Tuesday, 28 January 2020

கம்பராமாயணம் - சூர்ப்பணகைப் படலம் - KambaRamayanam 3-5 10

கோதாவரி ஆறு


புவியினுக்கு அணி ஆய், ஆன்ற பொருள் தந்து, புலத்திற்று ஆகி,
அவி அகத் துறைகள் தாங்கி, ஐந்திணை நெறி அளாவி,
சவி உறத் தெளிந்து, தண்ணென் ஒழுக்கமும் தழுவி, சான்றோர்
கவி என, கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார். 1

 • தமிழ் பொருள் இலக்கணம் ஐந்திணை, துறை, ஒழுக்கலாறு என்னும் பாகுபாடுகளைக் கொண்டது. 
 • அதுபோல, கோதாவரி ஆறு ஐவகை நிலத்தில் பாய்ந்தது 
 • நீராடும் துறைகள்  கொண்டது 
 • இதனை மூவரும் கண்டனர் 

வண்டு உறை கமலச் செவ்வி வாள் முகம் பொலிய, வாசம்
உண்டு உறை குவளை ஒண் கண் ஒருங்குற நோக்கி, ஊழின்
தெண் திரைக் கரத்தின் வாரி, திரு மலர் தூவி, செல்வர்க்
கண்டு அடி பணிவது என்ன, பொலிந்தது கடவுள் யாறு. 2

 • அந்த ஆறு தாமரை பூத்து முகத்தைக் காட்டிற்று 
 • குவளைப் பூ மணத்தை வீசிற்று 
 • அலை ஊழ் வீசிற்று 
 • செல்வரை மலர் தூவி வரவேற்பது போல் மூவரையும் வரவேற்றது 

எழுவுறு காதலரின் இரைத்து இரைத்து, ஏங்கி ஏங்கி,
பழுவ நாள் குவளைச் செவ்விக் கண் பனி பரந்து சோர,
வழு இலா வாய்மை மைந்தர் வனத்து உறை வருத்தம் நோக்கி,
அழுவதும் ஒத்ததால், அவ் அலங்கு நீர் ஆறு மன்னோ. 3

 • காட்டில் வாழ்கின்றனரே என்று அழுவது போல ஓடிற்று

நாளம் கொள் நளினப் பள்ளி, நயனங்கள் அமைய, நேமி
வாளங்கள் உறைவ கண்டு, மங்கைதன் கொங்கை நோக்கும்,
நீளம் கொள் சிலையோன்; மற்றை நேரிழை, நெடிய நம்பி
தோளின்கண் நயனம் வைத்தாள், சுடர் மணித் தடங்கள் கண்டாள். 4

 • சீதை தன் முலையையும், இராமன் மார்பையும் பார்ப்பது போல் மலர்கள் மூவரையும் பார்த்தன 

ஓதிமம் ஒதுங்க, கண்ட உத்தமன், உழையள் ஆகும்
சீதைதன் நடையை நோக்கி, சிறியது ஓர் முறுவல் செய்தான்;
மாதுஅவள்தானும், ஆண்டு வந்து, நீர் உண்டு, மீளும்
போதகம் நடப்ப நோக்கி, புதியது ஓர் முறுவல் பூத்தாள். 5

 • அன்னம் நடப்பதைப் பார்த்த இராமன் சீதையைப் பார்த்துப் புன்னகை பூத்தான் 
 • களிறு நீருண்டு மீள்வதைப் பார்த்த சீதை இராமனைப் பார்த்து முறுவலித்தாள் 

வில் இயல் தடக் கை வீரன், வீங்கு நீர் ஆற்றின் பாங்கர்,
வல்லிகள் நுடங்கக் கண்டான், மங்கைதன் மருங்குல் நோக்க,
எல்லிஅம் குவளைக் கானத்து, இடை இடை மலர்ந்து நின்ற
அல்லிஅம் கமலம் கண்டாள், அண்ணல்தன் வடிவம் கண்டாள். 6

 • படரும் கொடி ஆடுவதையும் சீதை இடையையும் இராமன் பார்த்தான்
 • பூத்த தாமரையையும், இராமன் முகத்தையும் சீதை பார்த்தாள்

அனையது ஓர் தன்மை ஆன அருவி நீர் ஆற்றின் பாங்கர்,
பனி தரு தெய்வப் 'பஞ்சவடி' எனும், பருவச் சோலைத்
தனி இடம் அதனை நண்ணி, தம்பியால் சமைக்கப்பட்ட
இனிய பூஞ் சாலை எய்தி இருந்தனன் இராமன். இப்பால், 7

 • பஞ்சவடிச் சோலையில் தனியிடத்தில் இராமன் இருந்தான்

நீல மா மணி நிற நிருதர் வேந்தனை
மூல நாசம்பெற முடிக்கும் மொய்ம்பினாள்,
மேலைநாள் உயிரொடும் பிறந்து, தான் விளை
காலம் ஓர்ந்து, உடன் உறை கடிய நோய் அனாள். 8

 • நீலமணி போன்ற இராமனைக் கண்ட சூர்ப்பணகை காம நோய் வயப்பட்டாள்

செம் பராகம் படச் செறிந்த கூந்தலாள்,
வெம்பு அராகம் தனி விளைந்த மெய்யினாள்,
உம்பர் ஆனவர்க்கும், ஒண் தவர்க்கும், ஓத நீர்
இம்பர் ஆனவர்க்கும், ஓர் இறுதி ஈட்டுவாள், 9

 • தேவரையும் முனிவரையும் கவரும் கூந்தல் அழகி அவள் 

வெய்யது ஓர் காரணம் உண்மை மேயினாள்,
வைகலும் தமியள் அவ் வனத்து வைகுவாள்,
நொய்தின் இவ் உலகு எலாம் நுழையும் நோன்மையாள்,-
எய்தினள், இராகவன் இருந்த சூழல்வாய். 10

 • அந்தக் காட்டில் தனிமையில் திரிபவள் அவள்

கம்ப இராமாயணம் 
3 ஆரணிய காண்டம் 
5. சூர்ப்பணகைப் படலம் 
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி