Wednesday, 29 January 2020

கம்பராமாயணம் - கரன் வதைப் படலம் - KambaRamayanam 3-6 10

சூர்ப்பணகை 

கரன் தாள் 

விழுந்து 
கதறி முறையிடல்

இருந்த மாக் கரன் தாள் இணையின் மிசை,
சொரிந்த சோரியள், கூந்தலள், தூம்பு எனத்
தெரிந்த மூக்கினள், வாயினள், செக்கர்மேல்
விரிந்த மேகம் என விழுந்தாள் அரோ. 1

 • சூர்ப்பணகை அறுபட்ட மூக்குத் துளையில் குருதி கொட்டும் நிலையில் கரன் காலடியில் விழுந்தாள் 

'அழுங்கு நாள் இது' என்று, அந்தகன் ஆணையால்
தழங்கு பேரி எனத் தனித்து ஏங்குவாள்;
முழங்கு மேகம் இடித்த வெந் தீயினால்
புழுங்கு நாகம் எனப் புரண்டாள் அரோ. 2

 • இடி தாக்கிப் புரளும் நாகம் போல் புரண்டாள்

வாக்கிற்கு ஒக்க, புகை முத்து வாயினான்
நோக்கி, 'கூசலர், நுன்னை இத் தன்மையை
ஆக்கிப் போனவர் ஆர்கொல்?' என்றான்-அவள்
மூக்கின் சோரி முழீஇக் கொண்ட கண்ணினான். 3

 • கரன் கண் அவளது மூக்கறுந்த குருதி நிறமாக மாறியது 
 • உன்னை இத் தன்மைக்கு ஆளாக்கியவர் ஆர் - என்றான் 

'இருவர் மானிடர்; தாபதர்; ஏந்திய
வரி வில், வாள், கையர்; மன்மதன் மேனியர்;
தரும நீரர்; தயரதன் காதலர்;
செருவில் நேரும் நிருதரைத் தேடுவார். 4

 • மானிடர் இருவர் 
 • தவக்கோலத்தில் வில் வாள் ஏந்திய கையர் 
 • தயரதன் மக்கள் - என்றாள்

'ஒன்றும் நோக்கலர் உன் வலி; ஓங்கு அறன்
நின்று நோக்கி, நிறுத்தும் நினைப்பினார்;
"வென்றி வேற் கை நிருதரை வேர் அறக்
கொன்று நீக்குதும்" என்று உணர் கொள்கையார். 5

 • உன் வலிமையை நோக்காமல் செய்தனர் 
 • அவர்களை வேரறுத்துக் கொல் - என்றாள்

'மண்ணில், நோக்க அரு வானினில், மற்றினில்,
எண்ணி நோக்குறின், யாவரும் நேர்கிலாப்
பெண்ணின் நோக்குடையாள் ஒரு பேதை, என்
கண்ணின் நோக்கி உரைப்ப அருங் காட்சியாள்; 6

 • அவர்களுடன் அழகி ஒருத்தி இருக்கிறாள்

'கண்டு, "நோக்க அருங் காரிகையாள்தனைக்
கொண்டு போவன், இலங்கையர் கோக்கு" எனா,
விண்டு மேல் எழுந்தேனை வெகுண்டு, அவர்
துண்டம் ஆக்கினர், மூக்கு' எனச் சொல்லினாள். 7

 • அவளை இலங்கை அரசனுக்குக் கொண்டுபோக முயன்றபோது இவ்வாறு செய்துவிட்டனர் - என்றாள்

கேட்டனன் உரை; கண்டனன் கண்ணினால்,
தோட்ட நுங்கின் தொளை உறு மூக்கினை;
'காட்டு' எனா, எழுந்தான், எதிர் கண்டவர்
நாட்டம் தீய;-உலகை நடுக்குவான். 8

 • தோண்டிய நுங்கு போல் இருந்த அவள் மூக்கைக் கண்டான்

எழுந்து நின்று, உலகு ஏழும் எரிந்து உகப்
பொழிந்த கோபக் கனல் உக, பொங்குவான்;
'"கழிந்து போயினர் மானிடர்" என்னுங்கால்,
அழிந்ததோ இல் அரும் பழி?' என்னுமால். 9

 • இது நம் குடும்பத்துக்கு நேர்ந்த பழி என்றான்

'வருக, தேர்!' எனும் மாத்திரை, மாடுளோர்,
இரு கை மால் வரை ஏழினொடு ஏழ் அனார்
ஒரு கையால் உலகு ஏந்தும் உரத்தினார்,
'தருக இப் பணி எம் வயின் தான்' என்றார். 10

 • வீரர் 14 பேர் வருக என்றான்
 • வந்தனர் 
 • அவர்கள் உலகை ஒரு கையில் ஏந்த வல்லவர்கள் 

கம்ப இராமாயணம் 
3 ஆரணிய காண்டம் 
6. கரன் வதைப் படலம் 
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்

இந்த நுங்கில் கீழே உள்ள கண்
நோண்டப்பட்டுள்ளது
சூர்ப்பணகையின் அறுபட்ட
மூக்குத் துளைகள் இவ்வாறு
காணப்பட்டன - என்பது
கம்பன் காட்டும் உவமை

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி