Monday, 27 January 2020

கம்பராமாயணம் - சரபங்கன் பிறப்பு நீங்கு படலம் - KambaRamayanam 3-2 10

சரபங்கன் பிறப்பு நீங்கு படலம் 
விராதன் வதைக்குப் பின்னர்

இந்திரன் வரல் 


குரவம், குவி கோங்கு, அலர் கொம்பினொடும்,
இரவு, அங்கண், உறும் பொழுது எய்தினரால்-
சரவங்கன் இருந்து தவம் கருதும்,
மரவம் கிளர், கோங்கு ஒளிர், வாச வனம். 1

  • மூவரும் சரவங்கன் தவக் குடிலுக்கு வந்தனர் 

செவ் வேலவர் சென்றனர்; சேறல் உறும்
அவ் வேலையின் எய்தினன்-ஆயிரமாம்,
தவ்வாது இரவும் பொலி தாமரையின்
வெவ்வேறு அலர், கண்ணினன், விண்ணவர் கோன். 2

  • அப்போது ஆயிரம் கண் கொண்ட இந்திரன் அங்கு வந்தான் 

அன்னச் செலவின், படிமேல், அயல் சூழ்
பொன்னின் பொலி வார் அணி பூண் ஒளிமேல்
மின்னின் செறி கற்றை விரிந்தனபோல்,
பின்னிச் சுடரும், பிறழ், பேர் ஒளியான்; 3

  • இந்திரன் பேரொளியன் 

வானில் பொலி தோகையர் கண்மலர் வண்
கானில் படர் கண்-களி வண்டொடு, தார்
மேனித் திரு நாரதன் வீணை இசைத்
தேனில் படியும் செவி வண்டு உடையான்; 4

  • வான் மகளிர் கண் வண்டுகள் அவனை மொய்த்தன 

அனையின் துறை ஐம்பதொடு ஐம்பதும், நூல்
வினையின் தொகை வேள்வி நிரப்பிய மா
முனைவன்; முது தேவரில் மூவர் அலார்
புனையும் முடி துன்று பொலங் கழலான்; 5

  • இந்திரன், மூவர் அல்லாப் பிற தேவர் தொழும் பெற்றியன் 

செம் மா மலராள் நிகர் தேவியொடும்,
மும் மா மத வெண் நிற முன் உயர் தாள்
வெம் மா மிசையான்; விரி வெள்ளி விளங்கு
அம் மா மலை அண்ணலையே அனையான்; 6

  • தேவியொடு வீற்றிருக்கும் சிவன் போன்றவன் 

தான், இன்று அயல் நின்று ஒளிர் தண் கதிரோன்,
'யான் நின்றது என்?' என்று, ஒளி எஞ்சிட, மா
வான் நின்ற பெரும் பதம் வந்து, உரு ஆய்
மேல் நின்றென, நின்று ஒளிர் வெண் குடையான்; 7

  • கதிரவன் ஒளி நாணும்படி வந்தான்  

திசை கட்டிய மால் கரி தெட்ட மதப்
பசை கட்டின, கிட்டின பற்பல போர்
விசை கட்டழி தானவர் விட்டு அகல் பேர்
இசை கட்டிய ஒத்து இவர், சாமரையான்; 8

  • வேத ஒலி விசிற வந்தான் 

தேரில் திரி செங் கதிர் தங்குவது ஒர்
ஊர் உற்றது எனப் பொலி ஒண் முடியான்;
போர் வித்தகன்; நேமி பொறுத்தவன் மா
மார்வில் திருவின் பொலி மாலையினான்; 9

  • மார்பில் மாலை அணிந்திருந்தான் 

செற்றி, கதிரின் பொலி செம் மணியின்
கற்றைச் சுடர் விட்டு எரி கஞ்சுகியான்;
வெற்றித் திருவின் குளிர் வெண் நகைபோல்
சுற்றிக் கிளரும் சுடர் தோள்வளையான்; 10

  • கஞ்சுகம், தோள்வளை அணிந்திருந்தான் 

கம்ப இராமாயணம்  3 ஆரணிய காண்டம் -  
2. சரபங்கன் பிறப்பு நீங்கு படலம் 
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி