Monday, 27 January 2020

கம்பராமாயணம் - அகத்தியப் படலம் - KambaRamayanam 3-3 10

முனிவர்கள் 

மூவரையும் பன்னசாலையில் தங்கச் செய்தனர்

அனையவன் இறுதியின் அமைவு நோக்கலின்,
இனியவர், இன்னலின் இரங்கும் நெஞ்சினர்,
குனி வரு திண் சிலைச் குமரர், கொம்பொடும்,
புனிதனது உறையுள்நின்று அரிதின் போயினார். 1

  • இராமன், சீதை, இலக்குவன் மூவரும் சரவங்க முனிவர் முடிவுக்கு வருந்தினர் 
  • அவர் தவக் குடிலை விட்டு அகன்றனர் 

மலைகளும், மரங்களும், மணிக் கற்பாறையும்,
அலை புனல் நதிகளும், அருவிச் சாரலும்,
இலை செறி பழுவமும், இனிய சூழலும்,
நிலை மிகு தடங்களும், இனிது நீங்கினார். 2

  • மலை, மரம், பாறை, ஆறு, அருவி, பழுவம், தடம் - முதலானவற்றைக் கடந்து சென்றனர் 

பண்டைய அயன் தரு பாலகில்லரும்,
முண்டரும், மோனரும், முதலினோர்கள், அத்
தண்டக வனத்து உறை தவத்துளோர் எலாம்
கண்டனர் இராமனை, களிக்கும் சிந்தையார். 3

  • பாலர், முண்டர், மோனர், தவத்தோர் - அனைவரும் இராமனைக் களிப்புடன் கண்டனர் 

கனல் வரு கடுஞ் சினத்து அரக்கர் காய, ஒர்
வினை பிறிது இன்மையின், வெதும்புகின்றனர்;
அனல் வரு கானகத்து, அமுது அளாவிய
புனல் வர, உயிர் வரும் உலவை போல்கின்றார். 4

  • அரக்கர்கள் கண்டு வெதும்பினர் 

ஆய் வரும் பெரு வலி அரக்கர் நாமமே
வாய் வெரீஇ அலமரும் மறுக்கம் நீங்கினார்;
தீ வரு வனத்திடை இட்டுத் தீர்ந்தது ஓர்
தாய் வர, நோக்கிய கன்றின் தன்மையார். 5

  • அரக்கர்களைக் கண்டு அஞ்சியவர் தாயின் வரவு கண்டு மகிழும் கன்று போன்றனர் 

கரக்க அருங் கடுந் தொழில் அரக்கர் காய்தலின்,
பொரற்கு இடம் இன்மையின் புழுங்கிச் சோருநர்,
அரக்கர் என் கடலிடை ஆழ்கின்றார், ஒரு
மரக்கலம் பெற்றென, மறுக்கம் நீங்கினார். 6

  • அரக்கர் கடலில் ஆழ்பவர் மரக்கலம் பெற்றது போல் மக்கிழ்ந்தனர் 

தெரிஞ்சுற நோக்கினர்- செய்த செய் தவம்
அருஞ் சிறப்பு உதவ, நல் அறிவு கைதர,
விரிஞ்சுறப் பற்றிய பிறவி வெந் துயர்ப்
பெருஞ் சிறை வீடு பெற்றனைய பெற்றியார். 7

  • பிறவியிலிருந்து விடுதலை பெற்ற பெற்றியர் ஆயினர் 

வேண்டின வேண்டினர்க்கு அளிக்கும் மெய்த் தவம்
பூண்டுளர் ஆயினும், பொறையின் ஆற்றலால்,
மூண்டு எழு வெகுளியை முதலின் நீக்கினார்;
ஆண்டு உறை அரக்கரால் அலைப்புண்டார்அரோ. 8

  • தவத்தோர் சினத்தை அடயோடு வெறுத்தவர் ஆதலால் அரக்கரால் அலைக்கழிக்கப்பட்டனர் 

எழுந்தனர், எய்தினர், இருண்ட மேகத்தின்
கொழுந்து என நின்ற அக் குரிசல் வீரனை;
பொழிந்து எழு காதலின் பொருந்தினார், அவன்
தொழும்தொறும் தொழும்தொறும், ஆசி சொல்லுவார். 9

  • மழைமேகக் கொழுந்து போன்ற இராமன் தொழும்போதெல்லாம் அவனுக்கு வாழ்த்து கூறினர் 

இனியது ஓர் சாலை கொண்டு ஏகி, 'இவ் வயின்
நனி உறை' என்று, அவற்கு அமைய நல்கி, தாம்
தனி இடம் சார்ந்தனர்; தங்கி, மாதவர்
அனைவரும் எய்தினர், அல்லல் சொல்லுவான். 10

  • மூவரையும் ஒரு பன்னசாலையில் தங்கச் செய்து, அனைவரும் ஒன்று கூடி, தம் அல்லைச் சொல்வதற்காக இராமனிடம் வந்தனர்.  

கம்ப இராமாயணம் 
3 ஆரணிய காண்டம் 
3. அகத்தியப் படலம் 
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி