றனள், இன்ன நினைந்தாள். 57

'எடுத்தனென் ஏகினென், என் முழைதன்னுள்
அடைத்து, இவன் வெம்மை அகற்றிய பின்னை,
உடற்படுமால், உடனே உறும் நன்மை;
திடத்து இதுவே நலன்' என்று, அயல் சென்றாள். 58

மோகனை என்பது முந்தி முயன்றாள்;
மாக நெடுங் கிரி போலியை வவ்வா
ஏகினள்-உம்பரின் இந்துவொடு ஏகும்
மேகம் எனும்படி-நொய்தினின் வெய்யாள். 59

மந்தரம் வேலையில் வந்ததும், வானத்து
இந்திரன் ஊர் பிடி என்னலும், ஆனாள்;
வெந் திறல் வேல் கொடு சூர் அடும் வீரச்
சுந்தரன் ஊர்தரு தோகையும் ஒத்தாள். 60

கம்ப இராமாயணம் 
3 ஆரணிய காண்டம் 
11. அயோமுகிப் படலம்
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி