Thursday, 30 January 2020

கம்பராமாயணம் - கரன் வதைப் படலம் - KambaRamayanam 3-6 40

படையின் இயல்பு


ஆளிகள் பூண்டன, அரிகள் பூண்டன,
மீளிகள் பூண்டன, வேங்கை பூண்டன,
ஞாளிகள் பூண்டன, நரிகள் பூண்டன,
கூளிகள் பூண்டன, குதிரை பூண்டன, 31

  • படையில்

ஏற்றுஇனம் ஆர்த்தன, ஏனம் ஆர்த்தன,
காற்றுஇனம் ஆர்த்தன, கழுதை ஆர்த்தன,
தோற்றின மாத்திரத்து உலகு சூழ்வரும்
பாற்றுஇனம் ஆர்த்தன, பணிலம் ஆர்த்தன. 32

  • ஆர்ப்பொலி

தேர்இனம் துவன்றின; சிறு கண் செம் முகக்
கார்இனம் நெருங்கின; காலின், கால் வரு
தார்இனம் குழுமின;-தடை இல் கூற்று எனப்
பேர்இனம் கடல் எனப் பெயருங்காலையே. 33

  • தேர், காலாள் படை

மழுக்களும், அயில்களும், வயிர வாள்களும்,
எழுக்களும், தோமரத் தொகையும், ஈட்டியும்,
முழுக்களும், முசுண்டியும், தண்டும், முத் தலைக்
கழுக்களும், உலக்கையும், காலபாசமும். 34

  • போர்க்கருவிகள்
  • மழு, அநில், வாள், எழு, தோமரம், ஈட்டி, முசுண்டி, தண்டு, முத்தலைக் கழு, உலக்கை, கால-பாசம்

குந்தமும், குலிசமும், கோலும், பாலமும்,
அந்தம் இல் சாபமும், சரமும், ஆழியும்,
வெந் தொழில் வலயமும், விளங்கு சங்கமும்
பந்தமும் கப்பணப் படையும், பாசமும். 35

  • குந்தம், குலிசம், கோல், பாலம், சாபம், சரம், ஆழி, வலயம், சங்கம், கப்பணம், பாசம்

ஆதியின், அருக்கனும் அனலும் அஞ்சுறும்
சோதிய, சோரியும் தூவும் துன்னிய,-
ஏதிகள் மிடைந்தன,-இமையவர்க்கு எலாம்
வேதனை கொடுத்தன, வாகை வேய்ந்தன. 36

  • தேவர்கள் வேதனை அடைந்தனர்

ஆயிரம் ஆயிரம் களிற்றின் ஆற்றலர்;
மா இரு ஞாலத்தை விழுங்கும் வாயினர்;
தீ எரி விழியினர்;-நிருதர் சேனையின்
நாயகர், பதின்மரோடு அடுத்த நால்வரே. 37

  • 14 படைத்தலைவர்கள்

ஆறினோடு ஆயிரம் அமைந்த ஆயிரம்
கூறின ஒரு படை; குறித்த அப் படை
ஏறின ஏழினது இரட்டி என்பரால்-
ஊறின சேனையின் தொகுதி உன்னுவார். 38

  • 14 ஆயிரம் போர் வீரர்கள்

உரத்தினர்; உரும் என உரறும் வாயினர்;
கரத்து எறி படையினர்; கமலத்தோன் தரும்
வரத்தினர்; மலை என, மழை துயின்று எழு
சிரத்தினர்; தருக்கினர்; செருக்கும் சிந்தையார்; 39

  • செருக்குடன் சென்றனர்

விண் அளவிட நிமிர்ந்து உயர்ந்த மேனியர்;
கண் அளவிடல் அரு மார்பர்; காலினால்,
மண் அளவிடு நெடு வலத்தர்; வானவர்
எண் அளவிடல் அருஞ் செரு வென்று ஏறினார். 40

  • எண்ணற்ற போர்களில் வெற்றி கண்டவர்கள் அவர்கள்

கம்ப இராமாயணம் 
3 ஆரணிய காண்டம் 
6. கரன் வதைப் படலம் 
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி