Tuesday, 28 January 2020

கம்பராமாயணம் - சடாயு காண் படலம் - KambaRamayanam 3-4 30

சடாயு வரலாறு

'பரவல் அருங்கொடைக்கும், நின்தன் பனிக் குடைக்கும் பொறைக்கும், நெடும் பண்பு தோற்ற
கரவல் அருங் கற்பகமும், உடுபதியும், கடல் இடமும், களித்து வாழ-
புரவலர்தம் புரவலனே! பொய்ப் பகையே! மெய்க்கு அணியே! புகழின் வாழ்வே!-
இரவலரும், நல் அறமும், யானும், இனி என் பட நீத்து ஏகினாயே? 21

 • தயரதனை எண்ணி, சடாயு புலம்புகிறான் 
 • கொடை வழங்கும் கற்பகமே 
 • பொய்யின் பகையே 
 • புகழின் வாழ்வே 
 • இரவலரும், நல்லறமும், யானும் என்ன கதி அடைய வேண்டும் என்று எண்ணிக்கொண்டு பிரிந்தாய் 

'அலங்காரம் என உலகுக்கு அமுது அளிக்கும் தனிக் குடையாய்! ஆழி சூழ்ந்த
நிலம் காவல் அது கிடக்க, நிலையாத நிலை உடையேன் நேய நெஞ்சின்
நலம் காண நடந்தனையோ? நாயகனே! தீவினையேன், நண்பினின்றும்,
விலங்கு ஆனேன் ஆதலினால்,விலங்கினேன்;இன்னும் உயிர்விட்டிலேனால். 22

 • என் நட்பு விலங்கு நட்பு ஆயிற்றே 
 • அதனால் உன்னோடு நான் உயிர் விடவில்லை

'தயிர் உடைக்கும் மத்து என்ன உலகை நலி சம்பரனைத் தடிந்த அந் நாள்,
அயிர் கிடக்கும் கடல் வலயத்தவர் அறிய, "நீ உடல்; நான் ஆவி" என்று
செயிர் கிடத்தல் செய்யாத திரு மனத்தாய்! செப்பினாய்; திறம்பா, நின் சொல்;
உயிர் கிடக்க, உடலை விசும்பு ஏற்றினார், உணர்வு இறந்த கூற்றினாரே 23

 • தயிர் உடைக்கும் மத்து போல் சம்பரனை உடைத்தவனே
 • நீ என் உடல். நான் உன் உயிர் 
 • உயிர் இருக்கும்போது உடலை மட்டும் வானுலகம் ஏற்றிவிட்டார்களே 

'எழுவது ஓர் இசை பெருக, இப்பொழுதே, ஒப்பு அரிய எரியும் தீயில்
விழுவதே நிற்க, மட மெல்லியலார்- தம்மைப்போல் நிலத்தின்மேல் வீழ்ந்து
அழுவதே யான்?' என்னா, அழிவுற்றான் என எழுந்து, ஆங்கு அவரை நோக்கி,
'முழுவது ஏழ் உலகு உடைய மைந்தன்மீர்! கேண்மின்' என முறையின் சொல்வான்: 24

 • உடன் தீயில் மூழ்காமல் இருக்கும் தேவியர் போல் வாழ்கின்றேனே 
 • மைந்தர்களே கேளுங்கள் - என்று கூறலானான் 

'அருணன் தன் புதல்வன் யான்; அவன் படரும் உலகு எல்லாம் படர்வேன்; ஆழி
இருள் மொய்ம்பு கெடத் துரந்த தயரதற்கு இன் உயிர்த் துணைவன்; இமையோரோடும்
வருணங்கள் வகுத்திட்ட காலத்தே வந்து உதித்தேன்; கழுகின் மன்னன்;-
தருணம் கொள் பேர் ஒளியீர்!-சம்பாதிபின் பிறந்த சடாயு' என்றான். 25

 • அருணன் மகன் நான் 
 • தயரதனுக்கு உயிர்த்துணைவன் 
 • உயிரினம் பாகுபட்ட காலத்தில் பிறந்தவன் 
 • சம்பாதி என் அண்ணன் 
 • என் பெயர் சடாயு - என்றான் 

ஆண்டு அவன் ஈது உரைசெய்ய, அஞ்சலித்த மலர்க்கையார் அன்பினோடும்
மூண்ட பெருந் துன்பத்தால் முறை முறையின் நிறை மலர்க்கண் மொய்த்த நீரார்,-
பூண்ட பெரும் புகழ் நிறுவி; தம் பொருட்டால் பொன்னுலகம் புக்க தாதை,
மீண்டனன்வந்தான்அவனைக்கண்டனரே ஒத்தனர்-அவ்விலங்கல்தோளார். 26

 • இந்த உரையைக் கேட்டவர் இறந்த தந்தை மீண்டும் உயிர் பெற்று வந்தது போன்ற உணர்வு பெற்றனர்

மருவ இனிய குணத்தவரை இரு சிறகால் உறத் தழுவி, 'மக்காள்! நீரே
உரிய கடன் வினையேற்கும் உதவுவீர்; உடல் இரண்டுக்கு உயிர் ஒன்று ஆனான்
பிரியவும், தான் பிரியாதே இனிது இருக்கும் உடல் பொறை ஆம்; பீழை பாராது,
எரி அதனில் இன்றே புக்கு இறவேனேல்,இத் துயரம் மறவேன்' என்றான் 27

 • தன் இரண்டு சிறகுகளால் இருவரையும் தழுவிக்கொண்டான் 
 • துயரம் தாங்க முடியவில்லை. தீயில் விழுந்து இறப்பேன் - என்றான்

'உய்விடத்து உதவற்கு உரியானும், தன்
மெய் விடக் கருதாது, விண் ஏறினான்;
இவ் இடத்தினில், எம்பெருமாஅன்! எமைக்
கைவிடின், பினை யார் களைகண் உளார்? 28

 • இராமன் தடுத்துக் கூறினான். 
 • பெருமானே! நீயும் எங்களைக் கைவிடின் எங்களுக்குப் பற்றுக்கோடு வேறு யார் - என்றான் 

'"தாயின், நீங்க அருந் தந்தையின், தண் நகர்
வாயின், நீங்கி, வனம் புகுந்து, எய்திய
நோயின் நீங்கினெம் நுன்னின்" என் எங்களை
நீயும் நீங்குதியோ?-நெறி நீங்கலாய்!' 29

 • தந்தையை இழந்து
 • தாயைத் துறந்து - காடு வந்திருக்கிறோம் 
 • நீயும் எங்களை விட்டு நீங்குவாயோ - என்றான் 

என்று சொல்ல, இருந்து அழி நெஞ்சினன்,
நின்ற வீரரை நோக்கி நினைந்தவன்,
'"அன்று அது" என்னின், அயோத்தியின், ஐயன்மீர்
சென்றபின் அவற் சேர்குவென் யான்' என்றான். 30

 • ஆயின் 
 • நீங்கள் அயோத்தி மீண்ட பின்னர் உயிர் துறப்பேன் - என்னான், சடாயு 

கம்ப இராமாயணம் 
3 ஆரணிய காண்டம் 
4. சடாயு காண் படலம் 
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி