Tuesday, 28 January 2020

கம்பராமாயணம் - சடாயு காண் படலம் - KambaRamayanam 3-4 10

கழுகின் வேந்தன் சடாயுவை காணல்


நடந்தனர் காவதம் பலவும்; நல் நதி
கிடந்தன, நின்றன; கிரிகள் கேண்மையின்
தொடர்ந்தன, துவன்றின; சூழல் யாவையும்
கடந்தனர்; கண்டனர் கழுகின் வேந்தையே. 1

 • அகத்தியனிடம் விடைபெற்றுக்கொண்டு மூவரும் நடந்தனர் 
 • காவதம் பல கடந்தனர் 
 • கழுகுகளின் வேந்தன் சடாயுவைக் கண்டனர்  

உருக்கிய சுவணம் ஒத்து, உதயத்து உச்சி சேர்
அருக்கன் இவ் அகல் இடத்து அலங்கு திக்கு எல்லாம்
தெரிப்புறு செறி சுடர்ச் சிகையினால் சிறை
விரித்து இருந்தனன் என, விளங்குவான் தனை, 2

 • திசையெல்லாம் பரந்தது போல் அவன் சிறகுகள் விரிந்திருந்தன 

முந்து ஒரு கரு மலை முகட்டு முன்றிலின்
சந்திரன் ஒளியொடு தழுவச் சார்த்திய,
அந்தம் இல் கனை கடல் அமரர் நாட்டிய,
மந்தரகிரி என வயங்குவான் தனை. 3

 • நிலா சுற்றும் மந்தர-மலை போல் அவன் திகழ்ந்தான் 

மால் நிற விசும்பு எழில் மறைய, தன் மணிக்
கால் நிறச் சேயொளி கதுவ, கண் அகல்
நீல் நிற வரையினில் பவள நீள் கொடி
போல் நிறம் பொலிந்தென, பொலிகின்றான் தனை, 4

 • நீல மலையில் பவளக் கொடி படர்ந்தது போல் காணப்பட்டான் 

தூய்மையன், இருங் கலை துணிந்த கேள்வியன்,
வாய்மையன், மறு இலன், மதியின் கூர்மையன்,
ஆய்மையின் மந்திரத்து அறிஞன் ஆம் எனச்
சேய்மையின் நோக்குறு சிறு கணான் தனை, 5

 • நெடுந்தொலைவு பார்க்கக்கூடிய கூர்மையான சிறு கண்களைக் கொண்டவன் 

வீட்டி வாள் அவுணரை, விருந்து கூற்றினை
ஊட்டி, வீழ் மிச்சில் தான் உண்டு, நாள்தொறும்
தீட்டி, மேல் இந்திரன் சிறு கண் யானையின்
தோட்டிபோல் தேய்ந்து ஒளிர் துண்டத்தான் தனை, 6

 • அரக்கரைக் கொன்று கூற்றுக்கு விருந்து ஊட்டுவான் 
 • மிச்சிலைத் தான் உண்பான் 
 • துண்டுபட்ட அவன் இந்திரன் யானையைக் கடாவும் அங்குசத் தோட்டி போல் காணப்பட்டான் 

கோள் இரு-நாலினோடு ஒன்று கூடின
ஆளுறு திகிரிபோல் ஆரத்தான் தனை,
நீளுறு மேருவின் நெற்றி முற்றிய
வாள் இரவியின் பொலி மௌலியான் தனை, 7

 • 8 கோளும் சூரியனும் கோத்தது போல் ஆரம் அணிந்திருந்தான் 

சொல் பங்கம் உற நிமிர் இசையின் சும்மையை,
அல் பங்கம் உற வரும் அருணன் செம்மலை,
சிற்பம் கொள் பகல் எனக் கடிது சென்று தீர்
கற்பங்கள் எனைப் பல கண்டுளான் தனை, 8

 • வாழ்நாளில் பல கற்பக ஆண்டுகளைக் கண்டவன் 

ஓங்கு உயர் நெடு வரை ஒன்றில் நின்று, அது
தாங்கலது இரு நிலம் தாழ்ந்து தாழ்வுற
வீங்கிய வலியினில் இருந்த வீரனை-
ஆங்கு அவர் அணுகினர், அயிர்க்கும் சிந்தையார். 9

 • மலை போன்ற கழுகு வேந்தனை மூவரும் கண்டனர். 

ஒருவரை ஒருவர் ஐயுறல்

'இறுதியைத் தன் வயின் இயற்ற எய்தினான்
அறிவு இலி அரக்கன் ஆம்; அல்லனாம் எனின்,
எறுழ் வலிக் கலுழனே?' என்ன உன்னி, அச்
செறி கழல் வீரரும், செயிர்த்து நோக்கினார். 10

 • அரக்கன் அல்லன் 
 • கலுழன் எனப் பெருமூச்சு விட்டுக்கொண்டு பார்த்தனர்  

கம்ப இராமாயணம் 
3 ஆரணிய காண்டம் 
4. சடாயு காண் படலம் 
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி