Wednesday, 29 January 2020

கம்பராமாயணம் - சூர்ப்பணகைப் படலம் - KambaRamayanam 3-5 70

இராமன் பன்னசாலைக்குள் செல்லல்


பொரு திறத்தானை நோக்கி, பூவையை நோக்கி, நின்றாள்;
'கருத மற்று இனி வேறு இல்லை; கமலத்துக் கடவுள்தானே,
ஒரு திறத்து உணர நோக்கி, உருவினுக்கு, உலகம் மூன்றின்
இரு திறத்தார்க்கும், செய்த வரம்பு இவர் இருவர்' என்றாள். 61

 • இராமனையும் சீதையையும் சூர்ப்பணகை பார்த்தாள் 
 • இவன் தாமரைக் கடவுள் 
 • இவள் திருமகள் - எனத் தெளிவு பெற்றாள் 

'பொன்னைப் போல் பொருஇல் மேனி, பூவைப் பூ வண்ணத்தான், இம்
மின்னைப் போல் இடையாளோடும் மேவும் மெய் உடையன் அல்லன்;
தன்னைப் போல் தகையோர் இல்லா, தளிரைப்போல் அடியினாளும்,
என்னைப் போல் இடையே வந்தாள்; இகழ்விப்பென் இவளை' என்னா, 62

 • பொன்னைப்போல் ஒளிறும் பூவைப்பூ வண்ணன் இவன் 
 • மின்னைப்போல் ஒளிறும் மேனியள் இவள்
 • என்னைப்போல் இல்லாமல் தளிரைப்போல் அடியினாள்
 • இவளை இகழவேண்டும் - என்று தீர்மானித்தாள் 

'வரும் இவள் மாயம் வல்லள்; வஞ்சனை அரக்கி; நெஞ்சம்
தெரிவு இல; தேறும் தன்மை, சீரியோய்! செவ்விது அன்றால்;
உரு இது மெய்யது அன்றால்; ஊன் நுகர் வாழ்க்கையாளை
வெருவினென்; எய்திடாமல் விலக்குதி, வீர!' என்றாள். 63

 • இவள் அரக்கி 
 • உரு மாறி வந்துள்ளாள் 
 • வீர! இவளை விலக்குதி - என்றாள் சூர்ப்பணகை

'ஒள்ளிது உன் உணர்வு; மின்னே! உன்னை ஆர் ஒளிக்கும் ஈட்டார்?
தெள்ளிய நலத்தினால், உன் சிந்தனை தெரிந்தது; அம்மா!
கள்ள வல் அரக்கி போலாம் இவளும்? நீ காண்டி' என்னா,
வெள்ளிய முறுவல் முத்தம் வெளிப்பட, வீரன் நக்கான். 64

 • சூர்ப்பணகை உள்ளத்தை உணர்ந்துகொண்ட இராமன் வெளிப்படையாகச் சிரித்தான்

ஆயிடை, அமுதின் வந்த, அருந்ததிக் கற்பின் அம் சொல்
வேய் இடை தோளினாளும், வீரனைச் சேரும் வேலை,
'நீ இடை வந்தது என்னை? நிருதர்தம் பாவை!' என்னா,
காய் எரி அனைய கள்ள உள்ளத்தாள் கதித்தலோடும். 65

 • இப்போது இங்கே ஏன் வந்தாய் என்று இராமன் சீதையைக் கடிந்துகொண்டான்

அஞ்சினாள்; அஞ்சி அன்னம், மின் இடை அலச ஓடி,
பஞ்சின் மெல் அடிகள் நோவப் பதைத்தனள்; பருவக் கால
மஞ்சிடை வயங்கித் தோன்றும் பவளத்தின் வல்லி என்ன,
குஞ்சரம் அனைய வீரன் குவவுத் தோள் தழுவிக் கொண்டாள். 66

 • அஞ்சிய சீதை இராமனை அணைத்துக்கொண்டாள்

'வளை எயிற்றவர்களோடு வரும் விளையாட்டு என்றாலும்,
விளைவன தீமையே ஆம்' என்பதை உணர்ந்து, வீரன்,
'உளைவன இயற்றல்; ஒல்லை உன் நிலை உணருமாகில்,
இளையவன் முனியும்; நங்கை! ஏகுதி விரைவில்' என்றான். 67

 • இளையவன் முனிவான் 
 • செல் - என்று இராமன் கூறினான்  

பொற்புடை அரக்கி, 'பூவில், புனலினில், பொருப்பில், வாழும்
அற்புடை உள்ளத்தாரும், அனங்கனும், அமரர் மற்றும்,
எற் பெறத் தவம் செய்கின்றார்; என்னை நீ இகழ்வது என்னே,
நல் பொறை நெஞ்சில் இல்லாக் கள்வியை நச்சி?' என்றாள். 68

 • கள்வியை (சீதையை) நச்சி 
 • அமரர்களும் பெறத் தவம் செய்யும் என்னை இகழ்வது ஏன் - என்றாள் சூர்ப்பணகை

'தன்னொடும் தொடர்வு இலாதேம் என்னவும் தவிராள்; தான் இக்
கல் நெடு மனத்தி சொல்லும், கள்ள வாசகங்கள்' என்னா,
மின்னொடு தொடர்ந்து செல்லும் மேகம்போல், மிதிலைவேந்தன்
பொன்னொடும் புனிதன் போய், அப் பூம் பொழிற் சாலை புக்கான். 69

 • தன்னோடு தொடர்பில்லாப் பொய் பேசுகிறாள் என்று எண்ணிய இராமன் சீதையாடு பன்னசாலைக்குள் சென்றுவிட்டான் 

புக்க பின் போனது என்னும் உணர்வினள்; பொறையுள் நீங்கி
உக்கது ஆம் உயிரள்; ஒன்றும் உயிர்த்திலள்; ஒடுங்கி நின்றாள்;
'தக்கிலன்; மனத்துள் யாதும் தழுவிலன்; சலமும் கொண்டான்;
மைக் கருங் குழலினாள்மாட்டு அன்பினில் வலியன்' என்பாள். 70

 • இராமன் மனத்தாலும் தன்னை நினைக்கவில்லையே என்று சூர்ப்பணகை ஏங்கினாள்

கம்ப இராமாயணம் 
3 ஆரணிய காண்டம் 
5. சூர்ப்பணகைப் படலம் 
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி