Wednesday, 29 January 2020

கம்பராமாயணம் - சூர்ப்பணகைப் படலம் - KambaRamayanam 3-5 110

மூக்கறுபட்டவள் அரற்றல்


'நிலை எடுத்து, நெடு நிலத்து நீ இருக்க, தாபதர்கள்
சிலை எடுத்துத் திரியும் இது சிறிது அன்றோ? தேவர் எதிர்
தலையெடுத்து விழியாமைச் சமைப்பதே! தழல் எடுத்தான்
மலை எடுத்த தனி மலையே! இவை காண வாராயோ? 101

 • மலை எடுத்த மாமணியே 
 • நீ இருக்கும்போது 
 • தவக்கோலம் பூண்டவர்கள் வில்லேந்தித் திரிகின்றனரே

'"புலிதானே புறத்து ஆக, குட்டி கோட்படாது" என்ன,
ஒலி ஆழி உலகு உரைக்கும் உரை பொய்யோ? ஊழியினும்
சலியாத மூவர்க்கும், தானவர்க்கும், வானவர்க்கும்,
வலியானே! யான் பட்ட வலி காண வாராயோ? 102

 • புலி வெளியில் இருக்கும்போது குட்டியைப் பிடித்துவர முடியாது 
 • நீ இருக்குபொது எனக்கு வலி உண்டாக்கியதைக் காண வாழாயோ

'ஆர்த்து, ஆனைக்கு-அரசு உந்தி, அமரர் கணத்தொடும் அடர்ந்த
போர்த் தானை இந்திரனைப் பொருது, அவனைப் போர் தொலைத்து,
வேர்த்தானை, உயிர் கொண்டு மீண்டானை, வெரிந் பண்டு
பார்த்தானே! யான் பட்ட பழி வந்து பாராயோ? 103

 • இந்திரனைப் போரில் வென்றவனே 
 • நான் பட்ட பழியை வந்து பாராயோ

'காற்றினையும், புனலினையும், கனலினையும், கடுங் காலக்
கூற்றினையும், விண்ணினையும், கோளினையும், பணி கொண்டற்கு
ஆற்றினை நீ; ஈண்டு, இருவர் மானுடவர்க்கு ஆற்றாது
மாற்றினையோ, உன் வலத்தை? சிவன் தடக்கை வாள் கொண்டாய்! 104

 • சிவன் தந்த வாள் கொண்டவனே
 • காற்று, நீர், கனல், கூற்று, விண், கோள் - பணி கொண்டவனே 
 • மானிடனுக்கு அஞ்சுகிறாயா

'உருப் பொடியா மன்மதனை ஒத்துளரே ஆயினும், உன்
செருப்பு அடியின் பொடி ஒவ்வா மானிடரைச் சீறுதியோ?
நெருப்பு அடியில் பொடி சிதற, நிறைந்த மதத் திசை யானை
மருப்பு ஒடிய, பொருப்பு இடிய, தோள் நிமிர்த்த வலியோனே! 105

 • திசை யானைக் கொம்புகளை ஒடித்து மார்பில் தாங்கியவனே 
 • காமன் போன்ற மானிடரை உன் காலடியில் கிடக்கச் செய் 

'தேனுடைய நறுந் தெரியல் தேவரையும் தெறும் ஆற்றல்
தான் உடைய இராவணற்கும், தம்பியர்க்கும், தவிர்ந்ததோ?
ஊனுடைய உடம்பினர் ஆய், எம் குலத்தோர்க்கு உணவு ஆய
மானுடர் மருங்கே புக்கு ஒடுங்கினதோ வலி? அம்மா! 106

 • தேவரையும் தெறும் ஆற்றல் கொண்ட இராவணனுக்கும் தம்பியர்க்கும் மானுடர் முன் ஒடுங்கியதோ

'மரன் ஏயும் நெடுங் கானில் மறைந்து உறையும் தாபதர்கள்
உரனையோ? அடல் அரக்கர் ஓய்வேயோ? உற்று எதிர்ந்தார்.
"அரனேயோ? அரியேயோ? அயனேயோ?" எனும் ஆற்றல்
கரனேயோ! யான் பட்ட கையறவு காணாயோ? 107

 • கரனே! யான் பட்ட கையறவு காணாயோ

'இந்திரனும், மலர் அயனும், இமையவரும், பணி கேட்ப,
சுந்தரி பல்லாண்டு இசைப்ப, உலகு ஏழும் தொழுது ஏத்த,
சந்திரன்போல் தனிக் குடைக்கீழ் நீ இருக்கும் சவை நடுவே
வந்து, அடியேன் நாணாது, முகம் காட்ட வல்லேனோ? 108

 • உன் அவைக்கு வந்து என் முகத்தை எப்படிக் காட்டுவேன் 

'உரன் நெரிந்துவிழ, என்னை உதைத்து, உருட்டி, மூக்கு அரிந்த
நரன் இருந்து தோள் பார்க்க, நான் கிடந்து புலம்புவதோ?
கரன் இருந்த வனம் அன்றோ? இவை படவும் கடவேனோ?-
அரன் இருந்த மலை எடுத்த அண்ணாவோ! அண்ணாவோ!! 109

 • கரன் இருக்கும் காட்டில் உருட்டி உதைக்கப்பட்டு மூக்கறுபட்டுக் கிடக்கிறேனே

'நசையாலே, மூக்கு இழந்து, நாணம் இலா நான் பட்ட
வசையாலே, நினது புகழ் மாசுண்டது ஆகாதோ?-
திசை யானை விசை கலங்கச் செருச் செய்து, மருப்பு ஒசித்த
இசையாலே நிறைந்த புயத்து இராவணவோ! இராவணவோ!! 110

 • நான் மூக்கறுபட்டுக் கிடப்பது இராவணன் புகழுக்கு மாசு பட்டது ஆகாதோ

கம்ப இராமாயணம் 
3 ஆரணிய காண்டம் 
5. சூர்ப்பணகைப் படலம் 
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி