Saturday, 25 January 2020

திருவாசகம் – திருவெண்பா – Tiruvasagam – 'Venba' poem - chapter 47

திருவெண்பா

நேரிசை வெண்பா

வெய்ய வினையிரண்டும் வெந்தகல மெய்யுருகிப்
பொய்யும் பொடியாகா தென்செய்கேன் செய்ய
திருவார் பெருந்துறையான் தேனுந்து செந்தீ
மருவா திருந்தேன் மனத்து. 617

  • பெருந்துறையான் செந்தீ தேன் தருகிறது 
  • அதனை நெருங்காமல் இருந்தேன் 
  • என் வினைகள் இரண்டும் வேகவில்லை 
  • என் பொய்மையும் பொடியாகவில்லை 
  • என் செய்வேன் 

ஆர்க்கோ அரற்றுகோ ஆடுகோ பாடுகோ
பார்க்கோ பரம்பரனே என்செய்தேன் தீர்ப்பரிய
ஆனந்த மாலேற்றும் அத்தன் பெருந்துறையான்
தானன்பர் ஆரொருவர் தாழ்ந்து. 618

  • பெருந்துறையான் ஆனந்த மயக்கம் ஏற்றும் அத்தன் 
  • அவன் அன்பர் யார் 
  • அவர் ஒருவரைத் தாழ்ந்து பணிவேன். அப்போது 
  • ஆரவாரம் செய்வேனா 
  • அரற்றுவேனா
  • ஆடுவேனா 
  • பாடுவேனா 
  • பார்த்துக்கொண்டிருப்பேனா
  • பரம்பரனே என்ன செய்வேன் 

செய்த பிழையறியேன் சேவடியே கைதொழுதே
உய்யும் வகையின் உயிர்ப்பறியேன் வையத்
திருந்துறையுள் வேல்மடுத்தன் சிந்தனைக்கே கோத்தான்
பெருந்துறையில் மேய பிரான். 619

  • நான் செய்த பிழை எனக்கே தெரியவில்லை 
  • அவன் அடியைத் தொழுதுகொண்டுதான் இருக்கிறேன் 
  • அயர்ந்து பெருமூச்சுக் கூட விடவில்லை 
  • பெருந்துறையான் தன் வேலை என் சிந்தனையில் பாய்ச்சியிருக்கிறான் 

முன்னை வினையிரண்டும் வேரறுத்து முன்னின்றான்
பின்னைப் பிறப்பறுக்கும் பேராளன் தென்னன்
பெருந்துறையில் மேய பெருங்கருணை யாளன்
வருந்துயரந் தீர்க்கும் மருந்து. 620

  • முன்னை இருவினையும் வேரோடு அறுத்தான் 
  • பின்னைப் பிறப்பு அறுப்பான் 
  • அவன் பேராளன் 
  • தென்னன் (இனியவன்) 
  • பெருங் கருணையாளன் 

அறையோ அறிவார்க் கனைத்துலகும் ஈன்ற
மறையோனும் மாலுமால் கொள்ளும் இறையோன்
பெருந்துறையும் மேய பெருமான் பிரியா
திருந்துறையும் என்னெஞ்சத் தின்று. 621

  • பிரமனும், திருமாலும் மயங்கும் இறையோன் 
  • என் நெஞ்சத்தில் பிரியாது இருக்கின்றான் 
  • தெரிந்தவர்களுக்கு இதனை எடுத்துச் சொல்லுங்கள் 

பித்தென்னை ஏற்றும் பிறப்பறுக்கும் பேச்சரிதாம்
மத்தமே யாக்கும் வந்தென்மனத்தை அத்தன்
பெருந்துறையாள் ஆட்கொண்டு பேரருளால் நோக்கும்
மருந்திறவாப் பேரின்பம் வந்து. 622

  • அவன் பேரின்ப மருந்து வந்து 
  • என்னைப் பித்தேற்றும் 
  • என் பிறப்பை அறுக்கும் 
  • பேச முடியாமல் மனத்தில் அறியாமையை உண்டாக்கும் 

வாரா வழியருளி வந்தெனக்கு மாறின்றி
ஆரா அமுதாய் அமைந்தன்றே சீரார்
திருத்தென் பெருந்துறையான் என்சிந்தை மேய
ஒருத்தன் பெருக்கும் ஒளி. 623

  • அவன் ஒளி 
  • எனக்குப் பிறவி வாரா வழியைத் தந்தது 
  • அமுதமாய் அமைந்தது 

யாவார்க்கும் மேலாம் அளவிலாச் சீருடையான்
யாவர்க்கும் கீழாம் அடியேனை யாவரும்
பெற்றறியா இன்பத்துள் வைத்தாய்க்கென் எம்பெருமான்
மற்றறியேன் செய்யும் வகை. 624

  • அவன் எல்லாருக்கும் மேலானவன் 
  • அடியேன் எல்லாருக்கும் கீழானவன் 
  • இன்பத்துள் என்னை வைத்தான் 
  • கைம்மாறு என்ன செய்வேன் 

மூவரும் முப்பத்து மூவரும் மற்றொழிந்த
தேவரும் காணாச் சிவபெருமான் மாவேறி
வையகத்தே வந்திழிந்த வார்கழல்கள் வந்திக்க
மெய்யகத்தே இன்பம் மிகும். 625

  • மேலோர்க்குத் தெரியாதவன் 
  • கீழோர்க்குத் தெரியுமாறு காளை ஏறி மண்ணுலகம் வந்திருக்கிறான் 
  • வணங்கினால் இன்பம் மேலோங்கும் 

இருந்தென்னை ஆண்டான் இணையடியே சிந்தித்
திருந்திரந்து கொள்நெஞ்சே எல்லாம் தருங்காண்
பெருந்துறையின் மேய பெருங்கருணை யாளன்
மருந்துருவாய் என்மனத்தே வந்து. 626

  • அவன் இணையடி மருந்து உருவில் எல்லாவற்றையும் தரும் 
  • நெஞ்சே! நம்பு 

இன்பம் பெருக்கி இருளகற்றி எஞ்ஞான்றும்
துன்பந் தொடர்வறுத்துச் சோதியாய் அன்பமைத்துச்
சீரார் பெருந்துறையான் என்னுடைய சிந்தையே
ஊராகக் கொண்டான் உவந்து. 627

  • என் சிந்தை அவனுக்கு ஊர் 

திருச்சிற்றம்பலம்

எட்டாம் திருமுறை - திருவாசகம் 
47. திருவெண்பா - அணைந்தோர் தன்மை
(திருப்பெருந்துறையில் அருளியது)


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி