Saturday, 8 February 2020

கம்பராமாயணம் அயோமுகிப் படலம் - KambaRamayanam 3-11 50

அரக்கி உரு


அரக்கிக்கு இலக்குவன் மேல் ஆசை 
அவனைத் தழுவுவேனா, விழுங்குவேனா என்று விம்மினாள் 41
அவனிடம் கெஞ்சுவேன் 
அவன் இசையாவிட்டால் அவனை என் குகைக்குத் தூக்கிச் செல்வேன்
நானே தழுவிக்ககொள்வேன் - என்று நினைத்துக்கொண்டாள் 42
அவளுக்கு மலைப்பாம்பு போல் முலை 
குழி விழுந்த கண் 43
நன்பகல் சூரியன் போல் முகம் 44
கடல் நீர் முழுவதையும் மொண்டுகொள்வது போல் வாய் 45
மேகங்களைப் பல்லால் கறிப்பவள் போல வந்தாள் 46
நிலமகள் நெளியும்படி நடந்து வந்தாள் 47
யாளிகள் கோத்த மாலை அணிந்திருந்தாள் 
சிங்கத்தைக் குழையாக அணிந்திருந்தாள் 48
இருளில் இலக்குவன் அவளைக் கண்டான் 49
தாடகை போல் காணப்படும் இவள் அரக்கி என உணர்ந்தான் 50

பாடல்

அழுந்திய சிந்தை அரக்கி, அலக்கண்
எழுந்து உயர் காதலின் வந்து, எதிர் நின்றாள்;
'புழுங்கும் என் நோவொடு புல்லுவென்; அன்றி,
விழுங்குவெனோ' என விம்மல் உழந்தாள். 41

'இரந்தனென் எய்தியபோது, இசையாது
சுரந்தனனேல், நனி கொண்டு கடந்து, என்
முரஞ்சினில் மேவி முயங்குவென்' என்று,
விரைந்து எதிர் வந்தனன், தீயினும் வெய்யான். 42

உயிர்ப்பின் நெருப்பு உமிழ்கின்றனள்; ஒன்ற
எயிற்றின் மலைக் குலம் மென்று இனிது உண்ணும்
வயிற்றள்; வயக் கொடு மாசுணம் வீசு
கயிற்றின் அசைத்த முலை, குழி கண்ணாள்; 43

பற்றிய கோள் அரி, யாளி, பணிக்கண்
தெற்றிய பாத சிலம்பு சிலம்ப,
இற்று உலகு யாவையும் ஈறுறும் அந் நாள்,
முற்றிய ஞாயிறு போலும் முகத்தாள். 44

ஆழி வறக்க முகக்க அமைந்த
மூழை எனப் பொலி மொய் பில வாயாள்;
கூழை புறத்து விரிந்தது ஓர் கொட்பால்,
ஊழி நெருப்பின் உருத்தனை ஒப்பாள்; 45

தடி தடவ, பல தலை தழுவ, தாள்
நெடிது அடைய, குடர் கெழுமு நிணத்தாள்;
அடி தடவ, பட அரவம் இசைக்கும்
கடி தடம் உற்றவள், உருமு கறிப்பாள்; 46

இவை இறை ஒப்பன என்ன, விழிப்பாள்;
அவை குளிர, கடிது அழலும் எயிற்றாள்;
குவை குலையக் கடல் குமுற உரைப்பாள்;
நவை இல் புவித்திரு நாண நடப்பாள். 47

நீள் அரவச் சரி, தாழ், கை, நிரைத்தாள்;
ஆள் அரவப் புலி ஆரம் அணைத்தாள்;
யாளியினைப் பல தாலி இசைத்தாள்;
கோள் அரியைக் கொடு தாழ் குழை இட்டாள்; 48

நின்றனள், ஆசையின் நீர் கலுழும் கண்
குன்றி நிகர்ப்ப, குளிர்ப்ப விழிப்பாள்
மின் திரிகின்ற எயிற்றின் விளக்கால்,
கன்று இருளில் திரி கோளரி கண்டான். 49

'பண்டையில் நாசி இழந்து பதைக்கும்
திண் திறலாளொடு தாடகை சீராள்;
கண்டகர் ஆய அரக்கர் கணத்து ஓர்
ஒண்தொடி ஆம், இவள்' என்பது உணர்ந்தான். 50

கம்ப இராமாயணம் 
3 ஆரணிய காண்டம் 
11. அயோமுகிப் படலம்
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி