Monday, 27 January 2020

கம்பராமாயணம் - சரபங்கன் பிறப்பு நீங்கு படலம் - KambaRamayanam 3-2 30

இந்திரன் இராமனைப் போற்றல் 

என்று, இன்ன விளம்பிடும் எல்லையின்வாய்,
வன் திண் சிலை வீரரும் வந்து அணுகா,
ஒன்றும் கிளர் ஓதையினால் உணர்வார்,
நின்று, 'என்னைகொல் இன்னது?' எனா நினைவார்: 21

 • அப்போது அங்கு வந்த வில்வீரர்கள் இராமனும் இலக்குவனும் சரவங்க முனிவர் சொன்னதைக் கேட்டு  "என்ன இது" என்று எண்ணினர் 

'கொம்பு ஒத்தன நால் ஒளிர் கோள் வயிரக்
கம்பக் கரி நின்றது கண்டனமால்;
இம்பர், தலை மா தவர்பால், இவன் ஆம்
உம்பர்க்கு அரசு எய்தினன்' என்று உணரா, 22

 • ஏறிவந்த யானைக்கு நான்கு கொம்பு இருப்பதால் வந்திருப்பவன் இந்திரனே என உணர்ந்துகொண்டனர் 

மானே அனையாளொடு மைந்தனை அப்
பூ நேர் பொழிலின் புறமே நிறுவா,
ஆன்ஏறு என, ஆள் அரிஏறு இது என,
தானே அவ் அகன் பொழில் சாருதலும், 23

 • சீதையையும் இலக்குவனையும் பொழிலுக்கு வெளியில் நிறுத்திவிட்டு இராமன் மட்டும் பொழிலுக்குள் நுழைந்தான். 
 • இந்திரனைப் போற்றுகின்றான் 

கண்தாம் அவை ஆயிரமும் கதுவ,
கண் தாமரைபோல் கரு ஞாயிறு எனக்
கண்டான், இமையோர் இறை- காசினியின்
கண்தான், அரு நான்மறையின் கனியை. 24

 • கருந்தாமரை போன்ற கண்கள் ஆயிரம் கொண்டவனே 
 • நான்மறைக் கனியே 

காணா, மனம் நொந்து கவன்றனனால்,
ஆண் நாதனை, அந்தணர் நாயகனை,
நாள் நாளும் வணங்கிய நன் முடியால்,
தூண் ஆகிய தோள்கொடு, அவன்-தொழுவான், 25

 • அந்தணர் நாயகன் இந்திரனைத் தோள்நாயகன் இராமன் தொழுதான் 

துவசம் ஆர் தொல் அமருள், துன்னாரைச் செற்றும்,
    சுருதிப் பெருங் கடலின் சொல் பொருள் கற்பித்தும்,
திவசம் ஆர் நல் அறத்தின் செந்நெறியின் உய்த்தும்,
    திரு அளித்தும், வீடு அளித்தும், சிங்காமைத் தங்கள்
கவசம் ஆய், ஆர் உயிர் ஆய், கண் ஆய், மெய்த் தவம் ஆய்,
    கடை இலா ஞானம் ஆய், காப்பானைக் காணா,
அவசம் ஆய், சிந்தை அழிந்து, அயலே நின்றான்,
    அறியாதான் போல, அறிந்த எலாம் சொல்வான்: 26

 • தொழுத இராமனைப் பற்றி ஒன்றும் அறியாதவன் போல அறிந்த எல்லாவற்றையும் சொல்லி இந்திரன் புகழ்ந்தான்  

'தோய்ந்தும், பொருள் அனைத்தும் தோயாது நின்ற
    சுடரே! தொடக்கு அறுத்தோர் சுற்றமே! பற்றி
நீந்த அரிய நெடுங் கருணைக்கு எல்லாம்
    நிலயமே! வேதம் நெறி முறையின் நேடி
ஆய்ந்த உணர்வின் உணர்வே! பகையால்
    அலைப்புண்டு அடியேம் அடி போற்ற, அந் நாள்
ஈந்த வரம் உதவ எய்தினையே? எந்தாய்!
    இரு நிலத்தவோ, நின் இணை அடித் தாமரைதாம்? 27

 • இராமனைப் பலவாறு உயர்த்திப் பேசினான்
 • அந்நாள் வரத்தால் நிலத்தைக் காக்க வந்திருக்கிறாய் என்றான் 

'மேவாதவர் இல்லை, மேவினரும் இல்லை;
    வெளியோடு இருள் இல்லை, மேல் கீழும் இல்லை;
மூவாதமை இல்லை, மூத்தமையும் இல்லை;
    முதல் இடையொடு ஈறு இல்லை, முன்னொடு பின் இல்லை;
தேவா! இங்கு இவ்வோ நின் தொன்று நிலை என்றால்,
    சிலை ஏந்தி வந்து, எம்மைச் சேவடிகள் நோவ,
காவாது ஒழியின், பழி பெரிதோ? அன்றே;
    கருங் கடலில் கண்வளராய்! கைம்மாறும் உண்டோ? 28

 • இராமன் பெருமைகளைப் போசினான் 

'நாழி, நரை தீர் உலகு எலாம் ஆக,
    நளினத்து நீ தந்த நான்முகனார் தாமே
ஊழி பலபலவும் நின்று அளந்தால், என்றும்
    உலவாப் பெருங் குணத்து எம் உத்தமனே! மேல்நாள்,
தாழி தரை ஆக, தண் தயிர் நீர் ஆக,
    தட வரையே மத்து ஆக, தாமரைக் கை நோவ
ஆழி கடைந்து, அமுதம் எங்களுக்கே ஈந்தாய்;
    -அவுணர்கள்தாம்நின் அடிமை அல்லாமை உண்டோ ? 29

 • உந்தியில் நான்முகனைத் தந்தவனே 
 • கடல் கடைந்து எங்களுக்கு அமுதம் தந்தவனே 

'ஒன்று ஆகி, மூலத்து உருவம் பல ஆகி,
    உணர்வும் உயிரும் பிறிது ஆகி, ஊழி
சென்று ஆசறும் காலத்து அந் நிலையது ஆகி,
    திறத்து உலகம்தான் ஆகி, செஞ்செவே நின்ற
நன்று ஆய ஞானத் தனிக் கொழுந்தே! எங்கள்
    நவை தீர்க்கும் நாயகமே! நல் வினையே நோக்கி
நின்றாரைக் காத்தி; அயலாரைக் காய்தி;
    நிலை இல்லாத் தீவினையும் நீ தந்தது அன்றே? 30

 • ஞானக் கொழுந்தே
 • எங்கள் குற்றங்களைத் தீர்க்கும் நாயகமே - என்றெல்லாம்  போற்றினான் 

கம்ப இராமாயணம்  3 ஆரணிய காண்டம் -  
2. சரபங்கன் பிறப்பு நீங்கு படலம் 
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி