Thursday, 30 January 2020

கம்பராமாயணம் - கரன் வதைப் படலம் - KambaRamayanam 3-6 60

படை இராமன் இருப்பிடம் வந்தது


தூடணன், திரிசிராத் தோன்றல், ஆதியர்
கோடணை முரசினம் குளிறு சேனையர்
ஆடவர் உயிர் கவர் அலங்கல் வேலினர்
பாடவ நிலையினர், பலரும் சுற்றினர். 51

 • 3 தலை கொண்ட தூடணன் படையுடன் சேர்ந்து வந்தான்

ஆன்று அமை எறி படை அழுவத்து ஆர்கலி,
வான் தொடர் மேருவை வளைத்ததாம் என,
ஊன்றின தேரினன், உயர்ந்த தோளினன்,
தோன்றினன் யாவரும் துணுக்கம் எய்தவே. 52

 • கண்டவர் நடுங்குமாறு படை சென்றது

அசும்புறு மத கரி, புரவி, ஆடகத்
தசும்புறு சயந்தனம், அரக்கர் தாள், தர,
விசும்புறு தூளியால், வெண்மை மேயின-
பசும்பரி, பகலவன், பைம் பொன் தேர் அரோ. 53

 • பகலவனின் பச்சைக் குதிரைகள் 7
 • அவை பொன் நிறம் பெறம்படி, பழுதி எழுந்தது

வனம் துகள்பட்டன, மலையின் வான் உயர்
கனம் துகள்பட்டன, கடல்கள் தூர்ந்தன,
இனம் தொகு தூளியால், இசைப்பது என் இனி?-
சினம் தொகு நெடுங் கடற் சேனை செல்லவே. 54

 • கடல் போன்ற சேனை

நிலமிசை, விசும்பிடை, நெருக்கலால், நெடு
மலைமிசை மலை இனம் வருவபோல் மலைத்
தலைமிசை, தலைமிசை, தாவிச் சென்றனர்-
கொலைமிசை நஞ்சு எனக் கொதிக்கும் நெஞ்சினார். 55

 • தாவிச் சென்றனர்

வந்தது சேனை வெள்ளம், வள்ளியோன் மருங்கு-மாயா
பந்த மா வினையம் மாளப் பற்று அறு பெற்றி யோர்க்கும்
உந்த அரு நிலையது ஆகி, உடன் உறைந்து உயிர்கள் தம்மை
அந்தகர்க்கு அளிக்கும் நோய்போல், அரக்கி முன் ஆக அம்மா! 56

 • சூர்ப்பணகை முன்னே சென்றாள்

தூரியக் குரலின், வானின் முகிற் கணம் துணுக்கம் கொள்ள;
வார் சிலை ஒலியின், அஞ்சி, உரும் எலாம், மறுக்கம் இகொள்ள;
ஆர்கலி, ஆர்ப்பின், உட்கி அசைவுற; அரக்கர் சேனை,
போர் வனத்து இருந்த வீரர் உறைவிடம் புக்கது அன்றே. 57

 • படை இராம இலக்குவர் இருப்பிடம் வந்தது

வாய் புலர்ந்து அழிந்த மெய்யின் வருத்தத்த, வழியில் யாண்டும்
ஓய்வில, நிமிர்ந்து வீங்கும் உயிர்ப்பின, உலைந்த கண்ண,
தீயவர் சேனை வந்து சேர்ந்தமை தெரிய, சென்று,
வேய் தெரிந்து உரைப்ப போன்ற-புள்ளொடு விலங்கும் அம்மா! 58

 • போர் மூளவிருப்பதை ஒற்று பார்த்து அறிவிக்கும் "வேய்" போல் பறவை ஒலி முன்னே வந்து இராமனுக்கு அறிவித்தது 

தூளியின் படலை வந்து தொடர்வுற, மரமும் தூறும்
தாள் இடை ஒடியும் ஓசை 'சடசட' ஒலிப்ப, கானத்து
ஆளியும் அரியும் அஞ்சி இரிதரும் அமலை நோக்கி
மீளி மொய்ம்பினரும், 'சேனை மேல்வந்தது உளது' என்று உன்னா, 59

 • அடுத்து புழுதி வந்தது
 • படை வருவதை இருவரும் உணர்ந்துகொண்டனர்

மின் நின்ற சிலையன், வீரக் கவசத்தன், விசித்த வாளன்,
பொன் நின்ற வடிம்பின் வாளிப் புட்டிலன், புகையும் நெஞ்சன்
'நில்; நின்று காண்டி, யான் செய் நிலை' என, விரும்பி நேரா
முன் நின்ற பின்வந்தோனை நோக்கினன், மொழியலுற்றான். 60

 • என் போரைக் காண் - என்று தம்பியிடம் சொல்லிக்கொண்டு இராமன் போரிட வந்தான் 


கம்ப இராமாயணம் 
3 ஆரணிய காண்டம் 
6. கரன் வதைப் படலம் 
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி