Wednesday, 26 February 2020

அவன்-அவள He-She

அவனும் அவளும் சேர்ந்தனர்.
குழந்தை பிறந்தது.
பிறந்த குழந்தைக்கு அவன் ஆதி.
அவள் பகவு.
ஆதிபகவு. ஆதிபகவன்.

அவன்தானே அவளிடம் வந்தான்.
காளைதானே ஏறும். பசு ஏறாது அல்லவா?
எனவே அவன் ஆதி.
அவள் ஆதியைப் பங்கு போட்டுக்கொண்டவள்.
பங்காக இருப்பது பகவு.

குழந்தைக்குத் தன் உடம்பிலிருந்து பாலைப் பங்கிட்டுத் தருபவள் தாய்தானே. அதனால் அவள் பகவு.

அறநெறியைக் காப்பது
அந்தணர்கள் அறநெறி நூல்களை ஆக்கச் செய்வது
மன்னவன் கோல். (திருக்குறள் 543)
மன்னவன் கோல்போல் நம்மை ஆட்டிப் படைப்பது ஆதி.

வள்ளுவர் கூட "எட்பகவு" என்கிறார். (889)
எள்ளுக்குள் இருப்பது எண்ணெய். எள் முளைக்கும் கரு.
இவற்றை நாம் பார்க்க முடியாது.
உட்பகை இப்படி இருக்குமாம்.
வள்ளுவர் சொல்கிறார்.

எனக்குத் தாய்தந்தையர் எனக்கு ஆதிபகவன்.
அவர்களுக்கு அவர்களது தாய்தந்தையர்.
அவர்களுக்கு? அவர்களுக்கு?

உனக்கு ஆதிபகவன்
அவனுக்கு ஆதிபகவன்
அதற்கு ஆதிபகவன்
நமக்கெல்லாம் ஆதிபகவன் - எண்ணுவோம்.

புரிகிறது
தெரியவில்லை
எள்ளில் இருக்கும் பகவு போல
ஆதியாய் இருக்கும் மன்னவன் கோல் போல

இருப்பது பகவு
ஆட்டிப் படைப்பது ஆதி

உலகில் இருக்கும் உயிரினங்கள் அனைத்துக்கும் ஆதிபகவன் இப்படித்தானே இருக்கிறான்?
எனவே "ஆதிபகவன் முதற்றே உலகு"

மொழி கருத்தைப் பரிமாறும் ஒரு கருவி.
மொழி ஒலியாலானது.
ஒலி எழுதப்படும்போது எழுத்தாகிறது.
எழுத்துக்களுக்கு முதலாக இருப்பது "அ".

எழுத்துக்களுக்கு முதல் அ போல, உலகுக்கு முதல் ஆதிபகவன்.

ஆதிபகவன் (திருக்குறள் 1)

கம்பராமாயணம் கிட்கிந்தைப் படலம் - KambaRamayanam 4-11 Link

கம்ப இராமாயணம் 
கிட்கிந்தா காண்டம் 
11. கிட்கிந்தைப் படலம்
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்


கம்பராமாயணம் கிட்கிந்தைப் படலம் - KambaRamayanam 4-11 Plus

மிகைப் பாடல்கள்


கள் உண்டு களித்த நிலியில், வெள்ளி மலையில் தோன்றும் புள்ளிமான் போலச் சுக்கிரீவன் பொலிவுடன் காணப்பட்டான். 18-1
இந்த நிலைமையை அனுமன் இலக்குவனிடம் தெழிவித்தான். 25-1
இலக்குவன் பாதையைப் பொருட்படுத்தாமல் விரைந்து சென்றான். 32-1
இலக்குவன் சினத்துடன் தோன்றினான். 34-1
சுக்கிரீவனை எழுப்பும்படி அங்கதனை ஏவினான். 41-1
சுக்கிரீவனுடன் இருந்துகொண்டு, அவ்வப்போது நிகழ்வனவற்றை தனக்குச் சொல்லும்படி அங்கதனிடம் இராமன் சொல்லி அனுப்பினான். 137-1

பாடல்

தெள்ளியோர் உதவ, பெருஞ் செல்வம் ஆம்
கள்ளினால், அதிகம் களித்தான்; கதிர்ப்
புள்ளி மா நெடும் பொன் வரை புக்கது ஒர்
வெள்ளி மால் வரை என்ன விளங்குவான். 18-1

சென்று மாருதி தன்னிடம் சேர்ந்து, அவண்
நின்ற தன்மைகள் யாவும் நிகழ்த்தலும்,
வென்றி வீரன் வியப்பொடு மேல்வினை
ஒன்றுவான் அவன் தன்னை உசாவினான். 25-1

நீளும் மால் வரையின் நெறிதான் கடந்து,
ஊழி காலத்து ஒரு முதல் ஆகிய
ஆழிநாதனுக்கு அன்புடைத் தம்பியாம்
மீளிதான் வரும் வேகத்துக்கு அஞ்சியே. 32-1

மேவினான் கடை சேமித்த மென்மை கண்டு
ஓவு இலா மனத்து உன்னினன்-எங்கள் பால்
பாவியார்கள் தம் பற்று இதுவோ எனாத்
தேவரானும் சினத்தொடு நோக்கியே. 34-1

அன்னை போன பின், அங்கதக் காளையை,
தன்னை நேர் இல் அச் சமீரணன் காதலன்,
'இன்னம் நீ சென்று, இருந் துயில் நீக்கு' என,
மன்னன் வைகு இடத்து ஏகினன், மாசு இலான். 41-1

சேய் உயர் கீர்த்தியான், 'கதிரின் செம்மல்பால்
போயதும், அவ் வயின் புகுந்த யாவையும்,
ஓய்வுறாது உணர்த்து' என, உணர்த்தினான் அரோ,
வாய்மையா - உணர்வுறு வலி கொள் மொய்ம்பினோன் 137-1

கம்ப இராமாயணம் 
கிட்கிந்தா காண்டம் 
11. கிட்கிந்தைப் படலம்


கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்

கம்பராமாயணம் கிட்கிந்தைப் படலம் - KambaRamayanam 4-11 137

அனுமன் நிலை


நீ துன்புறும்போது நான் இன்புற்றிருந்திருக்கிறேன் - என்று இராமனிடம் சொல்லிக்கொண்டு சுக்கிரீவன் வருந்தினான் 131
எனக்குப் பரதன் போன்றவன் நீ. இவ்வாறெல்லாம் வருந்த வேண்டாம் என்று இராமன் தேற்றினான். 132
இராமன் அனுமனைப்பற்றி வினவினான். அனுமன் படையுடன் வருவான் என்றான் சுக்கிரீவன்.. 133
படை திரட்டத் தூதுவர் சென்றுள்ளனர். அவர்கள் திரட்டிய படையுடன் இன்றோ, நாளையோ வந்துவிடுவான் என்றான். 134
ஒன்பது ஆயிரம் கோடி பேர் கொண்ட படை வரும். பின்னர் பேசுவோம் என்றான். 135
இராமன் நன்று என்றான். சுக்கிரீவன் விடைபெற்றுச் சென்றான். 136
உன் தந்தையுடன் செல் என்று இராமன் அங்கதனுக்கு விடை தந்தான். தான் தன் மனைவி நிந்தனையுடன் இருந்தான். 137

பாடல்

'இனையன யானுடை இயல்பும், எண்ணமும்,
நினைவும், என்றால், இனி, நின்று யான் செயும்
வினையும், நல் ஆண்மையும், விளம்ப வேண்டுமோ? -
வனை கழல், வரி சிலை, வள்ளியோய்!' என்றான். 131

திரு உறை மார்பனும், 'தீர்ந்ததோ வந்து
ஒருவ அருங் காலம்? உன் உரிமையோர் உரை -
தரு வினைத்து ஆகையின், தாழ்விற்று ஆகுமோ?
பரதன் நீ! இனையன, பகரற்பாலையோ?' 132

ஆரியன், பின்னரும் அமைந்து, 'நன்கு உணர்
மாருதி எவ் வழி மருவினான்?' என,
சூரியன் கான் முளை, 'தோன்றுமால், அவன்
நீர் அரும் பரவையின் நெடிது சேனையான்.' 133

'கோடி ஓர் ஆயிரம் குறித்த கோது இல் தூது
ஓடின; நெடும் படை கொணர்தல் உற்றதால்;
நாள் தரக் குறித்ததும், இன்று; நாளை, அவ்
ஆடல் அம் தானையோடு அவனும் எய்துமால். 134

'ஒன்பதினாயிர கோடி உற்றது
நின் பெருஞ் சேனை; அந் நெடிய சேனைக்கு
நன்கு உறும் அவதி நாள் நாளை; நண்ணிய
பின், செயத்தக்கது பேசற்பாற்று' என்றான். 135

விரும்பிய இராமனும், 'வீர! நிற்கு அது ஓர்
அரும் பொருள் ஆகுமோ? அமைதி நன்று' எனா,
'பெரும் பகல் இறந்தது; பெயர்தி; நின் படை
பொருந்துழி வா' என, தொழுது போயினான். 136

அங்கதற்கு இனியன அருளி, 'ஐய! போய்த்
தங்குதி உந்தையோடு' என்று, தாமரைச்
செங் கணான், தம்பியும், தானும், சிந்தையின்
மங்கையும், அவ் வழி, அன்று வைகினான். 137

கம்ப இராமாயணம் 
கிட்கிந்தா காண்டம் 
11. கிட்கிந்தைப் படலம்
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்

கம்பராமாயணம் கிட்கிந்தைப் படலம் - KambaRamayanam 4-11 130

இராமன் தழுவினான்


முத்துப் பல்லாக்குப் படை சுக்கிரீவனின் பின்னே வந்தது. 121
இலக்குவன் நடந்து சென்றான். சுக்கிரீவன் தேரில் சென்றான். 122
படையை மலையடிவாரத்தில் நிறுத்திவிட்டு, இலக்குவன், தான், அங்கதன் என்று மூவரும் சென்றனர். 123
சுக்கிரீவன் இராமனைத் தொழுதான். அது முன்னர் பரதன் இராமனைத் தொழுதது போல இருந்தது. 124
தன் மாலை நிலத்தில் படும்படி விழுந்து தொழுதான். 125
இராமன் சினம் தணிந்து கருணை பொங்கச் சுக்கிரீவனைத் தழுவினான். சுக்கிரீவனுக்கு இருக்கை தந்தான். 126
குடிமக்கள் நலமா, என வினவினான். 127
உன் அருள் பெற்ற என் கொற்றக்குடைக்கு என்ன குறை, என முகமன் கூறினான், சுக்கிரீவன். 128
உன் அருள் வழங்கிய செல்வம் பெற்றுள்ளேன். உன் பணியை மறுத்துக் காலம் கடத்தியதைத் திருத்திக்கொண்டேன், என்றான். 129
நீ மனைவியை நினைத்து வருந்துகிறாய். நான் மனைவியோடு இன்புற்றுக் கிடந்தேன். என்று கூறி வருந்தினான். 130

பாடல்

பொன்னினின், முத்தினின், புனை மென் தூசினின்,
மின்னின மணியினின், பளிங்கின், வெள்ளியின்,
பின்னின, விசும்பினும் பெரிய; பெட்புறத்
துன்னின, சிவிகை; வெண் கவிகை சுற்றின. 121

வீரனுக்கு இளையவன் விளங்கு சேவடி
பாரினில் சேறலின், பரிதி மைந்தனும்,
தாரினின் பொலங் கழல் தழங்க, தாரணித்
தேரினில் சென்றனன், சிவிகை பின் செல. 122

எய்தினன், மானவன் இருந்த மால் வரை,
நொய்தினின் - சேனை பின்பு ஒழிய, நோன் கழல்
ஐய வில் குமரனும், தானும், அங்கதன்
கை தொடர்ந்து அயல் செல, காதல் முன் செல, 123

கண்ணிய கணிப்ப அருஞ் செல்வக் காதல் விட்டு,
அண்ணலை அடி தொழ அணையும் அன்பினால்,
நண்ணிய கவிக் குலத்து அரசன், நாள் தொறும்
புண்ணியன் - தொழு கழல் பரதன் போன்றனன். 124

பிறிவு அருந் தம்பியும் பிரிய, பேர் உலகு
இறுதியில் தான் என இருந்த ஏந்தலை,
அறை மணித் தாரினோடு, ஆரம் பார் தொட,
செறி மலர்ச் சேவடி முடியின் தீண்டினான். 125

தீண்டலும், மார்பிடைத் திருவும் நோவுற,
நீண்ட பொன் தடக் கையால் நெடிது புல்லினான்;
மூண்டு எழு வெகுளி போய் ஒளிப்ப, முன்புபோல்
ஈண்டிய கருணை தந்து, இருக்கை ஏவியே, 126

அயல் இனிது இருத்தி, 'நின் அரசும் ஆணையும்
இயல்பினின் இயைந்தவே? இனிதின் வைகுமே,
புயல் பொரு தடக் கை நீ புரக்கும் பல் உயிர்?
வெயில் இலதே, குடை?' என வினாயினான். 127

பொருளுடை அவ் உரை கேட்ட போழ்து, வான்
உருளுடைத் தேரினோன் புதல்வன், 'ஊழியாய்!
இருளுடை உலகினுக்கு இரவி அன்ன நின்
அருளுடையேற்கு அவை அரியவோ?' என்றான். 128

பின்னரும் விளம்புவான், 'பெருமையோய்! நினது
இன் அருள் உதவிய செல்வம் எய்தினேன்;
மன்னவ! நின் பணி மறுத்து வைகி, என்
புல் நிலைக் குரக்கு இயல் புதுக்கினேன்' என்றான். 129

'பெருந் திசை அனைத்தையும் பிசைந்து தேடினென்
தரும் தகை அமைந்தும், அத் தன்மை செய்திலேன்;
திருந்திழை திறத்தினால், தெளிந்த சிந்தை நீ,
வருந்தினை இருப்ப, யான் வாழ்வின் வைகினேன். 130

கம்ப இராமாயணம் 
கிட்கிந்தா காண்டம் 
11. கிட்கிந்தைப் படலம்


கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்

கம்பராமாயணம் கிட்கிந்தைப் படலம் - KambaRamayanam 4-11 120

படையுடன் செல்லல்


இலக்குவன் உரை - உன் மேல் வருத்தம். கருத்து வேறுபாடு. இந்த நிலையில் உண்டால் அமிர்தமும் கைக்குமன்றோ? 111
அண்ணன் மனைவியைக் காட்டுவாயானால் உன் அமிர்தம் உண்டவன் ஆவேன். இப்போது பசி இல்லை. 112
இராமன் உண்ட  பச்சிலை, கிழங்கு, காய் ஆகியவற்றின் மிச்சில் மட்டுமே உண்பேன். 113
அன்றியும் ஒன்று உள்ளது. நான் சென்று உணவு கொண்டுவந்து கொடுத்துதான் அண்ணன் உண்ண வேண்டும். எனவே, உடனே சென்றாக வேண்டும். 114
இலக்குவன் பண்பாடு தன் இனத்துக்கு இல்லையே என்று சுக்கிரீவன் வருந்தினான். 115
சுக்கிரீவன் தன் பிழையைப் பொறுத்துக்கொள்ளுமாறு இலக்குவனை வேண்டினான்.  116
தூதர்  கொண்டுவந்த படையுடன் வருக என்று அனுமனிடம் கூறினான். 117
அங்கதனும் அனுமனுடன் சென்றான். படை திரண்டு வந்தது. 118
11 ஆயிரம் கோடி யூகம் படையினர் முன்னே செல்ல, சுற்றத்தாருடன் சுக்கிரீவன் பின்னே சென்றான். 119 
வானம் பூத்தது போல, பேரிகை, சங்கு முழங்க இராமனிடம் சென்றான். 120

பாடல்

'வருத்தமும் பழியுமே வயிறு மீக் கொள,
இருத்தும் என்றால், எமக்கு இனியது யாவதோ?
அருத்தி உண்டு ஆயினும், அவலம்தான் தழீஇ,
கருத்து வேறு உற்றபின், அமிர்தும் கைக்குமால். 111

'மூட்டிய பழி எனும் முருங்கு தீ அவித்து,
ஆட்டினை கங்கை நீர் - அரசன் தேவியைக்
காட்டினை எனின் - எமைக் கடலின் ஆர் அமிர்து
ஊட்டினையால்; பிறிது உயவும் இல்லையால். 112

'பச்சிலை, கிழங்கு, காய், பரமன் நுங்கிய
மிச்சிலே நுகர்வது; வேறுதான் ஒன்றும்
நச்சிலேன்; நச்சினேன் ஆயின், நாய் உண்ட
எச்சிலே அது; இதற்கு ஐயம் இல்லையால். 113

'அன்றியும் ஒன்று உளது; ஐய! யான் இனிச்
சென்றனென் கொணர்ந்து அடை திருத்தினால், அது
நுன் துணைக் கோ மகன் நுகர்வது; ஆதலான்,
இன்று, இறை தாழ்த்தலும் இனிது அன்றாம்' என்றான் 114

வானர வேந்தனும், 'இனிதின் வைகுதல்,
மானவர் தலைமகன் இடரின் வைகவே,
ஆனது குரக்குஇனத்து எமர்கட்கு ஆம்!' எனா,
மேல் நிலை அழிந்து, உயிர் விம்மினான் அரோ. 115

எழுந்தனன் பொருக்கென, இரவி கான்முளை;
விழுந்த கண்ணீரினன், வெறுத்த வாழ்வினன்,
அழிந்து அயர் சிந்தையன், அனுமற்கு, ஆண்டு, ஒன்று
மொழிந்தனன், அவனுழைப் போதல் முன்னுவான். 116

'போயின தூதரின் புகுதும் சேனையை,
நீ உடன் கொணருதி, நெறி வலோய்!' என,
ஏயினன், அனுமனை, 'இருத்தி ஈண்டு' எனா,
நாயகன் இருந்துழிக் கடிது நண்ணுவான். 117

அங்கதன் உடன் செல, அரிகள் முன் செல,
மங்கையர் உள்ளமும் வழியும் பின் செல,
சங்கை இல் இலக்குவன் - தழுவி, தம்முனின்,
செங் கதிரோன் மகன், கடிது சென்றனன். 118

ஒன்பதினாயிர கோடி யூகம், தன்
முன் செல, பின் செல, மருங்கு மொய்ப்புற,
மன் பெருங் கிளைஞரும் மருங்கு சுற்றுற,
மின் பொரு பூணினான் செல்லும் வேலையில். 119

கொடி வனம் மிடைந்தன; குமுறு பேரியின்
இடி வனம் மிடைந்தன; பணிலம் ஏங்கின;
தடி வனம் மிடைந்தன, தயங்கு பூண் ஒளி;
பொடி வனம் எழுந்தன; வானம் போர்த்தவே. 120

கம்ப இராமாயணம் 
கிட்கிந்தா காண்டம் 
11. கிட்கிந்தைப் படலம்
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்

கம்பராமாயணம் கிட்கிந்தைப் படலம் - KambaRamayanam 4-11 110

இலக்குவனும் சுக்கிரீவனும் தழுவிக்கொள்ளல்


குரங்கரசன் சுக்கிரீவன் இலக்குவன் முன் வந்தான். மகளிர் அவனுக்குக் கவரி வீசிக்கொண்டிருந்தனர். அவன் மேல் மணப்பொடிகளைத் தூவினர். 101
முரசு முழங்க, முனிவர் வேதம் ஓத, சுக்கிரீவன் வந்தான். 102
மகளிர் விண்மீன் போலச் சூழ்ந்துவர, நிலாப் போல வந்தான். 103

தோன்றிய சீற்றத்தை இலக்குவன் அடக்கிக்கொண்டான். 104
சுக்கிரீவனும், இலக்குவனும் தழுவிக்கொண்டனர். அனைவரும் மாளிகைக்குச் சென்றனர். 105

புல்லலில் புதிதாக அமைத்த அரியணையில் அமருமாறு சுக்கிரீவன் வேண்டினான். இலக்குவன் விரும்பவில்லை. 106
கைகேயியால் அரியணையைத் துறந்த என் அண்ணன் புல் அணையில் இருக்கிறான். எனக்குப் பூவணையா என்றான். 107
கட்டாந்தரையில் அமர்ந்தான். 108
கண்ட அனைவரும் கண் கலங்கினர். 109

நீராடி விருந்துண்ணுமாறு சுக்கிரீவன் வேண்டினான். இலக்குவன் மறுத்துக் கூறலானான். 110

பாடல் 

சுண்ணமும் தூசும் வீசி, சூடகத் தொடிக் கைம் மாதர்,
கண் அகன் கவரிக் கற்றைக் கால் உற, கலை வெண் திங்கள்
விண் உற வளர்ந்தது என்ன வெண் குடை விளங்க, வீர
வண்ண வில் கரத்தான் முன்னர், கவிக் குலத்து அரசன் வந்தான். 101

அருக்கியம் முதல் ஆன அருச்சனைக்கு அமைந்த யாவும்
முருக்கு இதழ் மகளிர் ஏந்த, முரசு இனம் முகிலின் ஆர்ப்ப,
இருக்கு இனம் முனிவர் ஓத, இசை திசை அளப்ப, யாணர்த்
திருக் கிளர் செல்வம் நோக்கி, தேவரும் மருளச் சென்றான் 102

வெம் முலை மகளிர் வெள்ளம் மீன் என விளங்க, விண்ணில்
சும்மை வான் மதியம் குன்றில் தோன்றியது எனவும் தோன்றி,
செம்மலை எதிர்கோள் எண்ணி, திருவொடு மலர்ந்த செல்வன்,
அம் மலை உதயம் செய்த தாதையும் அனையன் ஆனான் 103

தோற்றிய அரிக் குலத்து அரசை, தோன்றலும்,
ஏற்று எதிர் நோக்கினன்; எழுந்தது, அவ் வழிச்
சீற்றம்; அங்கு, அதுதனை, தெளிந்த சிந்தையால்
ஆற்றினன், தருமத்தின் அமைதி உன்னுவான். 104

எழுவினும், மலையினும், எழுந்த தோள்களால்,
தழுவினர், இருவரும்; தழுவி, தையலார்
குழுவொடும், வீரர்தம் குழாத்தினோடும் புக்கு,
ஒழிவு இலாப் பொற் குழாத்து உறையுள் எய்தினார். 105

அரியணை அமைந்தது காட்டி, 'ஐய! ஈண்டு
இரு' எனக் கவிக் குலத்து அரசன் ஏவலும்,
'திருமகள் தலைமகன் புல்லில் சேர, எற்கு
உரியதோ இஃது?' என மனத்தின் உன்னுவான். 106

'கல் அணை மனத்தினையுடைக் கைகேசியால்,
எல் அணை மணி முடி துறந்த எம்பிரான்
புல் அணை வைக, யான் பொன் செய் பூந் தொடர்
மெல் அணை வைகவும் வேண்டுமோ?' என்றான். 107

என்று அவன் உரைத்தலும், இரவி காதலன்
நின்றனன்; விம்மினன், மலர்க்கண் நீர் உக;
குன்று என உயர்ந்த அக் கோயில் குட்டிம
வன் தலத்து இருந்தனன், மனுவின் கோ மகன். 108

மைந்தரும், முதியரும், மகளிர் வெள்ளமும்,
அந்தம் இல் நோக்கினர், அழுத கண்ணினர்,
இந்தியம் அவித்தவர் என இருந்தனர்;
நொந்தனர்; தளர்ந்தனர்; நுவல்வது ஓர்கிலார். 109

'மஞ்சன விதி முறை மரபின் ஆடியே,
எஞ்சல் இல் இன் அமுது அருந்தின், யாம் எலாம்
உய்ஞ்சனம் இனி' என அரசு உரைத்தலும்,
அஞ்சன வண்ணனுக்கு அனுசன் கூறுவான்: 110

கம்ப இராமாயணம் 
கிட்கிந்தா காண்டம் 
11. கிட்கிந்தைப் படலம்
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்

Tuesday, 25 February 2020

கம்பராமாயணம் கிட்கிந்தைப் படலம் - KambaRamayanam 4-11 100

மங்கல வரவேற்பு


தன்னைத் தான் உணர்ந்துகொண்டால் பிறவி அற்றுப்போகும். 91
மதுவில் களித்தவர் நற்கதி கண்டதுண்டோ. 92
சொன்னசொல், உதவி ஆகியவற்றை மறந்தால் இறுதி உண்டாகும். 93
வஞ்சம், பொய், களவு, மயக்கம் - அனைத்தும் கள்ளினால் வரும். 94
இவ்வாறு அனுமன் கூறினான். 95

இனிக் கள் உண்ணமாட்டேன். உண்டால் இராமன் என்னை மிதித்து அழிக்கட்டும், என்றான் சுக்கிரீவன். 96

இலக்குவனை நீயே எதிர்களொள் என்றான் அனுமன். சுக்கிரீவன் தன் மனைவி, சுற்றம் சூழச் சென்று இராமனை எதிர்கொண்டான். 97

சந்தனம், பூ, மணப்பொடி, நறும்புகை, பொற்குடம், விளக்கு, மாலை, முத்துத் தொங்கல், கொடி முதலான மங்கலப் பொருள்களுடன், சங்கும், முரசும் முழங்கச் தெருவில் வலம்வந்து இலக்குவனை வணங்கினான். 98
வில்லாளர் 1000 பேர் வந்தது போல் கிட்கிந்தை பொலிவு பெற்றது. 99

சுக்கிரீவன் எங்கிருந்தான் என இலக்குவன் வினவ, அரண்மனையின் பின் வாயிலில் இருந்தான், என்றான், அங்கதன். 100

பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின் (திருக்குறள்)

பாடல்

'"தன்னைத் தான் உணரத் தீரும், தகை அறு பிறவி" என்பது
என்னத் தான் மறையும் மற்றத் துறைகளும் இசைத்த எல்லாம்,
முன்னை, தான் தன்னை ஓரா முழுப் பிணி அழுக்கின் மேலே,
பின்னைத் தான் பெறுவது, அம்மா! நறவு உண்டு திகைக்கும் பித்தோ? 91

'அளித்தவர், அஞ்சும் நெஞ்சின் அடைத்தவர், அறிவில் மூழ்கிக்
குளித்தவர், இன்ப துன்பம் குறைத்தவர், அன்றி, வேரி
ஒளித்தவர் உண்டு, மீண்டு, இவ் உலகு எலாம் உணர ஓடிக்
களித்தவர் எய்தி நின்ற கதி ஒன்று கண்டது உண்டோ ? 92

'செற்றதும் பகைஞர், நட்டார் செய்த பேர் உதவிதானும்,
கற்றதும், கண்கூடாகக் கண்டதும், கலைவலாளர்
கொற்றதும், மானம் வந்து தொடர்ந்ததும், படர்ந்த துன்பம்
உற்றதும், உணராத வயின், இறுதி வேறு இதனின் உண்டோ ? 93

'வஞ்சமும், களவும், பொய்யும், மயக்கமும், மரபு இல் கொட்பும்,
தஞ்சம் என்றாரை நீக்கும் தன்மையும், களிப்பும், தாக்கும்;
கஞ்ச மெல் அணங்கும் தீரும், கள்ளினால்; அருந்தினாரை
நஞ்சமும் கொல்வது அல்லால், நரகினை நல்காது அன்றே! 94

'கேட்டனென், "நறவால் கேடு வரும்" என; கிடைத்த அச் சொல்
காட்டியது; அனுமன் நீதிக் கல்வியால் கடந்தது அல்லால்,
மீட்டு இனி உரைப்பது என்னை? விரைவின், வந்து அடைந்த வீரன்
மூட்டிய வெகுளியால் யாம் முடிவதற்கு ஐயம் உண்டோ ? 95

'ஐய! நான் அஞ்சினேன், இந் நறவினின் அரிய கேடு;
கையினால் அன்றியேயும் கருதுதல் கருமம் அன்றால்;
வெய்யது ஆம் மதுவை இன்னம் விரும்பினேன் என்னின், வீரன்
செய்ய தாமரைகள் அன்ன சேவடி சிதைக்க' என்றான் 96

என்று கொண்டு, இயம்பி, அண்ணற்கு எதிர்கொளற்கு இயைந்த எல்லாம்
நன்று கொண்டு, 'இன்னும் நீயே நணுகு!' என, அவனை ஏவி,
தன் துணைத் தேவிமாரும், தமரொடும் தழுவ, தானும்
நின்றனன், நெடிய வாயில் கடைத்தலை, நிறைந்த சீரான் 97

உரைத்த செஞ் சாந்தும், பூவும், சுண்ணமும், புகையும், ஊழின்,
நிரைத்த பொற் குடமும், தீப மாலையும், நிகர் இல் முத்தும்,
குரைத்து எழு விதானத்தோடு தொங்கலும், கொடியும், சங்கும்,
இரைத்து இமிழ் முரசும், முற்றும் இயங்கின, வீதி எல்லாம் 98

தூய திண் பளிங்கின் செய்த சுவர்களின் தலத்தில், சுற்றில்,
நாயக மணியின் செய்த நனி நெடுந் தூணின் நாப்பண்,
சாயை புக்கு உறலால், கண்டோ ர் அயர்வுற, "கை விலோடும்
ஆயிரம் மைந்தர் வந்தார் உளர்' எனப் பொலிந்தது அவ் ஊர் 99

அங்கதன், பெயர்த்தும் வந்து, ஆண்டு அடி இணை தொழுதான், 'ஐய!
எங்கு இருந்தான் நும் கோமான்?' என்றலும், 'எதிர்கோள் எண்ணி,
மங்குல் தோய் கோயில் கொற்றக் கடைத்தலை மருங்கு நின்றான் -
சிங்க ஏறு அனைய வீர! - செய் தவச் செல்வன்' என்றான் 100

கம்ப இராமாயணம் 
கிட்கிந்தா காண்டம் 
11. கிட்கிந்தைப் படலம்
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்

கம்பராமாயணம் கிட்கிந்தைப் படலம் - KambaRamayanam 4-11 90

சுக்கிரீவன் தன் தவற்றினை உணர்தல்


அனுமன் மேலும் கூறினான். இலக்குவன் வரும் வேகம் கண்டு வானர வீரர்கள் நீ இருக்கும் வாயிலைக் கற்குன்றுகளால் அடைத்தனர்.  81
இலக்குவன் அதனைக் காலால் உதைத்துத் தகர்த்தான். 82
அப்போது அன்னை தாரை வந்து இலக்குவனை வணங்கினாள். 83
நாங்கள் என்ன பிழை செய்தோம் என்று வினவினாள். 84
தாரையைக் கண்ட இலக்குவன் சினம் தணிந்தான். சுக்கிரீவன் விதிமுறைமையை மறக்கவில்லை. தூதர்களை அனுப்பியுள்ளான், என்றாள். இதுதான் இங்கு நிகழ்ந்தது, என்று அனுமன் தெரிவித்ததான். 85
இலக்குவன் வரவை முன்னமே ஏன் தெரிவிக்கவில்லை என சுக்கிரீவன் வினவினான். 86
முன்பே சொன்னேன். களிமயக்கத்தில் நீ அதனை உணர்ந்துகொள்ளவில்லை. அனுமனிடம் சென்று கூறினேன். இப்போதே இலக்குவனைக் காண்க, என்றான் அங்கதன். 87
மகனே! நறவு உண்ட மயக்கத்தில் கிடந்த எனக்கு இலக்குவனைக் காண வெட்கமாக இருக்கிறது, என்று சுக்கிரீவன் தெரிவித்தான். 88

கருமத்தால் நாணுதல் நாணுத்  திருநுதல் நல்லவர் நாணுப் பிற (திருக்குறள்) சுக்கிரீவன் தன் தகாத செயலுக்கு நாணினான்.

காமம் மாயை என அறிந்திருந்தும் மயங்கினேன். 89
தீயை நெய் ஊற்றி அணைப்பவர் போல, தெரிந்தும் தீவினை செய்தேன் என்றல்லாம் சொல்லிக்கொண்டு சுக்கிரீவன் கலங்கினான். 90

பாடல்

'வருகின்ற வேகம் நோக்கி, வானர வீரர், வானைப்
பொருகின்ற நகர வாயில் பொற் கதவு அடைத்து, கற் குன்று
அருகு ஒன்றும் இல்லா வண்ணம் வாங்கினர் அடுக்கி, மற்றும்
தெரிகின்ற சினத் தீப் பொங்க, செருச் செய்வான் செருக்கி நின்றார். 81

'ஆண்தகை, அதனை நோக்கி, அம் மலர்க் கமலத் தாளால்
தீண்டினன்; தீண்டாமுன்னம், தெற்கொடு வடக்குச் செல்ல
நீண்ட கல் மதிலும், கொற்ற வாயிலும், நிரைத்த குன்றும்,
கீண்டன தகர்ந்து, பின்னைப் பொடியொடும் கெழீஇய அன்றே 82

'அந் நிலை கண்ட, திண் தோள் அரிக் குலத்து அனிகம், அம்மா!
எந் நிலை உற்றது என்கேன்? யாண்டுப் புக்கு ஒளித்தது என்கேன்?
இந் நிலை கண்ட அன்னை, ஏந்து இழை ஆயத்தொடு,
மின் நிலை வில்லினானை வழி எதிர் விலக்கி நின்றாள் 83

'மங்கையர் மேனி நோக்கான், மைந்தனும், மனத்து வந்து
பொங்கிய சீற்றம் பற்றிப் புகுந்திலன்; பொருமி நின்றான்;
நங்கையும், இனிது கூறி, "நாயக! நடந்தது என்னோ,
எங்கள்பால்?" என்னச் சொன்னாள்; அண்ணலும் இனைய சொன்னான். 84

'அது பெரிது அறிந்த அன்னை, அன்னவன் சீற்றம் மாற்றி,
"விதி முறை மறந்தான் அல்லன்; வெஞ் சினச் சேனை வெள்ளம்
கதுமெனக் கொணரும் தூது கல் அதர் செல்ல ஏவி,
எதிர் முறை இருந்தான்" என்றாள்; இது இங்குப் புகுந்தது' என்றான். 85

சொற்றலும், அருக்கன் தோன்றல் சொல்லுவான், 'மண்ணில் விண்ணில்
நிற்க உரியார்கள் யாவர், அனையவர் சினத்தின் நேர்ந்தால்?
விற்கு உரியார், இத் தன்மை வெகுளியின் விரைவின் எய்த,
எற்கு உரையாது, நீர் ஈது இயற்றியது என்கொல்?' என்றான் 86

'உணர்த்தினேன் முன்னர்; நீ அஃது உணர்ந்திலை; உணர்வின் தீர்ந்தாய்;
புணர்ப்பது ஒன்று இன்மை நோக்கி, மாருதிக்கு உரைப்பான் போனேன்;
இணர்த் தொகை ஈன்ற பொன் - தார் எறுழ் வலித் தடந் தோள் எந்தாய்!
கணத்திடை, அவனை, நீயும் காணுதல் கருமம்' என்றான் 87

உறவுண்ட சிந்தையானும் உரை செய்வான்; 'ஒருவற்கு இன்னம்
பெறல் உண்டே, அவரால் ஈண்டு யான் பெற்ற பேர் உதவி? உற்றது
இறல் உண்டே? என்னின் தீர்வான் இருந்த பேர் இடரை எல்லாம்,
நறவு உண்டு மறந்தேன்; காண நாணுவல், மைந்த!' என்றான் 88

'ஏயின இது அலால், மற்று, ஏழைமைப் பாலது என்னோ?
"தாய் இவள், மனைவி" என்னும் தெளிவு இன்றேல், தருமம் என் ஆம்?
தீவினை ஐந்தின் ஒன்று ஆம்; அன்றியும், திருக்கு நீங்கா
மாயையின் மயங்குகின்றோம்; மயக்கின் மேல் மயக்கும் வைத்தாம்! 89

'"தெளிந்து தீவினையைச் செற்றார் பிறவியைத் தீர்வர்" என்ன,
விளிந்திலா உணர்வினோரும், வேதமும், விளம்பவேயும்,
நெளிந்து உறை புழுவை நீக்கி, நறவு உண்டு நிறைகின்றேனால் -
அளிந்து அகத்து எரியும் தீயை நெய்யினால் அவிக்கின்றாரின், 90

கம்ப இராமாயணம் 
கிட்கிந்தா காண்டம் 
11. கிட்கிந்தைப் படலம்
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்

கம்பராமாயணம் கிட்கிந்தைப் படலம் - KambaRamayanam 4-11 80

சுக்கிரீவனிடம் சென்றனர்


இலக்குவன் அனுமனிடம் கூறுகிறான். உன் துணை கொண்டு சீதையைத் தேட விரும்புகிறான். இன்றேல் தன் வில்லாற்றலாயே தேடிக்கொள்ள மாட்டானா? 71
14 உலகமோ, மலைகளோ இராமன் வில்லுக்கு ஒரு பொருட்டா? 72
நீங்கள் காலம் தாழ்த்தவில்லை. அரக்கரை வாழ்வித்தீர். சினம் கொள்ளாத இராமனைச் சினம் கொள்ளும்படிச் செய்தீர். 73

இவற்றைக் கேட்ட அனுமன் போனது போகட்டும். இனி நடப்பதைச் செய்வோம் என்றான்.  74
இலக்குவனும் அனுமனும் சுக்கிரீவனிடம் சென்றனர். 75
தாரை மகளிர் சூழ்ந்து வர அவர்பளுடன் சென்றாள். 76
அங்கதன் இலக்குவனை வணங்கி சுக்கிரீவனுக்குச் செய்தி சொல்லச் சென்றான். 77
இலக்குவன் சீற்றத்துடன் உன் வாயிலில் காத்திருக்கிறான் என்றான். 78

ஒரு குற்றமும் செய்யவில்லையே. எதற்காகச் சினம், என்றான் சுக்கிரீவன். 79
சொன்ன நாளில் நாம் செல்லவில்லை. ஆதலால் சினம், என்று அனுமன் கூறினான். 80

பாடல்

'உன்னைக் கண்டு, உம் கோன் தன்னை உற்ற இடத்து உதவும் பெற்றி,
என்னைக் கண்டனன் போல் கண்டு, இங்கு இத் துணை நெடிது வைகி,
தன்னை கொண்டு இருந்தே தாழ்த்தான்; அன்று எனின், தனு ஒன்றாலே
மின்னைக் கண்டனையாள் தன்னை நாடுதல் விலக்கற்பாற்றோ? 71

'ஒன்றுமோ, வானம்? அன்றி உலகமும் பதினால் உள்ள
வென்றி மா கடலும் ஏழ் ஏழ் மலை உள்ள என்னவேயாய்
நின்றது ஓர் அண்டத்துள்ளே எனின், அது நெடியது ஒன்றோ?
அன்று நீர் சொன்ன மாற்றம் தாழ்வித்தல் தருமம் அன்றால் 72

'தாழ்வித்தீர் அல்லீர்; பல் நாள் தருக்கிய அரக்கர் தம்மை
வாழ்வித்தீர்; இமையோர்க்கு இன்னல் வருவித்தீர்; மரபின் தீராக்
கேள்வித் தீயாளர் துன்பம் கிளர்வித்தீர்; பாவம் தன்னை
மூள்வித்தீர்; முனியாதானை முனிவித்தீர், முடிவின்' என்றான் 73

தோன்றல் அஃது உரைத்தலோடும், மாருதி தொழுது, 'தொல்லை
ஆன்ற நூல் அறிஞ! போன பொருள் மனத்து அடைப்பாய் அல்லை;
ஏன்றது முடியேம் என்னின், இறத்தும்; இத் திறத்துக்கு எல்லாம்
சான்று இனி அறனே; போந்து, உன் தம்முனைச் சார்தி' என்றான். 74

'முன்னும், நீ சொல்லிற்று அன்றோ முயன்றது; முயற்றுங்காறும்,
இன்னும் நீ இசைத்த செய்வான் இயைந்தனம்' என்று கூறி,
அன்னது ஓர் அமைதியான் தன் அருள் சிறிது அறிவான் நோக்கி,
பொன்னின் வார் சிலையினானும், மாருதியோடும் போனான் 75

அயில் விழி, குமுதச் செவ் வாய், சிலை நுதல், அன்னப் போக்கின்,
மயில் இயல், கொடித் தேர் அல்குல், மணி நகை, திணி வேய் மென் தோள்,
குயில் மொழி, கலசக் கொங்கை, மின் இடை, குமிழ் ஏர் மூக்கின்,
புயல் இயல் கூந்தல், மாதர் குழாத்தொடும் தாரை போனாள் 76

வல்ல மந்திரியரோடும், வாலி காதலனும், மைந்தன்
அல்லி அம் கமலம் அன்ன அடி பணிந்து, அச்சம் தீர்ந்தான்;
வில்லியும் அவனை நோக்கி, 'விரைவின் என் வரவு, வீர!
சொல்லுதி நுந்தைக்கு' என்றான்; 'நன்று' என, தொழுது போனான். 77

போனபின், தாதை கோயில் புக்கு, அவன் பொலம் கொள் பாதம்
தான் உறப் பற்றி, முற்றும் தைவந்து, 'தடக் கை வீர!
மானவற்கு இளையோன் வந்து, உன் வாசலின் புறத்தான்; சீற்றம்
மீன் உயர் வேலை மேலும் பெரிது; இது விளைந்தது' என்றான் 78

அறிவுற்று, மகளிர் வெள்ளம் அலமரும் அமலை நோக்கிப்
பிறிவு உற்ற மயக்கத்தால், முந்து உற்றது ஓர் பெற்றி ஓரான்,
'செறி பொன் - தார் அலங்கல் வீர! செய்திலம் குற்றம்; நம்மைக்
கறுவுற்ற பொருளுக்கு என்னோ காரணம் கண்டது?' என்றான் 79

'"இயைந்த நாள் எல்லை, நீ சென்று எய்தலை; செல்வம் எய்தி
வியந்தனை; உதவி கொன்றாய்; மெய் இலை" என்ன வீங்கி,
உயர்ந்தது சீற்றம்; மற்று, அது உற்றது செய்யத் தீர்ந்து,
நயம் தெரி அனுமன் வேண்ட, நல்கினன், நம்மை இன்னும் 80

கம்ப இராமாயணம் 
கிட்கிந்தா காண்டம் 
11. கிட்கிந்தைப் படலம்
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்

கம்பராமாயணம் கிட்கிந்தைப் படலம் - KambaRamayanam 4-11 70

அனுமன் சொல்கிறான்


அனுமன் சொல்கிறான்.
தாய், தந்தை, குரு, அந்தணர், பசு, குழந்தை ஆகுயோரைக் கொன்றவர்க்கும் கழுவாய் உண்டு. உதவியை மறந்தவர்க்குக் கழுவாய் இல்லை 61எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்
உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு - திருக்குறள் - நினைவு

உங்களுக்கு உறுதி அளித்தபடி சுக்கிரீவனை நடந்துகொள்ளச் செய்வது என் கடமை 62
எங்களுக்கு எல்லாமும் நீங்கள்தான். 63
வலிமை மிக்க படையைச் சேர்க்க ஏவியுள்ளான். படை சேர்வதில்தான் தாழ்வு. 64
போரில் சுக்கிரீவன் உங்களுக்காக முன்னே நின்று தாக்குவான். 65
இங்கே நீர் நிற்பதை எங்களுக்கு வேண்டாதவர் அறிவது நன்றன்று 66

இப்படிச் சொன்ன அனுமன் உரையைக் கேட்ட இலக்குவன் சீற்றம் தணிந்தான் 67

அனுமனிடம் கூறுகிறான். 68

சீதை பிரிவால் ஐயன் துன்புறுகிறான். அவன் துன்பத்தைப் போக்க எனக்கு வரும் பழியையும் பார்க்காமல், எதுவும் செய்வேன். 69

எல்லாரையும் நான் அழிப்பேன். அதனால் இராமன் துன்பம் போகுமா? 70

பாடல்

'சிதைவு அகல் காதல் தாயை, தந்தையை, குருவை, தெய்வப்
பதவி அந்தணரை, ஆவை, பாலரை, பாவைமாரை,
வதை புரிகுநர்க்கும் உண்டாம் மாற்றல் ஆம் ஆற்றல்; மாயா
உதவி கொன்றார்க்கு என்றேனும் ஒழிக்கலாம் உபாயம் உண்டோ ? 61

'ஐய! நும்மோடும், எங்கள் அரிக் குலத்து அரசனோடும்,
மெய் உறு கேண்மை ஆக்கி, மேலை நாள் விளைவது ஆன
செய்கை, என் செய்கை அன்றோ? அன்னது சிதையும் ஆயின்,
உய் வகை எவர்க்கும் உண்டோ ? உணர்வு மாசுண்டது அன்றோ? 62

'தேவரும், தவமும், செய்யும் நல் அறத் திறமும், மற்றும்
யாவையும், நீரே என்பது, என்வயின் கிடந்தது; எந்தாய்!
ஆவது நிற்க, சேரும் அரண் உண்டோ ? அருள் உண்டு அன்றே -
மூவகை உலகும் காக்கும் மொய்ம்பினீர்! - முனிவு உண்டானால்? 63

'மறந்திலன், கவியின் வேந்தன்; வயப் படை வருவிப்பாரைத்
திறம் திறம் ஏவி, அன்னார் சேர்வது பார்த்துத் தாழ்த்தான்;
அறம் துணை நுமக்கு உற்றான் தன் வாய்மையை அழிக்கும் ஆயின்,
பிறந்திலன் அன்றே? ஒன்றோ? நரகமும் பிழைப்பது அன்றால் 64

'உதவாமல் ஒருவன் செய்த உதவிக்குக் கைம்மாறாக,
மத யானை அனைய மைந்த! மற்றும் உண்டாக வற்றோ -
சிதையாத செருவில் அன்னான் முன் சென்று, செறுநர் மார்பில்
உதையானேல், உதையுண்டு ஆவி உலவானேல், உலகில் மன்னோ? 65

'ஈண்டு, இனி, நிற்றல் என்பது இனியது ஓர் இயல்பிற்று அன்றால்;
வேண்டலர் அறிவரேனும், கேண்மை தீர் வினையிற்று ஆமால்;
ஆண் தகை ஆளி மொய்ம்பின் ஐய! நீர் அளித்த செல்வம்
காண்டியால், உன்முன் வந்த கவிக் குலக் கோனொடு' என்றான். 66

மாருதி மாற்றம் கேட்ட, மலை புரை வயிரத் தோளான்,
தீர்வினை சென்று நின்ற சீற்றத்தான், சிந்தை செய்தான் -
'ஆரியன் அருளின் தீர்ந்தான் அல்லன்; வந்து அடுத்த செல்வம்
பேர்வு அரிதாகச் செய்த சிறுமையான்' என்னும் பெற்றி 67

அனையது கருதி, பின்னர், அரிக் குலத்தவனை நோக்கி,
'நினை; ஒரு மாற்றம் இன்னே நிகழ்த்துவது உளது, நின்பால்;
இனையன உணர்தற்கு ஏற்ற; எண்ணிய நீதி' என்னா,
வனை கழல் வயிரத் திண் தோள் மன் இளங் குமரன் சொல்வான்: 68

'தேவியைக் குறித்துச் செற்ற சீற்றமும், மானத் தீயும்,
ஆவியைக் குறித்து நின்றது, ஐயனை; அதனைக் கண்டேன்;
கோ இயல் தருமம் நீங்க, கொடுமையோடு உறவு கூடி,
பாவியர்க்கு ஏற்ற செய்கை கருதுவன்; பழியும் பாரேன் 69

'ஆயினும், என்னை யானே ஆற்றி நின்று, ஆவி உற்று,
நாயகன் தனையும் தேற்ற நாள் பல கழிந்த; அன்றேல்,
தீயும், இவ் உலகம் மூன்றும்; தேவரும் வீவர்; ஒன்றோ?
வீயும், நல் அறமும்; போகா விதியை யார் விலக்கற்பாலார்? 70

கம்ப இராமாயணம் 
கிட்கிந்தா காண்டம் 
11. கிட்கிந்தைப் படலம்
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்

கம்பராமாயணம் கிட்கிந்தைப் படலம் - KambaRamayanam 4-11 60

தாரை தந்த விளக்கம்


தாரை கழுத்தில் மங்கல அணி இல்லை. மலர் சூடவில்லை. நெற்றிக் குங்குமம் அவள் முலையில் கொட்டவில்லை. பாக்குமரம் போன்ற கழுத்தைத் துணியால் போர்த்திக்கொண்டிருந்தாள். இந்த நிலையில் தாரையைக் கண்டதும் இலக்குவன் கண்களில் நீர் துளித்தது. 51

தன் தாயர் இருவர் (கைகேயி விலக்கப்பட்டாள்) நினைவு இலக்குவனுக்கு வந்தது. வந்த காரணம் என்ன என வினவிய தாரைக்கு விளக்கலானான். 52

படையுடன் சென்று சீதையைத் தேடித் தருவதாக, சுக்கிரீவன் வாக்களித்தான். அவன் நிலையை அறிந்துவருமாறு அண்ணன் அனுப்ப வந்தேன். தெரிந்ததைக் கூறுக என்றான். 53

தாரை கூறலானாள். 

சிறியவர் தீமை செய்தால் பொறுத்துக்கொள்பவர் உன்னை அல்லால் வேறு யார் உள்ளார்? பல இடங்களுக்கும் தூதரை அனுப்பியுள்ளான். இப்போது சோர்வுற்றிருக்கிறான். 54
ஆயிரம் கோடி தூதர் சென்றுள்ளனர். அவர்கள் திரும்பும் நாள் வந்துவிட்டது. தீயன செய்யமாட்டான். 55
இவர்கள் நட்புக்காகப் போரில் மாள்வதும் செய்வான்.  56
நீங்கள் அவனுக்கு அரசு தந்தீர்கள். 57
வாலியை அம்பு கொன்ற இராமனுக்குத் துணையும் வேண்டுமோ? என்றாலும் இவர்கள் சீதையைத் தேடித் தருவார்கள். 58

இவற்றைக் கேட்ட இலக்குவன் தான் கொண்ட சினத்துக்காக நாணி நின்றான். 59
அருகில் வந்து நின்ற அனுமனை நோக்கி, நீயும் மறந்தாயோ, என்று வினவினான். எந்தை! கேட்டருள்க என்று அனுமன் கூறலானான். 60

பாடல்

மங்கல அணியை நீக்கி, மணி அணி துறந்து, வாசக்
கொங்கு அலர் கோதை மாற்றி, குங்குமம் சாந்தம் கொட்டாப்
பொங்கு வெம் முலைகள், பூகக் கழுத்தொடு மறையப் போர்த்த
நங்கையைக் கண்ட வள்ளல், நயனங்கள் பனிப்ப நைந்தான் 51

'இனையர் ஆம், என்னை ஈன்ற இருவரும்' என்ன வந்த
நினைவினால் அயர்ப்புச் சென்ற நெஞ்சினன், நெடிது நின்றான்;
'வினவினாட்கு எதிர் ஓர் மாற்றம் விளம்பவும் வேண்டும்' என்று, அப்
புனை குழலாட்கு வந்த காரியம் புகல்வது ஆனான்; 52

'"சேனையும் யானும் தேடித் தேவியைத் தருவென்" என்று,
மானவற்கு உரைத்த மாற்றம் மறந்தனன், அருக்கன் மைந்தன்;
"ஆனவன் அமைதி வல்லை அறி" என, அருளின் வந்தேன்;
மேல் நிலை அனையான் செய்கை விளைந்தவா விளம்புக!' என்றான். 53

'சீறுவாய் அல்லை - ஐய! - சிறியவர் தீமை செய்தால்,
ஆறுவாய்; நீ அலால், மற்று ஆர் உளர்? அயர்ந்தான் அல்லன்;
வேறு வேறு உலகம் எங்கும் தூதரை விடுத்து, அவ் வேலை
ஊறுமா நோக்கித் தாழ்த்தான்; உதவி மாறு உதவி உண்டோ ? 54

'ஆயிர கோடி தூதர், அரிக் கணம் அழைக்க, ஆணை
போயினர்; புகுதும் நாளும் புகுந்தது; புகல் புக்கோர்க்குத்
தாயினும் நல்ல நீரே தணிதிரால்; தருமம் அஃதலால்;
தீயன செய்யார் ஆயின், யாவரே செறுநர் ஆவார்? 55

'அடைந்தவர்க்கு அபயம் நீவிர் அருளிய அளவில் செல்வம்
தொடர்ந்து, நும் பணியின் தீர்ந்தால், அதுவும் நும் தொழிலே அன்றோ?
மடந்தைதன் பொருட்டால் வந்த வாள் அமர்க் களத்து மாண்டு
கிடந்திலர் என்னின், பின்னை, நிற்குமோ கேண்மை அம்மா? 56

'செம்மை சேர் உள்ளத்தீர்கள் செய்த பேர் உதவி தீரா;
வெம்மை சேர் பகையும் மாற்றி, அரசு வீற்றிருக்கவிட்டீர்;
உம்மையே இகழ்வர் என்னின், எளிமையாய் ஒழிவது ஒன்றோ?
இம்மையே வறுமை எய்தி, இருமையும் இழப்பர் அன்றே? 57

'ஆண்டு போர் வாலி ஆற்றல் மாற்றியது அம்பு ஒன்று ஆயின்,
வேண்டுமோ, துணையும் நும்பால்? வில்லுனும் மிக்கது உண்டோ ?
தேண்டுவார்த் தேடுகின்றீர், தேவியை; அதனைச் செவ்வே
பூண்டு நின்று உய்த்தற்பாலார், நும் கழல் புகுந்துளோரும்.' 58

என்று அவள் உரைத்த மாற்றம் யாவையும் இனிது கேட்டு,
நன்று உணர் கேள்வியாளன், அருள்வர, நாண் உட்கொண்டான்,
நின்றனன்; நிற்றலோடும், 'நீத்தனன் முனிவு' என்று உன்னி,
வன் துணை வயிரத் திண் தோள் மாருதி மருங்கின் வந்தான் 59

வந்து அடி வணங்கி நின்ற மாருதி வதனம் நோக்கி,
'அந்தம் இல் கேள்வி நீயும் அயர்த்தனை ஆகும் அன்றே,
முந்திய செய்கை?' என்றான், முனிவினும் முளைக்கும் அன்பான்,
'எந்தை கேட்டு அருளுக!' என்ன இயம்பினன், இயம்ப வல்லான்; 60

கம்ப இராமாயணம் 
கிட்கிந்தா காண்டம் 
11. கிட்கிந்தைப் படலம்
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்

கம்பராமாயணம் கிட்கிந்தைப் படலம் - KambaRamayanam 4-11 50

தாய் நினைவு


உள் நுழையும் வழியை மாற்றக்கூடாது என்று அனுமன் தாரையிடம் கூறினான் 41
நீங்கள் எல்லாரும் விலகுங்கள். நானே உள்ளே சென்று சுக்கிரீவனைக் கேட்டுவிடுகினேன் என்றான் இலக்குவன். தாரை தடுத்தாள். மகளிர் பலருடன் சென்றாள் 42
இலக்குவன் உள் நுழைவதைத் தாரை தடுத்தாள் 43
தெரு வழியை மாற்றிக்கொண்டு சென்றாள் 44
வில்லும் வாளும் ஏந்திய மகளிர் தாரையுடன் சென்றனர். 45
அந்தப் படையைப் பார்க்க இலக்குவன் கண்கள் கூசின. 46
தாரை இலக்குவனிடம் கூறலானாள். 47
என் மனைக்கு நீ வந்தது என் பேறு என்றாள். 48
இராமனைப் பிரியாத நீ இங்கு வந்த காரணம் என்ன என வினவினாள். 49
தாரையைப் பார்த்ததும் இலக்குவனுக்குத் தன் தாய் நினைவு வந்துவிட்டது 50

பாடல் 

'அனையன் உள்ளமும் - ஆய்வளையாய்! - அலர்
மனையின் வாயில் வழியினை மாற்றினால்,
நினையும் வீரன் அந் நீள் நெறி நோக்கலன்;
வினையம் ஈது' என்று அனுமன் விளம்பினான். 41

'நீர் எலாம், அயல் நீங்குமின்; நேர்ந்து, யான்,
வீரன் உள்ளம் வினவுவல்' என்றலும்,
பேர நின்றனர், யாவரும்; பேர்கலாத்
தாரை சென்றனள், தாழ் குழலாரொடும். 42

உரைசெய் வானர வீரர் உவந்து உறை
அரசர் வீதி கடந்து, அகன் கோயிலைப்
புரசை யானை அன்னான் புகலோடும், அவ்
விரை செய் வார் குழல் தாரை விலக்கினாள். 43

விலங்கி, மெல் இயல், வெண் நகை, வெள் வளை,
இலங்கு நுண் இடை, ஏந்து இள மென் முலை,
குலம் கொள் தோகை மகளிர் குழாத்தினால்,
வலம் கொள் வீதி நெடு வழி மாற்றினாள். 44

வில்லும், வாளும், அணிதொறும் மின்னிட,
மெல் அரிக் குரல் மேகலை ஆர்த்து எழ,
பல் வகைப் பருவக் கொடி பம்பிட,
வல்லி ஆயம் வலத்தினில் வந்ததே. 45

ஆர்க்கும் நூபுரங்கள் பேரி, அல்குல் ஆம் தடந் தேர் சுற்ற,
வேற் கண் வில் புருவம் போர்ப்ப மெல்லியர் வளைந்தபோது,
பேர்க்க அருஞ் சீற்றம் பேர, முகம் பெயர்ந்து ஒதுங்கிற்று அல்லால்,
பார்க்கவும் அஞ்சினான், அப் பனையினும் உயர்ந்த தோளன் 46

தாமரை வதனம் சாய்த்து, தனு நெடுந் தரையில் ஊன்றி,
மாமியர் குழுவின் வந்தான் ஆம் என, மைந்தன் நிற்ப,
பூமியில் அணங்கு அனார்தம் பொதுவிடைப் புகுந்து, பொன் - தோள்
தூ மன நெடுங் கண் தாரை, நடுங்குவாள், இனைய சொன்னாள்: 47

'அந்தம் இல் காலம் நோற்ற ஆற்றல் உண்டாயின் அன்றி,
இந்திரன் முதலினோரால் எய்தல் ஆம் இயல்பிற்று அன்றே?
மைந்த! நின் பாதம் கொண்டு எம் மனை வரப் பெற்று, வாழ்ந்தேம்;
உய்ந்தனம்; வினையும் தீர்ந்தேம்; உறுதி வேறு இதனின் உண்டோ ? 48

'வெய்தின் நீ வருதல் நோக்கி, வெருவுறும் சேனை, வீர!
செய்திதான் உணர்கிலாது; திருவுளம் தெரித்தி' என்றாள்;
'ஐய! நீ ஆழி வேந்தன் அடி இணை பிரிகலாதாய்;
எய்தியது என்னை?' என்றாள், இசையினும் இனிய சொல்லாள் 49

'ஆர் கொலோ உரை செய்தார்?' என்று அருள் வர, சீற்றம் அஃக,
பார் குலாம் முழு வெண் திங்கள், பகல் வந்த படிவம் போலும்
ஏர் குலாம் முகத்தினாளை, இறை முகம் எடுத்து நோக்கி,
தார் குலாம் அலங்கல் மார்பன், தாயரை நினைந்து நைந்தான் 50

கம்ப இராமாயணம் 
கிட்கிந்தா காண்டம் 
11. கிட்கிந்தைப் படலம்
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்

கம்பராமாயணம் கிட்கிந்தைப் படலம் - KambaRamayanam 4-11 40

இலக்குவன் வாயிலைத் தகர்த்தான்


தாரை சொல்கிறாள் 
முறைமை திறம்பினீர் 
உதவியைச் சிதைத்தீர் 
போர் செய்தால் மாளுவீர் என்றாள் 31

குரங்குகள் சுக்கிரீவன் உறங்கும் அரண்மனை வாயிலைப் போர்ப் பாதுகாப்புக்காக மலைபோன்ற கற்களை அடுக்கி அடைத்தன 32
இலக்குவனை அடிப்பதற்காக மரங்களைப் பிடுங்கி வந்தன 33
இலக்குவன் கற்கதவைக் காலால் உதைத்துத் தகர்த்தான் 34
இலக்குவ தேவன் காலடி பட்டுக் கதவம் தகர்ந்தது 35
குரங்குகள் அஞ்சி ஓடின 36
உடைந்த கதவு சுக்கிரீவன் மேல் விழுந்தது. 37
குரங்குகள் கூக்குரல் எழுப்பின 38
குரங்குகள் அஞ்சி ஓடிவிட அந்தக் காடு விண்மீன் இல்லாத வானம் போலக் காணப்பட்டது 39
என்ன செய்யலாம் என்று இலக்குவனும், அனுமனும் தாரையை வினவினர் 40

பாடல்

'திறம்பினீர் மெய்; சிதைத்தீர் உதவியை;
நிறம் பொலீர்; உங்கள் தீவினை நேர்ந்ததால்,
மறம் செய்வான் உறின், மாளுதிர்; மற்று இனிப்
புறஞ்செய்து ஆவது என்?' என்கின்ற போதின்வாய், 31

கோள் உறுத்தற்கு அரிய குரக்கினம்,
நீள் எழுத் தொடரும் நெடு வாயிலைத்
தாள் உறுத்தி, தட வரை தந்தன
மூளுறுத்தி அடுக்கின, மொய்ம்பினால். 32

சிக்குறக் கடை சேமித்த செய்கைய,
தொக்குறுத்த மரத்த, துவன்றின;
'புக்கு உறுக்கிப் புடைத்தும்' என, புறம்
மிக்கு இறுத்தன; வெற்பும் இறுத்தன. 33

'காக்கவோ கருத்து?' என்று, கதத்தினால்
பூக்க மூரல், புரவலர் புங்கவன்,
தாக்கணங்கு உறை தாமரைத் தாளினால்,
நூக்கினான் அக் கதவினை, நொய்தினின். 34

காவல் மா மதிலும், கதவும், கடி
மேவும் வாயில் அடுக்கிய வெற்பொடும்,
தேவு சேவடி தீண்டலும், தீண்ட அரும்
பாவம் ஆம் என, பற்று அழிந்து இற்றவால். 35

நொய்தின் நோன் கதவும், முது வாயிலும்,
செய்த கல் மதிலும், திசை, யோசனை
ஐ - இரண்டின் அளவு அடி அற்று உக,
வெய்தின் நின்ற குரங்கும், வெருக் கொளா, 36

பரிய மா மதிலும், படர் வாயிலும்,
சரிய வீழ்ந்த; தடித்தின் முடித் தலை
நெரிய, நெஞ்சு பிளக்க, நெடுந் திசை
இரியலுற்றன; இற்றில இன் உயிர். 37

பகரவேயும் அரிது; பரிந்து எழும்
புகர் இல் வானரம் அஞ்சிய பூசலால்,
சிகர மால் வரை சென்று திரிந்துழி
மகர வேலையை ஒத்தது, மா நகர். 38

வானரங்கள் வெருவி, மலை ஒரீஇ,
கான் ஒருங்கு படர, அக் கார் வரை,
மீ நெருங்கிய வானகம், மீன் எலாம்
போன பின், பொலிவு அற்றது போன்றதே. 39

அன்ன காலையில், ஆண் தகை ஆளியும்,
பொன்னின் நல் நகர் வீதியில் புக்கனன்;
சொன்ன தாரையைச் சுற்றினர், நின்றவர்,
'என்ன செய்குவது? எய்தினன்!' என்றனர். 40

கம்ப இராமாயணம் 
கிட்கிந்தா காண்டம் 
11. கிட்கிந்தைப் படலம்
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்

Monday, 24 February 2020

கம்பராமாயணம் கிட்கிந்தைப் படலம் - KambaRamayanam 4-11 30

தாரை அறிவுரை


சூரிய ஒளியில் பனிமலை திகழ்வது போல் சுக்கிரீவன் படுக்கையில் கிடந்தான் 21
அவனை எழுப்ப அங்கதன் பேசினான் 22
இலக்குவன் சீற்றத்துடன் வந்துளான் 
நின் கருத்து யாது - என்றான் 23
சுக்கிரீவன் நினைவற்றுக் கிடந்தான் 24
அங்கதன் அனுமனிடம் சென்றான் 25
அனுமன் தாரையிடம் சென்றான் 26
உதவி செய்ததை மறந்தீர் - என்று தொடங்கித் தாரை கூறலானாள் 27
படையுடன் திரண்டு வருக என்று கூறிய நாள் கடந்தது 
உங்கள் வாழ்நாளும் முடியப்போகிறது 28
வாலியை இழந்தது போதாதா 29
இராமன் மனைவியைத் துறந்து துடிக்கிறான் 
சுக்கிரீவனோ கன்னியர் காதலில் மிதக்கிறான் - என்றாள் 30

பாடல்

மகுட குண்டலம் ஏய் முகமண்டலத்து
உகு நெடுஞ் சுடர்க் கற்றை உலாவலால்,
பகலவன் சுடர் பாய் பனி மால் வரை
தக மலர்ந்து, பொலிந்து தயங்குவான்; 21

கிடந்தனன் - கிடந்தானைக் கிடைத்து இரு
தடங் கை கூப்பினன், தாரை முன் நாள் தந்த
மடங்கல் வீரன், நல் மாற்றம் விளம்புவான்
தொடங்கினான், அவனைத் துயில் நீக்குவான். 22

'எந்தை! கேள்; அவ் இராமற்கு இளையவன்,
சிந்தையுள் நெடுஞ் சீற்றம் திரு முகம்
தந்து அளிப்ப, தடுப்ப அரும் வேகத்தான்
வந்தனன்; உன் மனக் கருத்து யாது?' என்றான். 23

இனைய மாற்றம் இசைத்தனன் என்பது ஓர்
நினைவு இலான், நெடுஞ் செல்வம் நெருக்கவும்,
நனை நறுந் துளி நஞ்சு மயக்கவும்,
தனை உணர்ந்திலன், மெல் அணைத் தங்கினான். 24

ஆதலால், அவ் அரசு இளங் கோள் அரி, -
யாதும் முன் நின்று இயற்றுவது இன்மையால்,
கோது இல் சிந்தை அனுமனைக் கூவுவான்
போதல் மேயினன் - போதகமே அனான். 25

மந்திரத் தனி மாருதிதன்னொடும்,
வெந் திறல் படை வீரர் விராய் வர,
அந்தரத்தின் வந்து, அன்னைதன் கோயிலை,
இந்திரற்கு மகன் மகன் எய்தினான். 26

எய்தி, 'மேல் செயத்தக்கது என்?' என்றலும்,
'செய்திர், செய்தற்கு அரு நெடுந் தீயன;
நொய்தில் அன்னவை நீக்கவும் நோக்குதிர்;
உய்திர் போலும், உதவி கொன்றீர்?' எனா, 27

மீட்டும் ஒன்று விளம்புகின்றாள், '"படை
கூட்டும்" என்று, உமைக் கொற்றவன், "கூறிய
நாள் திறம்பின், உம் நாள் திறம்பும்" எனக்
கேட்டிலீர்; இனிக் காண்டிர்; கிடைத்திரால். 28

'வாலி ஆர் உயிர் காலனும் வாங்க, விற்
கோலி, வாலிய செல்வம் கொடுத்தவர்
போலுமால், உம் புறத்து இருப்பார்! இது
சாலுமால், உங்கள் தன்மையினோர்க்கு எலாம். 29

'தேவி நீங்க, அத் தேவரின் சீரியோன்
ஆவி நீங்கினன்போல் அயர்வான்; அது
பாவியாது, பருகுதிர் போலும், நும்
காவி நாள் மலர்க் கண்ணியர் காதல் நீர். 30

கம்ப இராமாயணம் 
கிட்கிந்தா காண்டம் 
11. கிட்கிந்தைப் படலம்
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்

கம்பராமாயணம் கிட்கிந்தைப் படலம் - KambaRamayanam 4-11 20

சுக்கிரீவன் நிலை


இலக்குவன் நடையால் மேருமலை அழுந்திற்று 11
மராமரத்தைத் துளைத்துக்கொண்டு சென்ற அம்புபோல் விரைந்து சென்றான் 12
திசையானை ஓடுவது போல் சென்றான் 13
கதிரவன் மலையில் இறங்குவது போல் சென்றான் 14
கின்கிந்தையில் சிங்கம் போல் நின்றான் 15
கண்ட குரங்குகள் அங்கதனிடம் ஓடிச் சென்று சண்ட மாருத வேகத்தில் இலக்குவன் சீற்றத்துடன் வருகிறான் என்று கூறின 16
அங்கதன் சுக்கிரீவ-தந்தையிடம் சொல்லச் சென்றான் 17

அப்போது சுக்கிரீவன் இருந்த நிலை 
நளன் கட்டித்தந்த அரண்மனையில் மலர்ப் படுக்கையில் கிடந்தான். 
இள முலைச்சியர் அவன் கால்களை வருடிக்கொண்டிருந்தனர் 18
மலர் மணத்துடன் தென்றல் வீசிக்கொண்டிருந்தது 19
மகளிர் வாய்த்தேன் உண்டு மயங்கிக் கிடந்தான் 20

பாடல்

விண் உறத் தொடர் மேருவின் சீர் வரை
மண் உறப் புக்கு அழுந்தின, மாதிரம்;
கண் உறத் தெரிவுற்றது, கட்செவி -
ஒண் நிறக் கழல் சேவடி ஊன்றலால். 11

வெம்பு கானிடைப் போகின்ற வேகத்தால்,
உம்பர் தோயும் மராமரத்து ஊடு செல்
அம்பின் போன்றனன், அன்று - அடல் வாலிதன்
தம்பிமேல் செலும் மானவன் தம்பியே. 12

மாடு வென்றி ஒர் மாதிர யானையின்
சேடு சென்று செடில், ஒரு திக்கின் மா
நாடுகின்றதும், நண்ணிய கால் பிடித்து
ஓடுகின்றதும், ஒத்துளன் ஆயினான். 13

உருக் கொள் ஒண் கிரி ஒன்றின்நின்று ஒன்றினைப்
பொருக்க எய்தினன், பொன் ஒளிர் மேனியான் -
அருக்கன் மா உதயத்தின் நின்று அத்தம் ஆம்
பருப்பதத்தினை எய்திய பண்புபோல். 14

தன் துணைத் தமையன் தனி வாளியின்
சென்று, சேண் உயர் கிட்கிந்தை சேர்ந்தவன்,
குன்றின்நின்று ஒரு குன்றினில் குப்புறும்
பொன் துளங்கு உளைச் சீயமும் போன்றனன். 15

கண்ட வானரம் காலனைக் கண்ட போல்
மண்டி ஓடின; வாலி மகற்கு, 'அமர்
கொண்ட சீற்றத்து இளையோன் குறுகினான்,
சண்ட வேகத்தினால்' என்று, சாற்றலும், 16

அன்ன தோன்றலும், ஆண் தொழிலான் வரவு
இன்னது என்று அறிவான், மருங்கு எய்தினான்;
மன்னன் மைந்தன் மனக் கருத்து உட் கொளா,
பொன்னின் வார் கழல் தாதை இல் போயினான். 17

நளன் இயற்றிய நாயகக் கோயிலுள்,
தள மலர்த் தகைப் பள்ளியில், தாழ் குழல்
இள முலைச்சியர் ஏந்து அடி தைவர,
விளை துயிற்கு விருந்து விரும்புவான்; 18

சிந்துவாரத், தரு நறை, தேக்கு, அகில்,
சந்தம், மா மயிற் சாயலர் தாழ் குழல்
கந்த மா மலர்க் காடுகள், தாவிய
மந்த மாருதம் வந்து உற, வைகுவான்; 19

தித்தியாநின்ற செங் கிடை வாய்ச்சியர்
முத்த வாள் நகை முள் எயிற்று ஊறு தேன்,
பித்தும், மாலும், பிறவும், பெருக்கலால்,
மத்த வாரணம் என்ன மயங்கினான்; 20

கம்ப இராமாயணம் 
கிட்கிந்தா காண்டம் 
11. கிட்கிந்தைப் படலம்
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்

கம்பராமாயணம் கிட்கிந்தைப் படலம் - KambaRamayanam 4-11 10

சுக்கிரீவன் வரவில்லை


இராமன் தம்பியிடம் கூறுகிறான் 
வரும்படிச் சொன்ன காலம் கடந்துவிட்டது 
சுக்கிரீவன் வரவில்லை
என்ன செய்தான் 1

பெறமுடியாத செல்வத்தை நம்மால் பெற்றான். 
உதவியை நினைக்கவில்லை 
செய்ய வேண்டிய அறநெறியை மறந்தான்
அன்பு கிடக்கட்டும் 
நம் வீரத்தையும் மறந்துவிட்டானே 2

நன்றி கொன்றான் 
நட்பு நாரை அறுத்தான் 
இப்படிப்பட்டவனைக் கொன்று தீர்த்துக்கட்டுதல் குற்றம் ஆகுமா 
நீ சென்று அவன் எண்ணத்தை அறிந்து வா - என்றான் 3

உங்கள் வில்லம்பு இருக்கிறது 
பொறுத்திருங்கள் 
தங்கள் ஆணைப்படிச் சென்று வருகிறேன் - என்றான் இலக்குவன் 4

நஞ்சு போன்றவரை நலித்தல் வஞ்சம் அன்று 
மனுநீதி வழக்கு 5

ஒப்புக்கொண்ட நாளில் வா 
வராவிட்டால் 
உன் ஊரும் சுற்றமும், பேரும் மறைய நீ மாள்வாய் என்று சொல் 6
வராவிட்டால் உன் (இலக்குவன்) வலிமையே போதும் என்று சொல் 7
அவன் என்ன சொல்கிறான் என்று கேட்டுவந்து சொல் - என்றான் இராமன் 8

இலக்குவன் வில்லும் கையுமாய்ச் சென்றான் 9
குறுக்கு வழியில் சென்றான் 10

பாடல்

அன்ன காலம் அகலும் அளவினில்,
முன்னை வீரன், இளவலை, 'மொய்ம்பினோய்!
சொன்ன எல்லையின் ஊங்கினும் தூங்கிய
மன்னன் வந்திலன்; என் செய்தவாறு அரோ? 1

'பெறல் அருந் திருப் பெற்று, உதவிப் பெருந்
திறம் நினைந்திலன்; சீர்மையின் தீர்ந்தனன்;
அறம் மறந்தனன்; அன்பு கிடக்க, நம்
மறம் அறிந்திலன்; வாழ்வின் மயங்கினான். 2

'நன்றி கொன்று, அரு நட்பினை நார் அறுத்து,
ஒன்றும் மெய்ம்மை சிதைத்து, உரை பொய்த்துளார்க்
கொன்று நீக்குதல் குற்றத்தில் தங்குமோ?
சென்று, மற்று அவன் சிந்தையைத் தேர்குவாய். 3

'"வெம்பு கண்டகர் விண் புக வேர் அறுத்து,
இம்பர் நல் அறம் செய்ய எடுத்த விற்
கொம்பும் உண்டு; அருங் கூற்றமும் உண்டு; உங்கள்
அம்பும் உண்டு" என்று சொல்லு, நம் ஆணையே. 4

'நஞ்சம் அன்னவரை நலிந்தால், அது
வஞ்சம் அன்று; மனு வழக்கு ஆதலால்:
அஞ்சில், ஐம்பதில், ஒன்று அறியாதவன்
நெஞ்சில் நின்று நிலாவ, நிறுத்துவாய். 5

'"ஊரும், ஆளும், அரசும், உம் சுற்றமும்,
நீரும், ஆளுதிரே எனின், நேர்ந்த நாள்
வாரும்; வாரலிர், ஆம் எனின், வானரப்
பேரும் மாளும்" எனும் பொருள் பேசுவாய். 6

'"இன்னும் நாடுதும், இங்கு இவர்க்கும் வலி
துன்னினாரை" எனத் துணிந்தார் எனின்,
உன்னை வெல்ல, உலகு ஒரு மூன்றினும்,
நின் அலால் பிறர் இன்மை நிகழ்த்துவாய். 7

'நீதி ஆதி நிகழ்த்தினை, நின்று, அது,
வேதியாத பொழுது, வெகுண்டு, அவண்
சாதியாது, அவர் சொல் தரத் தக்கனை;
போதி ஆதி' என்றான் - புகழ்ப் பூணினான். 8

ஆணை சூடி, அடி தொழுது, ஆண்டு, இறை
பாணியாது, படர் வெரிந் பாழ்படாத்
தூணி பூட்டி, தொடு சிலை தொட்டு, அருஞ்
சேணின் நீங்கினன் - சிந்தையின் நீங்கலான். 9

மாறு நின்ற மரனும், மலைகளும்,
நீறு சென்று நெடு நெறி நீங்கிட,
வேறு சென்றனன் - மேன்மையின் ஓங்கிடும்
ஆறு சென்றிலன் ஆணையின் ஏகுவான். 10

கம்ப இராமாயணம் 
கிட்கிந்தா காண்டம் 
11. கிட்கிந்தைப் படலம்
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்

கம்பராமாயணம் கார்காலப் படலம் - KambaRamayanam 4-10 Link

கம்பராமாயணம் 

கார்காலப் படலம்

தமிழ்நாட்டின் கார்காலத்தையும், கூதிர் காலத்தையும் காட்ட விரும்பிய  கம்பன் இதனைப் பாடுகிறான் 

  • கார்நாற்பது என்னும் அகப்பொருள் பற்றிய படல்களின் தாக்கமாக அமைந்த புறப்பொருள் பாடல்கள் இவை 
  • நெடுநல்வாடை என்னும் நூல் கூதிர்கால நிலையை விரித்துரைக்கும் அகப்பொருள் நூல். அதன் தாக்கமாக, புறப்பொருளாக, இதில் கூதிர்காலப் பருவநிலை காட்டப்படுகிறது.  


10 --- இடி மின்னல்
20 --- மழை பொழிந்தது
30 --- தம்பலப் பூச்சி
40 --- பூ - வண்டு
50 --- இராமன் துயருற்றான்
60 --- மேகமே, மின்னலே
70 --- குளம் நிறைந்தது
80 --- மழைச்சாரல் படுத்திய பாடு
90 --- சீதை நினைவு
100 --- சூழ்ச்சித்துணை கொண்டு வெல்வோம்
110 --- கூதிர்காலம் வந்தது
120 --- கூதிர்ப் பருவ வெளிப்பாடு


கம்ப இராமாயணம் 
கிட்கிந்தா காண்டம் 
10. கார்காலப் படலம்
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்கம்பராமாயணம் கார்காலப் படலம் - KambaRamayanam 4-10 120

கூதிர் பருவ வெளிப்பாடு


மயில் ஆடவில்லை 111
மாதவர் உள்ளம் போல் நீர் தெளிந்தது 
மகளிர் கண் போல் ஆரல் மீன் புரண்டது 112
ஊடும் மகளிர் முகம் போல, முதிர்ந்த தாமரை காணப்பட்டது 
கூடியவர் வாயிதழ் சிவப்பு மாறுவது போல செங்கிடை (நெய்தல்) மலர்கள் தோன்றின 113
கணக்காயர் மாணவர்களுக்குப் பாடம் சொல்வது போல் வண்டுகள் ஒலித்தன 114
கணவனைத் தழுவும் காரிகை போல் நீர் வாய்க்காலில் ஓடி, முத்துகளைச் சிந்திச் சிரித்தது 115
பசலை  பூத்த மகளிர் போல் பாக்கு குலை தள்ளிற்று 116
குளங்களில் முதலைகள் மேய்ந்தன 117
கிளிகள் குதலைமொழி பேசின 118
நந்து இனம் தம் கண்களைக் காட்டாமல் மேய்ந்தன 119
நள்ளி இனம் (குளத்தில் வளர்பவை) நீரை மறைத்துப் படர்ந்தன 120

மிகைப் பாடல்கள்

8 நாகம் 
8 திசையை 
வளைத்து நாக்கு நீட்டுவது போல 
ஊதைக் காற்று வீசிற்று 9-1

பாடல்

தம் சிறை ஒடுக்கின, தழுவும் இன்னல,
நெஞ்சு உறு மம்மரும், நினைப்பும் நீண்டன, -
மஞ்சு உறு நெடு மழை பிரிதலால், மயில் -
அஞ்சின, மிதிலை நாட்டு அன்னம் என்னவே. 111

வஞ்சனை, தீவினை, மறந்த மா தவர்
நெஞ்சு எனத் தெளிந்த நீர் நிரந்து தோன்றுவ;
'பஞ்சு' என, சிவக்கும் மென் பாதப் பேதையர்
அஞ்சனக் கண் எனப் பிறழ்ந்த, ஆடல் மீன். 112

ஊடிய மடந்தையர் வதனம் ஒத்தன,
தாள்தொறு மலர்ந்தன, முதிர்ந்த தாமரை;
கூடினர் துவர் இதழ்க் கோலம் கொண்டன,
சேடு உறு நறு முகை விரிந்த செங்கிடை. 113

கல்வியின் திகழ் கணக்காயர் கம்பலைப்
பல் விதச் சிறார் எனப் பகர்வ பல் அரி,
செல் இடத்து அல்லது ஒன்று உரைத்தல் செய்கலா
நல் அறிவாளரின், அவிந்த, நா எலாம். 114

செறி புனல் பூந் துகில் திரைக் கையால் திரைத்து,
உறு துணைக் கால் மடுத்து ஓடி, ஓத நீர்
எறுழ் வலிக் கணவனை எய்தி, யாறு எலாம்,
முறுவலிக்கின்றன போன்ற, முத்து எலாம். 115

சொல் நிறை கேள்வியின் தொடர்ந்த மாந்தரின்,
இல், நிறப் பசலை உற்று இருந்த மாதரின்,
தன் நிறம் பயப் பய நீங்கி, தள்ள அரும்
பொன் நிறம் பொருந்தின, பூகத் தாறு எலாம். 116

பயின்று உடல் குளிர்ப்பவும் பாணி நீத்து, அவண்
இயன்றன இள வெயில் ஏய்ந்த மெய்யின,
வயின் தொறும், வயின் தொறும், மடித்த வாயின,
துயின்றன, இடங்கர் மா, தடங்கள்தோறுமே. 117

கொஞ்சுறு கிளி நெடுங் குதலை கூடின,
அஞ்சிறை அறுபத அளக ஓதிய,
எஞ்சல் இல் குழையன, இடை நுடங்குவ -
வஞ்சிகள் பொலிந்தன, மகளிர் மானவே. 118

அளித்தன முத்துஇனம் தோற்ப, மான் அனார்
வெளித்து எதிர் விழிக்கவும் வெள்கி, மேன்மையால்
ஒளித்தன ஆம் என, ஒடுங்கு கண்ணன,
குளித்தன, மண்ணிடை - கூனல் தந்து எலாம். 119

மழை படப் பொதுளிய மருதத் தாமரை
தழை படப் பேர் இலைப் புரையில் தங்குவ,
விழைபடு பெடையொடும், மெள்ள, நள்ளிகள்,
புழை அடைத்து ஒடுங்கின, வச்சை, மாக்கள்போல். 120

மிகைப் பாடல்கள்

எண் வகை நாகங்கள், திசைகள் எட்டையும்
நண்ணின நா வளைத்தனைய மின் நக;
கண்ணுதல் மிடறு எனக் கருகி, கார் விசும்பு
உள் நிறை உயிர்ப்பு என, ஊதை ஓடின. 9-1


கம்ப இராமாயணம் 
கிட்கிந்தா காண்டம் 
10. கார்காலப் படலம்
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்

Blog Archive

எழுத்துப் பிழை திருத்திசந்திப் பிழை திருத்தி
தமிழ் வலைப்பதிவு திரட்டி