Thursday, 30 January 2020

கம்பராமாயணம் - கரன் வதைப் படலம் - KambaRamayanam 3-6 30

கரன் படை சென்றது


ஒளிறு வேல் கரற்கு, உற்றது உணர்த்தினாள்-
குளிறு கோப வெங் கோள் அரிமா அட,
களிறு எலாம் பட, கை தலைமேல் உற,
பிளிறி ஓடும் பிடி அன்ன பெற்றியாள். 21

 • 14 பேர் கொல்லப்பட்ட செய்தியை, சூர்ப்பணகை கரனிடம் சொன்னாள்
 • அரிமா முன் களிறு எல்லாம் பட்டது கண்ட பிடி போல் ஆனாள் 

'அங்கு அரக்கர் அவிந்து அழிந்தார்' என,
பொங்கு அரத்தம் விழிவழிப் போந்து உக,
வெங் கரப் பெயரோன், வெகுண்டான், விடைச்
சங்கரற்கும் தடுப்ப அருந் தன்மையான். 22

 • கரன் வெகுண்டான்

'அழை, என் தேர்; எனக்கு ஆங்கு, வெம் போர்ப் படை;
உழையர் ஓடி, ஒரு நொடி ஓங்கல்மேல்,
மழையின், மா முரசு எற்றுதிர், வல்' என்றான் -
முழையின் வாள் அரி அஞ்ச முழங்குவான். 23

 • என் தேரைக் கொண்டுவாருங்கள் 
 • போர்முரசு முழக்குங்கள் - என்றான்

பேரி ஓசை பிறத்தலும், பெட்புறு
மாரி மேகம் வரம்பு இல வந்தென,
தேரின் சேனை திரண்டது; தேவர்தம்
ஊரும், நாகர் உலரும் உலைந்தவே. 24

 • மேகம் போல் படைகள் திரண்டன 

போர்ப் பெரும் பணை 'பொம்' என் முழக்கமா,
நீர்த் தரங்கம் நெடுந் தடந் தோள்களா,
ஆர்த்து எழுந்தது-இறுதியில், ஆர் கலிக்
கார்க் கருங் கடல் கால் கிளர்ந்தென்னவே. 25

 • கடலலை போல அவை சென்றன

காடு துன்றி, விசும்பு கரந்தென
நீடி, எங்கும் நிமிர்ந்த நெடுங் கொடி-
'ஓடும் எங்கள் பசி' என்று, உவந்து, எழுந்து,
ஆடுகின்ற அலகையின் ஆடவே, 26

 • எங்கள் பசி தீரும் என்று அலகைப் பேய்கள் ஆடின

தறியின் நீங்கிய, தாழ் தடக் கைத் துணை,
குறிகொளா, மத வேழக் குழு அனார்,
செறியும் வாளொடு வாளிடை தேய்ந்து உகும்
பொறியின், கான் எங்கும் வெங் கனல் பொங்கவே. 27

 • மதயானைக் கூட்டம் போல் சென்றன

முருடு இரண்டு முழங்குறத் தாக்கு ஒலி
உருள் திரண்டு எழும் தேர் ஒலியுள் புக,
அருள் திரண்ட அருக்கன் தன்மேல், அழன்று
இருள் திரண்டு வந்து ஈண்டியது என்னவே. 28

 • முருடு முழக்கம் தேரொலியோடு சேர்ந்தது

தலையில், மாசுணம், தாங்கிய தாரணி
நிலை நிலாது, முதுகை நெளிப்புற,
உலைவு இல் ஏழ் உலகத்தினும் ஓங்கிய
மலை எலாம், ஒரு மாடு தொக்கென்னவே. 29

 • உலகைத் தாங்கும் நாகம் நெளிந்தது

'வல்லியக் குழாங்களோ? மழையின் ஈட்டமோ?
ஒல் இபத் தொகுதியோ? ஓங்கும் ஓங்கலோ?
அல்ல, மற்று அரிகளின் அனிகமோ?' என,
பல் பதினாயிரம் படைக் கை வீரரே. 30

 • பல்லாயிரம் படைவீரர்கள் சென்றனர் 
 • புலிக்கூட்டமா, சிங்கக் கூட்டமா - என்னுமாறு சென்றனர்

கம்ப இராமாயணம் 
3 ஆரணிய காண்டம் 
6. கரன் வதைப் படலம் 
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி