Thursday, 30 January 2020

கம்பராமாயணம் - கரன் வதைப் படலம் - KambaRamayanam 3-6 80

படையின் அழிவு


'வாளின் வாய்களை ஈ வளைக்கின்றன; வயவர்
தோளும் நாட்டமும் இடம் துடிக்கின்றன; தூங்கி
மீளி மொய்ம்புடை இவுளி வீழ்கின்றன; விரவி,
ஞாளியோடு நின்று, உளைக்கின்ற நரிக் குலம் பலவால்; 71

 • வாளின் கூர்மையில் ஈக்கள் மொய்க்கின்றன 
 • இது தீ நிமித்தம் என்றான் அகம்பன்

'பிடி எலாம் மதம் பெய்திட, பெருங் கவுள் வேழம்
ஒடியுமால் மருப்பு; உலகமும் கம்பிக்கும்; உயர் வான்
இடியும் வீழ்ந்திடும்; எரிந்திடும் பெருந்திசை; எவர்க்கும்
முடியின் மாலைகள் புலாலொடு முழு முடை நாறும். 72

 • களிறு பொழியும் மதத்தைப் பிடி பொழிகிறது 
 • இது தீ நிமித்தம் 

'இனைய ஆதலின், "மானிடன் ஒருவன்" என்று, இவனை
நினையலாவது ஒன்று அன்று அது;-நீதியோய்!-நின்ற
வினை எலாம் செய்து வெல்லல் ஆம் தன்மையன் அல்லன்;
புனையும் வாகையாய்! பொறுத்தி, என் உரை' எனப் புகன்றான். 73

 • தீ நிமித்தம் கூறும் என் உரையைப் பெறுத்துக்கொள் - என்றான் அகம்பன் 

உரைத்த வாசகம் கேட்டலும், உலகு எலாம் உலையச்
சிரித்து, 'நன்று நம் சேவகம்! தேவரைத் தேய
அரைத்த அம்மி ஆம் அலங்கு எழில் தோள், அமர் வேண்டி
இரைத்து வீங்குவ, மானிடற்கு எளியவோ?' என்றான். 74

 • தேவரை அரைத்த அம்மி என் தோள்
 • போர் வேண்டி விம்முகிறது 
 • மானிடர்க்கு எளியதோ - என்று சொல்லி, கரன் சிரித்தான்

என்னும் மாத்திரத்து, எறி படை இடி எனா இடியா
மன்னர் மன்னவன் மதலையை, வளைந்தன-வனத்து
மின்னும் வால் உளை மடங்கலை, முனிந்தன வேழம்
துன்னினாலென, சுடு சினத்து அரக்கர் தம் தொகுதி. 75

 • அப்போது அரக்கர் படை இராமனை வளைத்துக் கொண்டது

வளைந்த காலையில், வளைந்தது, அவ் இராமன் கை வரி வில்;
விளைந்த போரையும் ஆவதும் விளம்புவதும்; விசையால்
புளைந்த பாய் பரி புரண்டன; புகர் முகப் பூட்கை
உளைந்த, மால் வரை உரும் இடி பட ஒடிந்தென்ன. 76

 • இடியில் மலை சரிந்தது போல இராமன் அம்புகளால் படை தகர்ந்தது

சூலம் அற்றன; அற்றன சுடர் மழு; தொகை வாள்
மூலம் அற்றன; அற்றன முரண் தண்டு; பிண்டி
பாலம் அற்றன; அற்றன பகழி; வெம் பகு வாய்
வேலும் அற்றன; அற்றன வில்லொடு பல்லம். 77

 • அற்றுப்பான படைகள்

தொடி துணிந்தன தோளொடு; தோமரம் துணிந்த;
அடி துணிந்தன கட களிறு; அச்சோடு, நெடுந் தேர்,
கொடி துணிந்தன; குரகதம் துணிந்தன; குல மா
முடி துணிந்தன; துணிந்தன, முளையோடு முசலம். 78

 • துணிக்கப்பட்ட படைகள்

கருவி மாவொடு, கார் மதக் கைம்மலைக் கணத்து ஊடு-
உருவி மாதிரத்து ஓடின, சுடு சரம்; உதிரம்
அருவி மாலையின் தேங்கினது; அவனியில் அரக்கர்
திருஇல் மார்பகம் திறந்தன; துறந்தன சிரங்கள். 79

 • படை கொல்லப்பட்டது

ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், கோடி, என்று உணரா
துன்று பத்திய, இராகவன் சுடு சரம் துரப்ப,
சென்று, பத்திரத் தலையின மலை திரண்டென்ன,
கொன்று, பத்தியில் குவித்தன பிணப் பெருங் குன்றம். 80

 • பிணம் குன்றம் ஆயிற்று 


கம்ப இராமாயணம் 
3 ஆரணிய காண்டம் 
6. கரன் வதைப் படலம் 
\கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி