Thursday, 30 January 2020

கம்பராமாயணம் - கரன் வதைப் படலம் - KambaRamayanam 3-6 150

தூடணன் தன் படையினருக்கு 

வீர உரை 

கூறிப் போரிடல்

அனையர் ஆகிய அரக்கரை, "ஆண் தொழிற்கு அமைந்த
வினையம் நீங்கிய மனித்தரை வெருவன்மின்" என்னா,
நினையும் நான் உமக்கு உரைப்பதும் உண்டு' என, நின்றே,
துனையும் வாம் பரித் தேரினன் தூடணன் சொன்னான். 141

 • தூடணன் இராமனிடம் வீரம் பேசினான்

'வச்சை ஆம் எனும் பயம் மனத்து உண்டு என வாழும்
கொச்சை மாந்தரைக் கோல் வளை மகளிரும் கூசார்;
நிச்சயம் எனும் கவசம்தான் நிலைநிற்பது அன்றி,
அச்சம் என்னும் ஈது ஆர் உயிர்க்கு அருந் துணை ஆமோ? 142

 • அச்சம் உயிருக்குத் துணை ஆகாது

'பூ அராவு வேல் புரந்தரனோடுதான், பொன்றா
மூவரோடுதான் முன் நின்று முட்டிய சேனையில்
ஏவர் ஓடினர் இராக்கதர்? நுமக்கு இடைந்து ஓடும்
தேவரோடு கற்றறிந்துளிரோ? மனம் திகைத்தீர்! 143

 • காமனைக் கண்டும் மூவரைக் கண்டும் ஓடாத நீங்ககள் இரானைக் கண்டு ஓடுகிறீர்களே என்றான், தன் படையினரைப் பார்த்து 

'இங்கு ஓர் மானிடற்கு, இத்தனை வீரர்கள், இடைந்தீர்;
உம் கை வாளொடு போய் விழுந்து, ஊர் புகலுற்றீர்;
கொங்கை மார்பிடைக் குளிப்புறக் களிப்புறு கொழுங் கண்
நங்கைமார்களைப் புல்லுதிரோ? நலம் நுகர்வீர்! 144

 • உங்கள் மங்கையரை அணைக்கவா - என்றான்

'செம்பு காட்டிய கண் இணை பால் எனத் தெளிந்தீர்!
வெம்பு காட்டிடை நுழைதொறும், வெரிந் உறப் பாய்ந்த
கொம்பு காட்டுதிரோ, தட மார்பிடைக் குளித்த
அம்பு காட்டுதிரோ, குல மங்கையர்க்கு? அம்மா! 145

 • உங்கள் மங்கையரிடம் என்ன காட்டப் போகிறீர் - என்றான்

'ஏக்கம் இங்கு இதன்மேலும் உண்டோ ? இகல் மனிதன்
ஆக்கும் வெஞ் சமத்து, ஆண்மை அவ் அமரர்க்கும் அரிதாத்
தாக்க அரும் புயத்து உம் குலத் தலைமகன் தங்கை
மூக்கொடு அன்றி, நும் முதுகொடும் போம் பழி முயன்றீர். 146

 • உம் குலமகளுக்கு மூக்கறுந்த பழி உங்கள் முதுகோடு போகிறதோ

'ஆர வாழ்க்கையின் வணிகராய் அமைதிரோ? அயில் வேல்
வீர வாள் கொழு என மடுத்து உழுதிரோ?-வெறிப் போர்த்
தீர வாழ்க்கையின் தெவ்வரைச் செருவிடைப் பறித்த
வீர வாட் கையீர்!-எங்ஙனம் வாழ்திரோ? விளம்பீர். 147

 • வீரவாள் கையில் வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறீர் - என்றான்

என்று, தானும், தன் எறி கடற் சேனையும், 'இறை, நீர்
நின்று காண்டிர் என் நெடுஞ் சிலை வலி' என நேராச்
சென்று தாக்கினன், தேவரும் மருள்கொண்டு திகைத்தார்;
'நன்று! காத்தி' என்று, இராமனும் எதிர் செல நடந்தான். 148

 • என் வில் வலிமை காண்க - என்று கூறிய தூடணன் இராமனைத் தாக்கினான்
 • இராமனும் போரிட்டான்

ஊடு அறுப்புண்ட, மொய்படை; கையொடும் உயர்ந்த
கோடு அறுப்புண்ட, குஞ்சரம்; கொடிஞ்சொடு கொடியின்
காடு அறுப்புண்ட, கால் இயல் தேர்; கதிர்ச் சாலி
சூடு அறுப்புண்ட எனக் கழுத்து அறுப்புண்ட, துரகம். 149

 • யானை, குதிரைகள் நெல் அறுத்த வயல்போல் தலை அறுபட்டன

துருவி ஓடின, உயிர் நிலை, சுடு சுரம், துரந்த;
கருவி ஓடின, கச்சையும் கவசமும் கழல;
அருவி ஓடின என அழி குருதி ஆறு ஒழுக;
உருவி ஓடின, கேடகத் தட்டொடும் உடலம். 150

 • இராமன் அம்புகள் பாய்ந்தன


கம்ப இராமாயணம் 
3 ஆரணிய காண்டம் 
6. கரன் வதைப் படலம் 
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி