Sunday, 9 February 2020

கம்பராமாயணம் அயோமுகிப் படலம் - KambaRamayanam 3-11 102

சீதை பற்றிய எண்ணம்


மூக்கு, காது, இதழ் ஆகியவற்றை நான் அரியும்போது அயோமுகி அலறிய ஓசைதான் முன்பு கேட்டது என்று கூறி இலக்குவன் இராமனை வணங்கினான்.  91
அவளை நீ கொல்லவில்லை. இது மனுநீதி என்று இராமன் பாராட்டினான் 92

வருண மந்திரம் சொல்லி தண்ணீர்த் தாகத்தை இருவரும் போக்கிக் கொண்டனர் 93

இராமனைத் தளிர்ப் படுக்கையில் படுக்க வைத்து 
இலக்குவன் அவன் காலடிகளை வருடி உறங்க வைத்தான் 94

இராமன் சீதை நினைவில் கிடந்தான் 95
அவனுக்குப் பார்க்கும் பொருளல்லாம் சீதையாகவே தோன்றிற்று 96
ஆசைக்கனவில் தழுவும்போது அவள் அவனிடம் இல்லை 97
கண்ணுறக்கம் இல்லாமல் கனவு கண்டுகொண்டிருந்தான்  98
அவனுக்கு இரவு கொடியதாயிற்று 99
வானக் கொதிப்பில் மீன் கொப்புளங்கள் தோன்றினவோ என்று எண்ணும்படி இராமன் நெஞ்சம் வெதும்பிற்று 100

பொழுது புலர்ந்தது 101
பறவைகளின் ஒலி பிரிந்த சீதையை எண்ணி அழுவது போல இராமனுக்குத் தோன்றிற்று 102

பாடல்

'துளைபடு மூக்கொடு செவி துமித்து உக,
வளை எயிறு இதழொடு அரிந்து, மாற்றிய
அளவையில் பூசலிட்டு அரற்றினாள்' என,
இளையவன் விளம்பிநின்று இரு கை கூப்பினான். 91

'தொல் இருள் தனைக் கொலத் தொடர்கின்றாளையும்,
கொல்லலை; நாசியைக் கொய்து நீக்கினாய்;
வல்லை நீ; மனு முதல் மரபினோய்' என,
புல்லினன் - உவகையின் பொருமி விம்முவான். 92

பேர அருந் துயர் அறப் பேர்ந்துளோர் என,
வீரனும், தம்பியும் விடிவு நோக்குவார்,
வாருணம் நினைந்தனர்; வான நீர் உண்டு,
தாரணி தாங்கிய கிரியில் தங்கினார். 93

கல் அகல் வெள்ளிடை, கானின் நுண் மணல்,
பல்லவம், மலர் கொடு படுத்த பாயலின்,
எல்லை இல் துயரினோடு இருந்து சாய்ந்தனன்,
மெல் அடி, இளையவன் வருட, வீரனே. 94

மயில் இயல் பிரிந்தபின், மான நோயினால்,
அயில்விலன் ஒரு பொருள்; அவலம் எய்தலால்
துயில்விலன் என்பது சொல்லற்பாலதோ?
உயிர், நெடிது உயிர்ப்பிடை, ஊசலாடுவான். 95

'மானவன் மெய் இறை மறக்கலாமையின்
ஆனதோ? அன்று எனின், அரக்கர் மாயமோ?-
கானகம் முழுவதும், கண்ணின் நோக்குங்கால்
சானகி உரு எனத் தோன்றும் தன்மையே! 96

கருங்குழல், சேயரிக் கண்ணி, கற்பினோர்க்கு
அருங் கலம், மருங்கு வந்து இருப்ப, ஆசையால்
ஒருங்குறத் தழுவுவென்; ஒன்றும் காண்கிலென்;
மருங்குல்போல் ஆனதோ வடிவம், மெல்லவே? 97

'புண்டரிகப் புது மலரில் தேன் போதி
தொண்டை அம் சேயொளித் துவர்த்த வாய் அமுது
உண்டனென்; ஈண்டு அவள் உழையள் அல்லளால்;
கண் துயில் இன்றியும் கனவு உண்டாகுமோ? 98

'மண்ணினும், வானினும், மற்றை மூன்றினும்,
எண்ணினும், பெரியது ஓர் இடர் வந்து எய்தினால்,
தண் நறுங் கருங் குழல் சனகன் மா மகள்
கண்ணினும், நெடியதோ, கொடிய கங்குலே? 99

'அப்புடை அலங்கு மீன் அலர்ந்ததாம் என-
உப்புடை இந்து என்று உதித்த ஊழித் தீ,
வெப்புடை விரி கதிர் வெதுப்ப-மெய் எலாம்
கொப்புளம் பொடித்ததோ, கொதிக்கும் வானமே? 100

இன்னன இன்னன பன்னி, ஈடு அழி
மன்னவர் மன்னவன் மதி மயங்கினான்;
அன்னது கண்டனன், அல்கினான் என,
துன்னிய செங் கதிர்ச் செல்வன் தோன்றினான். 101

'நிலம் பொறை இலது' என, நிமிர்ந்த கற்பினாள்,
நலம் பொறை கூர்தரும் மயிலை நாடிய,
அலம்புறு பறவையும் அழுவவாம் எனப்
புலம்புறு விடியலில், கடிது போயினார். 102

கம்ப இராமாயணம் 
3 ஆரணிய காண்டம் 
11. அயோமுகிப் படலம்
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி