Tuesday, 28 January 2020

கம்பராமாயணம் - அகத்தியப் படலம் - KambaRamayanam 3-3 50

அகத்தியன் மகிழ்வு


உழக்கும் மறை நாலினும், உயர்ந்து உலகம் ஓதும்
வழக்கினும், மதிக் கவியினும், மரபின் நாடி,-
நிழல் பொலி கணிச்சி மணி நெற்றி உமிழ் செங் கண்
தழல் புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ்-தந்தான். 41

 • சிவன் தந்த தமிழைத் தந்தான் 

'"விண்ணினில், நிலத்தினில், விகற்ப உலகில், பேர்
எண்ணினில், இருக்கினில், இருக்கும்" என யாரும்
உள் நினை கருத்தினை, உறப் பெறுவெனால், என்
கண்ணினில்' எனக் கொடு களிப்புறு மனத்தான். 42

 • இருக்கு வேதத்துக்குள் இருப்பவனைக் கண்ணால் கண்டேன் - என்று அகத்தியர் களிப்புற்றார் 

'இரைத்த மறை நாலினொடு இயைந்த பிற யாவும்
நிரைத்த நெடு ஞானம் நிமிர் கல்லில் நெடு நாள் இட்டு
அரைத்தும், அயனாலும் அறியாத பொருள் நேர் நின்று
உரைக்கு உதவுமால்' எனும் உணர்ச்சியின் உவப்பான் 43

 • நான்கு வேதமும் போற்றும் தெய்வம் தன் முன் நிற்பதை எண்ணி மகிழ்ந்தார் 

'உய்ந்தனர் இமைப்பிலர்; உயிர்த்தனர் தவத்தோர்;
அந்தணர் அறத்தின் நெறி நின்றனர்கள்; ஆனா
வெந் திறல் அரக்கர் விட வேர் முதல் அறுப்பான்
வந்தனன் மருத்துவன்' என, தனி வலிப்பான். 44

 • அரக்கரை வேரறுக்க வந்த மருத்துவன் என மகிழ்ந்தார் 

ஏனை உயிர் ஆம் உலவை யாவும் இடை வேவித்து
ஊன் நுகர் அரக்கர் உருமைச் சுடு சினத்தின்
கான அனலைக் கடிது அவித்து, உலகு அளிப்பான்,
வான மழை வந்தது' என, முந்துறு மனத்தான். 45

 • அரக்கர் சினம் என்னும் காட்டுத் தீயை அணைக்க வந்த வான்மழை என்று இராமனை எண்ணி மகிழ்ந்தார் 

கண்டனன் இராமனை வர; கருணை கூர,
புண்டரிக வாள் நயனம் நீர் பொழிய, நின்றான் -
எண் திசையும் ஏழ் உலகும் எவ் உயிரும் உய்ய,
குண்டிகையினில், பொரு இல், காவிரி கொணர்ந்தான் 46

 • தன் குண்டிகையில் காவிரியை அடக்கிக் கொண்டுவந்த முனிவர் அகத்தியர் 

நின்றவனை, வந்த நெடியோன் அடி பணிந்தான்;
அன்று, அவனும் அன்பொடு தழீஇ, அழுத கண்ணால்,
'நன்று வரவு' என்று, பல நல் உரை பகர்ந்தான்-
என்றும் உள தென் தமிழ் இயம்பி இசை கொண்டான் 47

 • இராமன் வணங்கினான் 
 • முனிவர் அரவணைத்தார் 

வேதியர்கள் வேத மொழி வேறு பல கூற,
காதல் மிக நின்று, எழில் கமண்டலுவின் நல் நீர்
மா தவர்கள் வீசி, நெடு மா மலர்கள் தூவ,
போது மணம் நாறு குளிர் சோலை கொடு புக்கான். 48

 • வேதியர் வேதம் ஓதி வாழ்த்தினர் 
 • முனிவர்கள் மலர் தூவினர் 
 • அகத்தியன் தன் சோலைக்கு அழைத்துச் சென்றான் 

பொருந்த, அமலன் பொழிலகத்து இனிது புக்கான்;
விருந்து அவன் அமைத்தபின், விரும்பினன்; 'விரும்பி,
இருந் தவம் இழைத்த எனது இல்லிடையில் வந்து, என்
அருந் தவம் முடித்தனை; அருட்கு அரச!' என்றான். 49

 • என் இல்லம் வந்து என் தவத்தை நிறைவேற்றினாய் - என்றார், அகத்தியர்  

என்ற முனியைத் தொழுது, இராமன், 'இமையோரும்,
நின்ற தவம் முற்றும் நெடியோரின் நெடியோரும்,
உன் தன் அருள் பெற்றிலர்கள்; உன் அருள் சுமந்தேன்;
வென்றனென் அனைத்து உலகும்; மேல் இனி என்?' என்றான் 50

 • உன் அருளைத் தேவரும் பெறவில்லை 
 • நான் பெற்றேன் 
 • இனி என்ன 
 • அனைத்து உலகமும் வென்றேன் - என்றான் இராமன் 

கம்ப இராமாயணம் 
3 ஆரணிய காண்டம் 
3. அகத்தியப் படலம் 
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி