Wednesday, 29 January 2020

கம்பராமாயணம் - கரன் வதைப் படலம் - KambaRamayanam 3-6 20

14 பேரும் மாண்டனர்


சூலம், வாள், மழு தோமரம், சக்கரம்,
கால பாசம், கதை, பொரும் கையினார்;
வேலை ஞாலம் வெருவுறும் ஆர்ப்பினார்;
ஆலகாலம் திரண்டன்ன ஆக்கையார். 11

 • படைக் கருவிகள் 

வெம்பு கோபக் கனலர் விலக்கினார்,
'நம்பி! எம் அடிமைத் தொழில் நன்று' எனா,
'உம்பர்மேல் இன்று உருத்தனை போதியோ?
இம்பர்மேல் இனி யாம் உளெமோ?' என்றார். 12

 • போர் வானுலகிலா, மண்ணுலகிலா - என்றனர்

'நன்று சொல்லினிர்; நான் இச் சிறார்கள்மேல்
சென்று போர் செயின், தேவர் சிரிப்பரால்;
கொன்று, சோரி குடித்து, அவர் கொள்கையை
வென்று மீளுதிர் மெல்லியலோடு' என்றான். 13

 • நான் இந்தச் சிறுவரிடம் பொரிட்டால் தேவர் சிரிப்பர் 
 • நீங்கள் சென்று அவர்களின் குருதியைக் குடித்துவிட்டு அவர்களிடம் இருக்கும் பெண்ணைக் கொண்டவாருங்கள் - என்றான் கரன் 

என்னலோடும், விரும்பி இறைஞ்சினார்;
சொன்ன நாண் இலி அந்தகன் தூது என,
அன்னர் பின் படர்வார் என, ஆயினார்;
மன்னன் காதலர் வைகு இடம் நண்ணினார். 14

 • இராமன் இருப்பிடம் வந்தனர்

துமிலப் போர் வல் அரக்கர்க்குச் சுட்டினாள்,
அமலத் தொல் பெயர் ஆயிரத்து ஆழியான்
நிமிலப் பாத நினைவில் இருந்த அக்
கமலக் கண்ணனை, கையினில் காட்டினாள். 15

 • சூர்ப்பணகை இராமனைக் கையால் சுட்டிக் காட்டினாள்

'எற்றுவாம் பிடித்து; ஏந்துதும்' என்குநர்,
'பற்றுவாம் நெடும் பாசத்தின்' என்குநர்,
'முற்றுவாம் இறை சொல் முறையால்' எனா,
சுற்றினார்-வரை சூழ்ந்தன்ன தோற்றத்தார். 16

 • தூக்குவோம்
 • கயிற்றால் கட்டுவோம் - என்றனர்

ஏத்து வாய்மை இராமன், இளவலை,
'காத்தி தையலை' என்று, தன் கற்பகம்
பூத்தது அன்ன பொரு இல் தடக் கையால்,
ஆத்த நாணின் அரு வரை வாங்கினான். 17

 • சீதையைக் காப்பாற்று என்று தம்பியிடம் சொல்லிவிட்டு இராமன் வில்லை வளைத்தான்

வாங்கி, வாளொடு வாளி பெய் புட்டிலும்
தாங்கி, தாமரைக் கண்ணன், அச் சாலையை
நீங்கி, 'இவ்வழி நேர்மின், அடா!' எனா,
வீங்கு தோளன் மலைதலை மேயினான். 18

 • வெளியிடத்ததுக்குச் சென்று போரிட்டான் 

மழுவும், வாளும், வயங்கு ஒளி முச் சிகைக்
கழுவும், கால வெந் தீ அன்ன காட்சியார்,
எழுவின் நீள் தடக் கை எழு நான்கையும்,
தழுவும் வாளிகளால், தலம் சார்த்தினான். 19

 • 14 பேரின் 28 கைகளையும் வெட்டி வீழ்த்தினான்

மரங்கள்போல், நெடு வாளொடு தோள் விழ,
உரங்களான் அடர்ந்தார்; உரவோன் விடும்
சரங்கள் ஓடின தைக்க, அரக்கர் தம்
சிரங்கள் ஓடின; தீயவள் ஓடினாள். 20

 • அம்பு எய்து அவர்களின் தலைகளை வீழ்த்தினான்
 • தீயவள் ஓடிவிட்டாள் 

கம்ப இராமாயணம் 
3 ஆரணிய காண்டம் 
6. கரன் வதைப் படலம் 
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி