Tuesday, 28 January 2020

கம்பராமாயணம் - அகத்தியப் படலம் - KambaRamayanam 3-3 59

பஞ்சவடி சோலையில் தங்கல்

'"தண்டக வனத்து உறைதி" என்று உரைதரக் கொண்டு,
உண்டு வரவு இத் திசை என, பெரிது உவந்தேன்;
எண் தகு குணத்தினை!' எனக் கொடு, உயர் சென்னித்
துண்ட மதி வைத்தவனை ஒத்த முனி சொல்லும்: 51

 • தண்டக வனத்து என்னுடன் உறைக - என்று இராமனிடம் சிவனை ஒத்த முனிவன் கூறினான் 

'ஈண்டு உறைதி, ஐய! இனி, இவ் வயின் இருந்தால்,
வேண்டியன மா தவம் விரும்பினை முடிப்பாய்;
தூண்டு சின வாள் நிருதர் தோன்றியுளர் என்றால்,
மாண்டு உக மலைந்து, எமர் மனத் துயர் துடைப்பாய்; 52

 • அரக்கரைக் கொன்று முனிவர் துயர் துடைப்பாயாக - என்றார் 

'வாழும் மறை; வாழும் மனு நீதி; அறம் வாழும்;
தாழும் இமையோர் உயர்வர்; தானவர்கள் தாழ்வார்;
ஆழி உழவன் புதல்வ! ஐயம் இலை; மெய்யே;
ஏழ் உலகும் வாழும்; இனி, இங்கு உறைதி' என்றான் 53

 • மறை
 • மனுநீதி
 • அறம் - வாழும் என்று வாழ்த்து கூறினார் 

'செருக்கு அடை அரக்கர் புரி தீமை சிதைவு எய்தித்
தருக்கு அழிதர, கடிது கொல்வது சமைந்தேன்;
வருக்க மறையோய்! அவர் வரும் திசையில் முந்துற்று
இருக்கை நலம்; நிற்கு அருள் என்?' என்றனன் இராமன் 54

 • அரக்கர் தீமையைச் சிதைப்பேன் 
 • அவர் வரும் திசையில் இருப்பது நன்று - என்றான், இராமன் 

'விழுமியது சொற்றனை; இவ் வில் இது இவண், மேல்நாள்
முழுமுதல்வன் வைத்துளது; மூஉலகும், யானும்,
வழிபட இருப்பது; இது தன்னை வடி வாளிக்
குழு, வழு இல் புட்டிலொடு கோடி' என, நல்கி, 55

 • அம்பும், அம்புப் புட்டிலும் அகத்ததியர் இராமனுக்கு வழங்கினார் 
 • அவை சிவனிடம் இருந்தவை - என்று அதன் பெருமையைக் கூறினார்

இப் புவனம் முற்றும் ஒரு தட்டினிடை இட்டால்
ஒப்பு வரவிற்று என உரைப்ப அரிய வாளும்,
வெப்பு உருவு பெற்ற அரன் மேரு வரை வில்லாய்
முப்புரம் எரித்த தனி மொய்க் கணையும், நல்கா. 56

 • சிவன் முப்புரம் எரித்தபோது ஏந்திய வில்லையும், வாளையும் இராமனுக்குக் கொடுத்தார் 

'ஓங்கும் மரன் ஓங்கி, மலை ஓங்கி, மணல் ஓங்கி,
பூங் குலை குலாவு குளிர் சோலை புடை விம்மி,
தூங்கு திரை ஆறு தவழ் சூழலது ஓர் குன்றின்
பாங்கர் உளதால், உறையுள் பஞ்சவடி - மஞ்ச! 57

 • மரம் ஓங்கிய மலை
 • மணல் ஓங்கிய ஆறு - முதலானவற்றைக் கொண்டது அந்த வனத்தில் இருந்த பஞ்சவடி என்னும் சோலை 

'கன்னி இள வாழை கனி ஈவ; கதிர் வாலின்
செந்நெல் உள; தேன் ஒழுகு போதும் உள; தெய்வப்
பொன்னி எனல் ஆய புனல் ஆறும் உள; போதா,
அன்னம் உள, பொன் இவளொடு அன்பின் விளையாட 58

 • வாழை 
 • நெல் 
 • காவிரி போன்ற ஆறு 
 • அதில் போதா, அன்னம் போன்ற பறவைகள் - ஆகியவை அங்குச் சீதை விளையாட உதவும் 

'ஏகி, இனி அவ் வயின் இருந்து உறைமின்' என்றான்;
மேக நிற வண்ணனும் வணங்கி, விடை கொண்டான்;
பாகு அனைய சொல்லியொடு தம்பி பரிவின் பின்
போக, முனி சிந்தை தொடர, கடிது போனான். 59

 • அங்குச் சென்று தங்குங்கள் - என்றான் அகத்தியன் 
 • மூவரும் பஞ்சவடி சென்று தங்கினர் 

கம்ப இராமாயணம் 
3 ஆரணிய காண்டம் 
3. அகத்தியப் படலம் 
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி