Wednesday, 29 January 2020

கம்பராமாயணம் - சூர்ப்பணகைப் படலம் - KambaRamayanam 3-5 130

மூக்கறுந்த பின்னும் நப்பாசை


'தேட்டம்தான் வாள் எயிற்றில் தின்னவோ? தீவினையோர்
கூட்டம்தான் புறத்து உளதோ? குறித்த பொருள் உணர்ந்திலனால்;
நாட்டம்தான் எரி உமிழ, நல்லாள்மேல் பொல்லாதாள்
ஓட்டந்தாள்; அரிதின் இவள் உடன்று எழுந்தாள்' என உரைத்தான். 121

 • தின்ன வந்தாளோ என்னவோ 
 • அறியேன் 
 • சினத்துடன் சீதையை நெருருங்கினாள் - என்றான் இலக்குவன்

ஏற்ற வளை வரி சிலையோன் இயம்பாமுன், இகல் அரக்கி,
'சேற்ற வளை தன் கணவன் அருகு இருப்ப, சினம் திருகி,
சூல் தவளை, நீர் உழக்கும் துறை கெழு நீர் வள நாட!
மாற்றவளைக் கண்டக்கால் அழலாதோ மனம்?' என்றாள். 122

 • அப்போது சூர்ப்பணகை குறுக்கிட்டுப் பேசுகிறாள் 
 • தன் கொழுநன் இருக்கும்போது இவளை இவனுடன் கண்டால் மனம் கொதிக்காதோ - என்றாள் 

'பேடிப் போர் வல் அரக்கர் பெருங் குலத்தை ஒருங்கு அவிப்பான்
தேடிப் போந்தனம்; இன்று, தீ மாற்றம் சில விளம்பி,
வீடிப் போகாதே; இம் மெய் வனத்தை விட்டு அகல
ஓடிப் போ' என்று உரைத்த உரைகள் தந்தாற்கு, அவள் உரைப்பாள்: 123

 • தீய செற்களைக் கூறிய அவளை "இந்த வனத்தை விட்டு ஓடிவிடு" - என்றான்

'நரை திரை என்று இல்லாத நான்முகனே முதல் அமரர்
கரை இறந்தோர், இராவணற்குக் கரம் இறுக்கும் குடி என்றால்,
விரையும் இது நன்று அன்று; வேறு ஆக யான் உரைக்கும்
உரை உளது, நுமக்கு உறுதி உணர்வு உளதேல்' என்று உரைப்பாள்: 124

 • நான்முகனுக்கும், தேவர்க்கும் கைகொடுக்கும் குடி எம் இராவணன் குடி எம் குடி என்பதால், உனக்கு ஒன்று சொல்லுவேன் - என்று கூறலானாள் 

'"ஆக்க அரிய மூக்கு, உங்கை அரியுண்டாள்" என்றாரை
நாக்கு அரியும் தயமுகனார்; நாகரிகர் அல்லாமை,
மூக்கு அரிந்து, நும் குலத்தை முதல் அரிந்தீர்; இனி, உமக்குப்
போக்கு அரிது; இவ் அழகை எல்லாம் புல்லிடையே உகுத்தீரே! 125

 • என் மூக்கை அரிந்து உன் குலத்து முதலை அரிந்தீர் - என்றாள்

'வான் காப்போர், மண் காப்போர், மா நகர் வாழ் உலகம்-
தான் காப்போர், இனி தங்கள் தலை காத்து நின்று, உங்கள்
ஊன் காக்க உரியார் யார்? என்னை, உயிர் நீர் காக்கின்,
யான் காப்பென்; அல்லால், அவ் இராவணனார் உளர்!' என்றாள். 126

 • உங்கள் உடலையும் தலையையும் இனிக் காக்க வல்லார் யார் 
 • நான் காக்க வேண்டும் 
 • அல்லது என் இராவணன் காக்க வேண்டும் 

'காவல் திண் கற்பு அமைந்தார் தம் பெருமை தாம் கழறார்;
ஆவல் பேர் அன்பினால், அறைகின்றேன் ஆம் அன்றோ?
'"தேவர்க்கும் வலியான் தன் திருத் தங்கையாள் இவள்; ஈண்டு
ஏவர்க்கும் வலியாள்" என்று, இளையானுக்கு இயம்பீரோ?'. 127

 • கற்பு அமைந்தார் தம் பெருமை கூறார் 
 • அன்பினால் சொல்கிறேன் 
 • இராவணன் தங்கை எல்லாரையும் விட வலிமை மிக்கவள் என்பதை உன் தம்பிக்கு எடுத்துச் சொல் 

'மாப் போரில் புறங் காப்பேன்; வான் சுமந்து செல வல்லேன்;
தூப் போல, கனி பலவும், சுவை உடைய, தர வல்லேன்;
காப்போரைக் கைத்து என்? நீர் கருதியது தருவேன்; இப்
பூப் போலும் மெல்லியலால் பொருள் என்னோ? புகல்வீரே. 128

 • போரில் காப்பாற்றுவேன் 
 • தூக்கிக்கொண்டு வான் வழியே செல்வேன் 
 • சுவையுள்ள கனிகள் பலவும் பறித்துத் தருவேன் 
 • நீ கருதியது தருவேன் 
 • என்னைக் கசப்பாக்கிவிட்டு இந்த மெல்லியலை (சீதையை) பொருளாகக் கொண்டிருக்கிறாயே  - என்றாள் 

'குலத்தாலும், நலத்தாலும், குறித்தனவே கொணர்தக்க
வலத்தாலும், மதியாலும், வடிவாலும், மடத்தாலும்,
நிலத்தாரும், விசும்பாரும், நேரிழையார், என்னைப்போல்
சொலத்தான் இங்கு உரியாரைச் சொல்லீரோ, வல்லீரேல்? 129

 • குலம், நலம் முதலானவற்றில் என்னைப்போல் சிறந்தவர் யார் என்று சொல்ல முடியுமா - என்றாள் 

'போக்கினீர் என் நாசி; போய்த்து என்? நீர் பொறுக்குவிரேல்,
ஆக்குவென் ஓர் நொடி வரையில்; அழகு அமைவென்; அருள்கூறும்
பாக்கியம் உண்டுஎனின், அதனால் பெண்மைக்கு ஓர் பழுது உண்டோ ?
மேக்கு உயரும் நெடு மூக்கும் மடந்தையர்க்கு மிகை அன்றோ? 130

 • மூக்கு போய்விட்டது 
 • அதனால் என்ன 
 • நொடிப் பொழுதில் அதனை உண்டாக்கிக் கொள்வேன் 
 • அருள் கூறும் பாக்கியம் எனக்கு உண்டு 
 • முகத்தில் முன்னே துருத்திக்கொண்டிருக்கும் மூக்கு மங்கையர்க்கு வேண்டாத ஒன்று அல்லவா - என்றாள்

கம்ப இராமாயணம் 
3 ஆரணிய காண்டம் 
5. சூர்ப்பணகைப் படலம் \
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி