Wednesday, 29 January 2020

கம்பராமாயணம் - சூர்ப்பணகைப் படலம் - KambaRamayanam 3-5 50

சூர்ப்பணகை - இராமன் உரையாடல்


தூயவன் பணியா முன்னம் சொல்லுவாள், சோர்வு இலாள்; 'அம்
மாய வல் அரக்கரோடு வாழ்வினை மதிக்கலாதேன்,
ஆய்வுறு மனத்தேன் ஆகி, அறம் தலைநிற்பது ஆனேன்;
தீவினை தீய நோற்றுத் தேவரின் பெற்றது' என்றாள். 41

 • இராமன் ஆணையிடுவதற்கு முன்பே சூர்ப்பணகை சொல்கிறாள் 
 • அரக்கரோடு வாழ்வதை நான் மதிக்கவில்லை 
 • அறத்தொடு வாழலானேன் 
 • தீவினை தேய நோன்பியற்று இந்த நல்லுடம்பைப் பெற்றேன் - என்றாள் 

'இமையவர் தலைவனேயும் எளிமையின் ஏவல் செய்யும்
அமைதியின், உலகம் மூன்றும் ஆள்பவன் தங்கை ஆயின்,
சுமையுறு செல்வத்தோடும் தோன்றலை; துணையும் இன்றி,
தமியை நீ வருதற்கு ஒத்த தன்மை என்? தையல்!' என்றான். 42

 • உலகம் மூன்றும் ஆள்பவன் தங்கை தனிமைநில் இங்கு வரக் காரணம் என்ன - இராமன் வினா 

வீரன் அஃது உரைத்தலோடும், மெய் இலாள், 'விமல! யான் அச்
சீரியரல்லார் மாட்டுச் சேர்கிலென்; தேவர்பாலும்
ஆரிய முனிவர்பாலும் அடைந்தனென்; இறைவ! ஈண்டு ஓர்
காரியம் உண்மை, நின்னைக் காணிய வந்தேன்' என்றாள். 43

 • சீரியர் அல்லாரோடு சேரமாட்டேன் 
 • ஆரிய முனிவர்பால் வாழ்பவள் 
 • உன்னால் ஆகவேண்டிய செயல் ஒன்று உள்ளது 
 • அதனால் வந்தேன் - அவள் விடை

அன்னவள் உரைத்தலோடும், ஐயனும், 'அறிதற்கு ஒவ்வா
நல் நுதல் மகளிர் சிந்தை நல் நெறிப் பால அல்ல;
பின் இது தெரியும்' என்னா, 'பெய் வளைத் தோளி! என்பால்
என்ன காரியத்தை? சொல்; அஃது இயையுமேல் இழைப்பல்' என்றான். 44

 • என்னால் ஆகுமேல் செய்வேன். சொல் - என்றான் 

'தாம் உறு காமத் தன்மை தாங்களே உரைப்பது என்பது
ஆம் எனல் ஆவது அன்றால், அருங் குல மகளிர்க்கு அம்மா!
ஏமுறும் உயிர்க்கு நோவேன்; என் செய்கேன்? யாரும் இல்லேன்;
காமன் என்று ஒருவன் செய்யும் வன்மையைக் காத்தி' என்றாள். 45

 • காமன் என்னிடம் கொடுமை செய்கிறான். காப்பாற்ற வேண்டும் - என்றாள் 

சேண் உற நீண்டு, மீண்டு, செவ் அரி சிதறி, வெவ்வேறு
ஏண் உற மிளிர்ந்து, நானாவிதம் புரண்டு, இருண்ட வாள்-கண்
பூண் இயல் கொங்கை அன்னாள் அம் மொழி புகறலோடும்,
'நாண் இலள், ஐயள், நொய்யள்; நல்லளும் அல்லள்' என்றாள். 46

 • நாணம் இல்லாமல் சொல்பவள் நல்லவள் அல்லள் - என்றான்

பேசலன், இருந்த வள்ளல் உள்ளத்தின் பெற்றி ஓராள்;
பூசல் வண்டு அரற்றும் கூந்தல் பொய்ம் மகள், 'புகன்ற என்கண்
ஆசை கண்டருளிற்று உண்டோ ? அன்று எனல் உண்டோ ?' என்னும்
ஊசலின் உலாவுகின்றாள்; மீட்டும் ஓர் உரையைச் சொல்வாள்: 47

 • அவள் ஆசை உருண்டது 
 • மீண்டும் சொல்கிறாள்

'எழுத அரு மேனியாய்! ஈண்டு எய்தியது அறிந்திலாதேன்;
முழுது உணர் முனிவர் ஏவல் செய் தொழில் முறையின் முற்றி,
பழுது அறு பெண்மையோடும் இளமையும் பயனின்று ஏக,
பொழுதொடு நாளும் வாளா கழிந்தன போலும்' என்றாள். 48


'நிந்தனை அரக்கி நீதி நிலை இலாள்; வினை மற்று எண்ணி
வந்தனள் ஆகும்' என்றே வள்ளலும் மனத்துள் கொண்டான்;
'சுந்தரி! மரபிற்கு ஒத்த தொன்மையின் துணிவிற்று அன்றால்;
அந்தணர் பாவை நீ; யான் அரசரில் வந்தேன்' என்றான். 49

 • நீ அந்தணர் பாவை 
 • நான் அரசர் வழி வந்தவன் - என்றான்

'ஆரண மறையோன் எந்தை; அருந்ததிக் கற்பின் எம் மோய்,
தாரணி புரந்த சால கடங்கட மன்னன் தையல்;
போர் அணி பொலம் கொள் வேலாய்! பொருந்தலை இகழ்தற்கு ஒத்த
காரணம் இதுவே ஆயின், என் உயிர் காண்பென்' என்றாள். 50

 • என் தந்தைதான் அந்தணன் 
 • என் தாய் மன்னன் மகள் - என்றாள்

கம்ப இராமாயணம் 
3 ஆரணிய காண்டம் 
5. சூர்ப்பணகைப் படலம் 
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி